புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட மாலையீடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தெற்கு மாவட்ட திமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு முன்னதாக தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது :
தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய நபர்களை எல்லாம் கொண்டு வந்து ஒரு இடத்தில் அடைத்து அங்கு போக்குவரத்து நெரிசலையும் மக்களுக்கு எந்த அளவுக்கு தொந்தரவு கொடுக்க முடியுமா, அந்தந்த தொந்தரவை தவெக-வினர் செய்திருக்கிறார்கள்.
நாங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் மக்களை சந்திக்கவே முடியாது. மக்களை சந்திக்க துணிச்சலோடு செல்கின்றவர்கள்தான் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள். தேர்தலில் சொன்ன முக்கியமான கோரிக்கைகளை எல்லாம் செய்திருக்கின்றோம். ஒரு சில கோரிக்கைகள் விட்டுப் போயிருக்கிறதே தவிர, மக்களை சந்திக்க அஞ்சுகின்ற அளவிற்கு எந்த கோரிக்கையையும் நாங்கள் நிறைவேற்றாமல் இல்லை. இந்த ஆட்சி மீது மக்கள் மத்தியில் ஆதரவுதான் இருக்கிறதே தவிர, வெறுப்பு கிடையாது. அதனால் மக்களை சந்திப்பதில் எங்களுக்கு எந்தவித அச்சமுமில்லை தயக்கமும் இல்லை.
நம்பிக்கை மோசடி என்பது விஜயின் கூற்று. ஆனால் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது திமுக கூட்டணி தொடர்ந்து 12 தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளதன் மூலமாக தெரிகிறது. மக்களின் நம்பிக்கையை பெற்ற தலைமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை என்பது தேர்தல் வெற்றியின் மூலம் நிரூபணமாகியுள்ளது.
பழுத்த மரத்தில்தான் கல்லடிப்படும். அதனால்தான் அனைவரும் திமுகவை விமர்சிக்கின்றனர். எங்களுக்கு பின்னடைவே கிடையாது; அதிகளவு ஆதரவுதான் இருக்கிறது. எல்லா கண்களும் திமுகவை நோக்கி பார்க்கின்ற பொழுது மக்கள் மத்தியில் திமுக அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறது என்பது தெரிகிறது. அதனால்தான் எதிர்க்கட்சிகள், இப்போது தொடங்கிய கட்சிகள் எல்லாம் திமுக மீது பாய்கிறது, பொய் குற்றச்சாட்டுகளை வைக்கிறது.
பாஜகவோடு மறைமுகமாகவோ நேரடியாகவோ உறவு வைக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது, தேவையும் கிடையாது. நாங்கள் எங்கள் சொந்த காலில் நிற்க முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றோம். பாஜக தயவு திமுகவுக்கு தேவையில்லை.
பள்ளி விடுமுறை காரணமாக அதிகப்படியான பள்ளி மாணவர்கள் விஜயை காண கூடினார்கள். பள்ளிக்கூட மாணவர்களை எல்லாம் அழைத்து வந்து கூட்டத்தை காண்பிக்க வேண்டிய பரிதாப சூழல்தான் விஜய்க்கு இருக்கிறது. சனி, ஞாயிறு அன்றுதான் பள்ளிகளுக்கு விடுமுறை. அதனால்தான் விஜய் அப்போது பிரச்சாரம் மேற்கொள்கிறார். மற்ற நாட்கள் எல்லாம் வேலை நாட்கள். அதனால் வேலை நாட்களில் அவர்களை அழைக்க முடியாது, விடுமுறை தினத்தில்தான் வாங்க சுற்றுலா செல்லலாம் என்று அழைக்க முடியும்.
விஜயின் வருகையால் திமுகவின் வாக்கு வங்கி பாதிக்க எந்த ஒரு வாய்ப்பும் கிடையாது. தவெக விதிமுறைகளை மீறிய விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்.
ஒருவருக்கு ஆபத்து ஏற்பட்டால் எந்த பகுதியாக இருந்தாலும் அவ்வழியாக ஆம்புலன்ஸ் செல்லத்தான் செய்யும். ஆம்புலன்ஸை விட்டு கூட்டத்தை கலைக்க வேண்டிய அவசியம் எல்லாம் திமுகவுக்கு கிடையாது. நாங்கள் பாம்பும் விடமாட்டோம் ஆம்புலன்ஸ் விடமாட்டோம் நாங்கள் நேர்மையாக எதையும் சந்திக்கக்கூடிய துணிச்சல் மிக்கவர்கள் தைரியமிக்கவர்கள்.