தமிழ்நாடு

“கல்வித்துறையில் நிகழ்த்தப்பட்ட வெற்றிகரமான முன்னெடுப்பு” : பாலசுப்பிரமணியன் முத்துசாமி பாராட்டு!

இன்று அரசுப் பள்ளியை நாடி வருபவர்கள், அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஏழைகள்தாம். இவர்களில், பெரும்பாலானோர் தலித்துகளும், பிற்படுத்தப்பட்டவர்களுமே. இவர்கள்தாம் தமிழ்நாட்டின் பெரும்பான்மை மாணவர்கள்.

 “கல்வித்துறையில் நிகழ்த்தப்பட்ட வெற்றிகரமான முன்னெடுப்பு” : பாலசுப்பிரமணியன் முத்துசாமி பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தெலங்கானா முதலமைச்சர் அ. ரேவந்த் ரெட்டி அவர்களும் நேற்று (25.9.2025) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்னும் கருப்பொருளில் தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியினை கொண்டாடும் விழாவில், 2025-26ஆம் கல்வி ஆண்டிற்கான “புதுமைப்பெண்” மற்றும் “தமிழ்ப் புதல்வன்” திட்டங்களை தொடங்கி வைத்து, மாணவ, மாணவியர்க்கு வங்கி பற்று அட்டைகளை (Debit Card) வழங்கினார்கள்.

இந்த ஆண்டு, 2.57 இலட்சம் மாணவ, மாணவியர் “புதுமைப் பெண்” மற்றும் “தமிழ்ப் புதல்வன்” திட்டத்தில் பயன்பெறவுள்ளார்கள்.

சமூக நீதியுடனான சமத்துவ சமுதாயத்தை கல்வி, விளையாட்டு, கலைகள் வாயிலாக கட்டமைக்க முடியும் என்பதன் சான்றாக தமிழ்நாடு தன் பாதையில் முன்னேறி மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறது. கல்வி எழுச்சியால் தமிழ்நாடு அடைந்துள்ள உயரத்தைக் கொண்டாடும் விதமாக ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா நேற்று (செப்.25) நடைபெற்றது.

இவ்விழாவில், நடிகர் சிவகார்த்திக்கேயன், இயக்குநர்கள் வெற்றிமாறன், மிஸ்கின், தியாகராஜன் குமாரராஜா, மாரிசெல்வராஜ் மற்றும் ரப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, முன்னாள் நிதியரசர் சந்துரு, கிரிக்கெட் வீரர் கிரிக்கெட் வீரர் நடராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.

இவ்விழாவில் புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தால் பயனடைந்த மாணவ - மாணவியர்கள் பங்கேற்று தங்களின் கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டனர். மாணவர்களின் கருத்துக்கள் அரங்கை நெகிழத்த சம்பவம் அரங்கேறியது. இந்நிலையில் “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்னும் நிகழ்ச்சியை பலரும் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 “கல்வித்துறையில் நிகழ்த்தப்பட்ட வெற்றிகரமான முன்னெடுப்பு” : பாலசுப்பிரமணியன் முத்துசாமி பாராட்டு!

இந்நிலையில் இதுகுறித்து எழுத்தாளர் பாலசுப்பிரமணியன் முத்துசாமி பதிவு பின்வருமாறு :-

கல்வியில் சிறந்த தமிழ்நாடு!

நேற்று தமிழ்நாடு அரசு முன்னின்று நடத்திய, ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்னும் நிகழ்ச்சியைப் பார்க்க மிகவும் நெகிழ்வாக இருந்தது.

அதில் பிரச்சார நெடி இருந்ததாகச் சிலர் சொன்னார்கள். ஆம் இருந்தது. அது இன்றைய தேவையும் கூட.

1980 களுக்குப் பிறகு, தமிழகத்தில் தனியார் பள்ளிகள் பெருகிவிட, தமிழ்நாட்டின் உயர் மத்திய வர்க்கம், அரசுப் பள்ளிகளை விட்டு, தனியார் பள்ளிகளை நோக்கி நகர்ந்து விட்டது.

கடந்த 30 ஆண்டுகளாக அரசுப் பள்ளிக் கல்வி என்பது தமிழ்நாட்டின் கற்ற உயர்குடிகளின் கவனத்தில் இருந்து விலகிப் போனது. அரசின் கவனமும் குறைந்து போனது.

அடிப்படை வசதிகளைத் தாண்டிய மக்கள் அனைவருமே இன்று தனியார் பள்ளிகளில் பயில்வதுதான் கௌரவம் என்னும் நிலைக்குச் சென்று விட்டார்கள்.

இன்று அரசுப் பள்ளியை நாடி வருபவர்கள், அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஏழைகள்தாம். இவர்களில், பெரும்பாலானோர் தலித்துகளும், பிற்படுத்தப்பட்டவர்களுமே. இவர்கள்தாம் தமிழ்நாட்டின் பெரும்பான்மை மாணவர்கள்.

 “கல்வித்துறையில் நிகழ்த்தப்பட்ட வெற்றிகரமான முன்னெடுப்பு” : பாலசுப்பிரமணியன் முத்துசாமி பாராட்டு!

