முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ்நாட்டின் தொழிற்துறையை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் 2030-க்குள் டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் முதலீடுகளை கொண்டுவர சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்துவந்தார். அண்மையில் கூட ஜெர்மனி , இங்கிலாந்து நாட்டிற்கு முதலமைச்சர் பயணம் மேற்கொண்டார்.
இந்த பயணத்தில் மொத்தம், 15 ஆயிரத்து 516 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மூலமாக, 17 ஆயிரத்து 613 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க கூடிய வகையில், 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. இப்படி தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 1,156 கோடி ரூபாய் முதலீட்டில் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் ஆலையை ரிலையன்ஸ் நிறுவனம் அமைக்கவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள சமூகவலைத்தளப் பதிவில், ரிலையன்ஸ் நிறுவனம் 1,156 கோடி ரூபாய் முதலீட்டில் மாபெரும் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் ஆலையை அமைக்க தமிழ்நாட்டை தேர்வு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள அல்லிகுளம் சிப்காட்டில் 60 ஏக்கரில் மசாலா, சிற்றுண்டி பொருட்கள், பிஸ்கட், சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தயாரிக்கும் ஆலையை ரிலையன்ஸ் நிறுவனம் அமைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய ஆலையால் உள்ளூரைச் சேர்ந்த 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை நோக்கி பல்வேறு தொழில்நிறுவனங்கள் அணிவகுத்து வருவதற்கும், முதலீடுகள் செய்வதற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசே காரணம் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார்.