எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கையில் அதிமுக சென்றதையடுத்து பாஜக சொல்படியே அதிமுக செயல்பட்டு வருகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்து பெரும் தோல்வியை சந்தித்த பிறகும், கூட்டணியை விட்டு அதிமுக விலகவில்லை. மேலும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுகவை கடுமையாக விமர்சித்தபோதும் கூட்டணியை விட்டு அதிமுக விலகவில்லை.
மேலும் பெரியார், அண்ணா, ஜெயலலிதா என பலரையும் பாஜக விமர்சித்தபோதும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது பழனிசாமி தலைமையிலான அதிமுக. ஒரு கட்டத்தில் சொரணை வந்த பழனிசாமி, இனி வரும் எந்த தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது என்று கூறிய சில மாதங்களிலேயே 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் கூட்டணி வைத்தது அதிமுக. அப்போது வரலாறு காணாத தோல்வியை அதிமுக சந்தித்த நிலையில், மீண்டும் இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று கூறினார் பழனிசாமி.
எனினும் அவரது பேச்சு தண்ணீரில் எழுதுவதற்கு சமம் என்பதை மீண்டும் நிரூபிக்கும் விதமாக வரும் 2026 சட்டபேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி என அறிவித்தது. இப்படி தொடர்ந்து பாஜகவுக்கு அடிமையாக இருந்து வரும் அதிமுகவுக்கு தமிழ்நாடு மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் கண்டனங்கள் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இதற்கிடையில் ஏற்கனவே அதிமுக பல்வேறு அணிகளாக இருக்கும் நிலையில், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் பழனிசாமிக்கு கெடு வைத்து, அவரை பழனிசாமி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி இப்படியாக பல கூத்துகள் அதிமுகவில் அரங்கேறி வருகிறது.
இந்த சூழலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு டெல்லியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க சென்ற எடப்பாடி பழனிசாமி, பத்திரிகையாளரை சந்திக்காமல் காரில் சென்றபோது, தனது முகத்தை கைக்குட்டையால் மூடியபடி சென்றார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ள நிலையில், தற்போது அதனை வீடியோ எடுத்த பத்திரிகையாளர் நிரஞ்சன் குமாருக்கு அதிமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதிமுகவின் இந்த நோட்டீஸ் ஊடக சுதந்திரத்தை பறிக்கும் செயல் என பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான கண்டன அறிக்கை வருமாறு :-
பத்திரிகையாளர் நிரஞ்சன் குமார் அவர்களை மிரட்டும் வகையில் நோட்டீஸ் அனுப்பியுள்ள அதிமுகவின் நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
டெல்லியில் வசிக்கும் பத்திரிகையாளர் நிரஞ்சன் குமார் பல்வேறு முன்னணி தமிழ் ஊடகங்களில் பணியாற்றியவர். தற்போது “தி கேபிடல்” என்ற டிஜிட்டல் ஊடகத்தை நடத்தி வருகிறார். அத்துடன், பல்வேறு ஊடகங்களுக்கு தலைநகர் டெல்லியில் நடைபெறும் செய்திகளையும் வழங்கிவருகிறார்.
இந்நிலையில், நேற்று (16.09.25) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை டெல்லியில் சந்தித்த நிகழ்வு குறித்து நிரஞ்சன் குமார் செய்தி சேகரிக்கச் சென்றுள்ளார்.
அப்போது, சந்திப்பை முடித்துவிட்டு காரில் வெளியே வந்த எடப்பாடி பழனிச்சாமி முகத்தை கைகுட்டையால் முடியிருந்தது குறித்த செய்தியை வீடியோ ஆதரத்துடன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த செய்தி அனைத்து முன்னணி ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது.
அதிமுக தரப்பில், எடப்பாடி பழனிசாமி அவர்கள் கைகுட்டையால் முகத்தை துடைத்தார் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த விளக்கமும் ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இந்த செய்தியை வெளியிட்டதற்காக அதிமுக சார்பாக நிரஞ்சன் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக, அதிமுக சமூக வலைதளப் பிரிவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தகவல் பகிரப்பட்டுள்ளது. அத்துடன் தலையும் இல்லாத, வாலும் இல்லாத அந்த மொட்டை கடிதமும் அத்துடன் பகிரப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், நிரஞ்சன் குமார் அவர்களுக்கு எதிராக, எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவரை மிகவும் தவறாகவும், கீழ்த்தரமாகவும் விமர்சித்துள்ளனர். மேலும், நிரஞ்சன் குமாரை மிரட்டும் வகையிலும் அமைந்துள்ளது.
அந்த கடிதம், நிரஞ்சன் குமார் மட்டுமில்லாமல் பத்திரிகையாளர்கள் அனைவரையும் அச்சுறுத்தும் வகையிலும், சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கும், விகடன் நிறுவனத்திற்கும் எதிராக கீழ்த்தரமான கருத்தை தெரிவித்த பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்தை வரவேற்கும் வகையிலும் அமைந்துள்ளது.
தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான அதிமுகவிடமிருந்து பத்திரிகையாளர்களைஅச்சுறுத்தும் வகையிலும், கருத்துச் சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் இப்படி ஒரு கருத்து வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
ஆகவே, பத்திரிகையாளர் நிரஞ்சன் குமாருக்கு எதிராக அதிமுக தரப்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ள நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. பொறுப்பான எதிர்கட்சி என்ற அடிப்படையில் அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டிய அதிமுக தன் பொறுப்பை உணர்ந்து நோட்டீசை திரும்பப் பெற வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
பத்திரிகையாளர் நிரஞ்சன் குமார் அவர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் அனைத்து வகையிலும் உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதியளிக்கிறது.