அரசுப் பள்ளிகளுக்குக் கல்வி பயில வரும் மாணவர்களின் வீடுகளில், கல்வி பயில்வதற்கான சூழலும், கல்வி தரும் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான வழிகாட்டுதலும் இருப்பதில்லை. ஆனால், ஆசிரியர்கள், இன்று சமூகப் பொருளாதார அடுக்கில் உயர்தளத்தில் உள்ளவர்கள். எனவே, மாணவர்களின் சமூகச் சிக்கல்களை உள்ளார்ந்து அணுகி, அவர்களுக்கு முழுமையான வழிகாட்டியாக மாறுவதில் பல சிக்கல்கள் உள்ளன.

அரசுப் பள்ளி மாணவர்களை மேலும் பின்னோக்கித் தள்ளியது நீட் போன்ற போட்டித் தேர்வுகள். இதை ஓரளவு சரி செய்தது, முந்தய அதிமுக அரசு, அளித்த மருத்துவக் கல்லூரிகளுக்கான 7.5% ஒதுக்கீடு. இதனால், அரசுப் பள்ளிகளினால் ஆதாயம் உண்டு என நம்பிய ஒரு சிறுபான்மை, தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக ஆசிரியர்கள். இது அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டில் முதல் படி.

கடந்த நான்காண்டுகளில், இன்றைய ஆளுங்கட்சியான திமுக, பல முக்கிய முன்னெடுப்புகளைச் செய்திருக்கிறது.

  1. நான் முதல்வன் திட்டம்: இது அரசுப் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான வழிகாட்டும் திட்டம். இதன் வழியே மாணவர்களின் விருப்பம் மற்றும் திறன்கள் அடிப்படையில் அவர்களின் உயர் கல்விக்கான வழிகாட்டுதல்களை அரசாங்கம் செய்து வருகிறது.

  2. குடிமைப் பணித் தேர்வுகளுக்கான பயிற்சி எடுக்கும் மாணவர்களுக்கு, பயிற்சிக்காலம் வரை, நிதி உதவி அளிக்கப்படுகிறது. இது ஏழை மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் திட்டம்.

  3. அரசுப் பள்ளிகளில், திறன் மிகுந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு முன்மாதிரிப் பள்ளிகளில் (Model School), இந்தியாவின் பெருமை மிகு உயர்கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வுகளை எழுதப் பயிற்சி தரப்படுகிறது. இது முன்பே இருந்த திட்டம் என்றாலும், கடந்த சில ஆண்டுகளில், இது முடுக்கி விடப்பட்டு, கடந்த 4 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 700 மாணவர்கள், தேசிய உயர்கல்வி நிலையங்களில் நுழைந்திருக்கிறார்கள்

  4. 2022 ஆம் ஆண்டு முதல், நாட்டின் பெருமைமிகு கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்.ஐ.டி, எய்ம்ஸ், தேசிய சட்டக் கல்லூரிகள், நிஃப்ட் (NIFT), மற்றும் மாநில அரசு மருத்துவ, பொறியியல் போன்ற கல்வி நிலையங்களில் பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவ மாணவியருக்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் ஒரு திட்டம் இயங்கி வருகிறது.

  5. அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒரு திட்டம் மாநிலம் முழுவதும் கடந்த 4 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.

  6. பள்ளி முடித்து, கல்லூரி செல்லாமல் நின்றுவிடும் மாணவ மாணவியர்களின் பெற்றோரை நேரில் சந்தித்து, கல்லூரியில் சேர்த்துவிடும் பணியை இன்று மாவட்ட ஆட்சியர்கள் முதல் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வரை நேரடியாகக் களத்தில் இறங்கி செய்து வருகிறார்கள்.

  7. டாட்டா குழுமத்துடன் இணைந்து, 3000 கோடி செலவில், மாநிலமெங்கும் உள்ள 70 ஐடிஐ (தொழிற்பயிற்சிக் கூடங்கள்), தொழில்துறை 4.0 என்னும் தரத்துக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது.

  8. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி இலவசமாக வழங்கப்படுகிறது.

  9. வெளிநாட்டுக் கல்லூரிகளில் அனுமதி பெறும் தலித் மாணவர்களுக்கான முழுக் கல்விச் செலவையும் அரசே ஏற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த இரண்டாண்டுகளில் கிட்டத்தட்ட 120 தலித் மாணவர்கள் இதன் வழியே பயனடைந்து, வெளிநாடு சென்றிருக்கிறார்கள்.

இவையனைத்தும் இணைந்து, இன்று தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகள், சாதி, வர்க்க பேதமின்றி மிகவும் சுலபமாகக் கல்வி பயிலும் நிலை உருவாகியுள்ளது.

 “கல்வித்துறையில் நிகழ்த்தப்பட்ட வெற்றிகரமான முன்னெடுப்பு” : பாலசுப்பிரமணியன் முத்துசாமி பாராட்டு!

