முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால், அன்புமிளிர இசைஞானி என அழைத்துப் போற்றப்பட்ட இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், 8,500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
1975-ஆம் ஆண்டு துவங்கிய இசைஞானி இளையராஜா அவர்களின் இசைப் பயணம் இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. திரையிசை மட்டுமின்றி பல்வேறு தனியிசை படைப்புகளையும் வெளியிட்டுள்ளார் இசைஞானி இளையராஜா அவர்கள்.
முழு மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை சிகரத்தையும் தொட்டு சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை படைத்த முதல் தமிழர் மட்டுமல்ல இசைஞானி இளையராஜா முதல் இந்தியரும் ஆவார். ஆசிய நாடுகளைச் சேர்ந்த எவரும் இச்சாதனையை இதுவரை நிகழ்த்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதையடுத்து இளையராஜாவை கவுரவிக்கும் வகையில், பொன் விழா காணும் சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி இன்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் திரையுலகில் பொன் விழா காணும் சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உலக நாயகன் கமல்ஹாசன், எம்.பி., சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
’அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே’ என்ற பாடலை இசைக்குழுவுடன் இணைந்து பாடி அரங்கத்தை மெய் சிலிர்க்க வைத்தார் இசைஞானி இளையராஜா. மேலும், “மொழி தெரியாதவர்களுக்கு இசை தெரியும். அப்படி தற்போது இசைக்கப்பட்டு வரும் பாடல்களின் list, என்னைப்போல மிகப்பெரிய ரசிகர் கொடுத்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த Playlist-ஐ தான் எல்லாரும் கேட்டுகொண்டிருக்கிறீர்கள்.” என கமல்ஹாசன் இசை நிகழ்ச்சிக்கு இடையே பேசினார்.