இந்திய அளவில் செயல்படுத்தப்படும் பல்வேறு சமூக நீதி, சுயமரியாதை திட்டங்களுக்கு அடிப்படையாக தமிழ்நாட்டின் திட்டங்கள் அமைந்துள்ளன.
குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு மற்றும் காலை உணவுத் திட்டம், பெண்களுக்கு உரிமைத் தொகை, பெண்களுக்கான சம சொத்துரிமை என பல சமூக நீதி, சம உரிமை செயல்திட்டங்கள் தமிழ்நாட்டில் தொடங்கிய திட்டங்கள் தான்.
அவ்வகையில், தற்போது பள்ளி மாணவர்களுக்கான ஒரு புதிய முன்னெடுப்பை தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை முன்னெடுத்துள்ளது.
சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் 25 அரசு உதவிப்பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிசெய்ய 25 அரசுப் பேருந்துகள் வசதி அமைத்து தரப்பட்டுள்ளது என்பதுதான் அந்த புதிய முன்னெடுப்பு.
இந்தியாவிலேயே வேறு எந்த மாநில அரசும் முன்னெடுத்திடாத சிறப்புமிகுந்த திட்டமாக, இத்திட்டம் அமைந்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “சட்டமன்ற உறுப்பினராக, 1989-இல் எனது முதல் உரையே மாணவர்களுக்கு இலவச 'பஸ் பாஸ்' வழங்க வேண்டும் என்பதுதான்.
அதனை ஏற்றுக்கொண்டு, முதலமைச்சர் கலைஞர் அவர்கள் செயல்படுத்திய அத்திட்டம் நாட்டுக்கே வழிகாட்டியது.
அதன் தொடர்ச்சியாக, தற்போது மாணவர் மட்டும் சிறப்புப் பேருந்துகளை நமது திராவிட மாடல் ஆட்சியில் இயக்கி வருகிறோம்.
அமைச்சர் சிவசங்கர் அவர்களும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் இத்திட்டத்தின் செயல்பாட்டைத் தொடர்ந்து விழிப்போடு கண்காணித்து, மேலும் மேலும் சிறப்பாகச் செயல்படுத்திட வேண்டும் என வாழ்த்துகிறேன்.”