(இதில் 7.5% இட ஒதுக்கீடு, முதலாம் பட்டதாரிக்கு இலவசக் கல்வி, இலவச பாடநூல்கள், இலவச சீருடை போன்றவை முன்பே இருந்த திட்டங்கள்.)

இவற்றின் ஒட்டு மொத்த விளைவுகள் என்ன?

  1. தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது

  2. புதுமைப் பெண் திட்டத்தினால், அரசுப் பள்ளிகளில் இருந்து கல்லூரி செல்லும் மாணவியர் எண்ணிக்கை 34% உயர்ந்துள்ளது.

  3. காலைச் சிற்றுண்டித் திட்டத்தினால், மாணவர் வருகை மேம்பட்டிருக்கிறது. இதன் மறைமுக விளைவுகள் நீண்ட கால நோக்கில்தான் தெரிய வரும்.

  4. கிட்டத் தட்ட 700 மாணவர்கள் ஐஐடி, என்.ஐ.டி, தேசிய சட்டக் கல்லூரிகள், ஐஐஐடி, நிஃப்ட் போன்ற தேசிய அளவிலான கல்லூரிகளில், நுழைவுத் தேர்வுகளை அகில இந்திய அளவில் எழுதி உள்ளே நுழைந்திருக்கிறார்கள்.

  5. வருடம் 100 பேர் அளவில், தலித் மாணவர்கள் உலகளாவிய பல்கலைக்கழகங்களில், முழு கல்விச் செலவையும் இலவசமாகப் பெற்று படிக்கச் சென்றிருக்கிறார்கள்

இந்த திட்ட முன்னெடுப்புகளைக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு செப்டெம்பர் 25 ஆம் தேதி ஒரு விழாவை முன்னெடுத்திருந்தது. விழாவில், கல்விப் பயனாளிகளுடன், விளையாட்டுத் துறைப் பயனாளிகளும் இணைந்து மேடையில் தோன்றி தாங்கள் பெற்ற பயனை விளக்கிச் சொன்னார்கள்.

மிகவும் ஏழமை நிலையில் இருந்தது, வைராக்கியத்துடன் முன்னேறிய அவர்கள் கதையும், அந்த முன்னேற்றத்தில் அரசின் பங்கையும் அவர்கள் விளக்கிச் சொன்னவிதம் பார்ப்பவர்கள் அனைவரையும் நெகிழ வைத்தது. அரங்கிலிருந்த பெரும்பாலானவர்களின் கண்களில் நீர்.

பதவியேற்ற முதல் நாளில் இருந்து பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்விக்கான தொடர் முயற்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் செயல்பாடுகள், பள்ளிக் கல்வித் துறையின் மீது, வெளிச்சத்தைப் பாய்ச்சி வருகிறது. விளையாட்டுத் துறையில், வெற்றியாளர்களுக்குத் தேவைப்படும் நிதி மற்றும் பயிற்சி உதவிகளை முனைப்போடு செய்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

பள்ளிக் கல்வியுடன் இணைந்து செயல்படும் அமைச்சர் கீதா ஜீவனின் செயல்பாடுகளும் பாராட்டுக்குரியவை.

நேற்றைய நிகழ்வில் பிரச்சாரம் இருந்ததா எனில் இருந்தது. ஆனால், அப்பிரச்சாரம் கடந்த 4 ஆண்டுகளில் கல்வித்துறையில் நிகழ்த்தப்பட்ட வெற்றிகரமான முன்னெடுப்புகளின் அடிப்படையிலான பிரச்சாரம். இதை பத்திரிக்கையாளர் என்.இராம் மிகச்சரியாகக் கவனப்படுத்தியிருந்தார்.

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி இன்னும் மேம்பட வேண்டியிருக்கிறது. சராசரிக் கல்வி வெளிப்பாடுகள் ஒரு முக்கிய பலவீனம். ASER போன்ற கல்வியின் தரம் பற்றிய அறிக்கைகள், தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வியின் தரம் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து வருகின்றன. ஆனால், ASER என்னும் நிறுவனத்தின் புள்ளிவிவர சேகரிப்பு முறைகள் தொடர்பாக விழியன் போன்ற கல்வியாளர்கள் விமரிசனங்களை வைத்துள்ளனர்.

விமரிசனங்களோடு நின்று விடாமல், ஒரு நம்பகமான ஆய்வைச் செய்து, அதைப் பொது வெளியில் முன்வைக்க வேண்டும். அதன் அடிப்படையில், அடுத்த 5 ஆண்டுகளில், நாம் அடைய வேண்டிய இலக்குகளை நிர்ணயித்துச் செயல்படும் திட்டத்தை உருவாக்க வேண்டும். அது நம்மால் முடியக் கூடிய ஒன்றுதான்.

பள்ளிக் கல்வி வெளிப்பாடுகள் மேம்படும் சாத்தியங்கள் உள்ளன என்னும் நம்பிக்கையை தனது முன்னெடுப்புகள் வழியே, திமுக அரசு உருவாக்கியுள்ளது. இதை முன்னின்று நடத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நம் வணக்கத்துக்குரியவர் ஆகிறார்.

banner

Related Stories

Related Stories