முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (22.09.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தெரிவு செய்யப்பெற்ற 13 நபர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தை முழுமையாகவும் செம்மையாகவும் செயற்படுத்திடும் வகையில் 1958-ஆம் ஆண்டு ஆட்சி மொழிக்குழு உருவாக்கப்பட்டு, ஓர் ஆய்வுத் தனி அலுவலர் பணியிடம் உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் 1972 இல் இப்பணியிடத்துடன் சேர்த்து ஒன்பது ஆய்வுத் தனியலுவலர் பணியிடங்களாக உருவாக்கப்பட்டன.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ் வளர்ச்சித் துறையின் அலுவலகக் கட்டமைப்பு சீரமைக்கப்பட்டு தமிழாய்வு அலுவலர் என்ற பதவிப் பெயரினை மாற்றி ஒருமுகமாக உதவி இயக்குநர் பணியிடங்கள் என 1998 ஆம் ஆண்டில் மாற்றியமைக்கப்பட்டது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தியதற்கிணங்க, தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நிறைவு செய்திட அரசாணை வெளியிடப்பட்டது.
இளங்கலை மற்றும் முதுகலை தமிழிலக்கியம் பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட 13 நபர்களுக்கு உதவி இயக்குநர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் வழங்கினார்.
தமிழ் இலக்கியக் கல்வி கற்றவர்கள் தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர்களாகப் பணி வாய்ப்புப் பெற்றுள்ளது தமிழுக்கான நற்காலம் மட்டுமல்ல பொற்காலமுமாகும்.