தமிழ்நாடு

”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

அ.தி.மு.கவை ஆம்புலன்ஸ வண்டியில் போகக்கூடிய நிலையை தமிழ்நாட்டு மக்கள் விரைவில் ஏற்படுத்துவார்கள்.

”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (8.9.2025) சென்னை சைதாப்பேட்டையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 28.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைத்து, பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை:-

நம்முடைய திராவிட மாடல் அரசின் சார்பாக, சுமார் 29.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சைதாப்பேட்டையில் கட்டப்பட்டுள்ள இந்த நவீன அரசு மருத்துவமனையை உங்களுடைய முன்னிலையில் திறந்து வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், பெருமை அடைகின்றேன்.

இந்த வாய்ப்பை அளித்த அமைச்சர் அண்ணன் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு மீண்டும் என்னுடைய பாராட்டுக்களையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

120 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை,இன்று முதல் சைதாப்பேட்டை மக்களுக்கு மட்டுமின்றி, இந்த சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அத்தனை பொதுமக்களுக்கும், மிகவும் பயன்பெறுகின்ற வகையில் இங்கே அமைந்திருக்கின்றது.

நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள், “கல்வியும் – சுகாதாரமும் தான் நம்முடைய திராவிட மாடல் அரசின் இரு கண்கள்” என்று பெருமையோடு குறிப்பிடுவார்கள். அந்த அளவுக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கல்விக்கும், மருத்துவத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் வழங்குகின்ற அரசாக இதை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், அவருடைய ஆட்சி காலத்தில், சுகாதாரத்துறையில் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சி, உயரம் கணக்கில் அடங்காதது.

போலியோ ஒழிப்பில் தொடங்கி, வருமுன் காப்போம் திட்டம் வரை எண்ணற்றத் திட்டங்களை நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் செயல்படுத்திக் காட்டினார்கள்.

அந்தத் திட்டங்கள் தான், நம்முடைய தமிழ்நாட்டை இன்றைக்கு குறிப்பாக, சென்னை மாநகரத்தை இந்தியாவின் மருத்துவ தலைநகரம் (Medical Capital) என்று சொல்லுகின்ற அளவுக்கு பெருமைப்பட வைத்திருக்கின்றன.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழியில் செயல்படும் நம்முடைய முதலமைச்சர் அவர்களும், மருத்துவத்துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி பல்வேறு திட்டங்களைத் செயல்படுத்தி வருகின்றார். சில திட்டங்களை மட்டும் இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்.

ரூ.240 கோடி மதிப்பீட்டில், கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சொன்ன பத்தே மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு, அவர்களால் திறந்து வைக்கப்பட்டு, இன்றைக்கு பொதுமக்கள் மிகுந்த பயன் பெற்று வருகிறார்கள்.

அதுமட்டுமல்ல, மருத்துவ சேவைகள் என்பது அனைத்து பகுதிகளுக்கும் சென்று சேர வேண்டும் என்று 208 Urban Healthcare Wellness Centres-ஐயும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள். கோவிட் காலத்தில், மக்களுக்கு மருத்துவச் சேவைகள் வீடு தேடிச் செல்ல வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.

நம்முடைய அரசு மருத்துவத்துறையில் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பல்வேறு திசைகளில் இருந்து விருதுகளும், பாராட்டுக்களும், அங்கீகாரங்களும் தொடர்ச்சியாக கிடைத்து வருகின்றன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்று சொன்னால், நம்முடைய “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக ஐ.நா.சபையின் UN Task Force Award-ஐ இன்றைக்கு தமிழ்நாடு அரசு பெற்றிருக்கிறது என்றால், அந்தத் துறைக்கு நம்முடைய பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சுகாதாரத்துறையிலும், தமிழ்நாடு இன்றைக்கு இந்தியாவுக்கே வழிகாட்டிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால், அது மிகையாகாது. உடலுறுப்பு தானத்தில், சிறப்பாக செயல்பட்டதற்காக இந்தியாவிலேயே சிறந்த மாநிலத்திற்கான தேசிய விருதும் சமீபத்தில் நம்முடைய தமிழ்நாடு அரசிற்கு வழங்கப்பட்டது.

“இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48” எனும் மகத்தான திட்டத்தில் சாலை விபத்தில் சிக்கிய 4 இலட்சத்துக்கும் அதிகமான பொதுமக்களின் உயிரை நம்முடைய முதலமைச்சர் அவர்களின் அரசு காப்பாற்றி இருக்கிறது.

அதே போல, தமிழ்நாட்டு மக்களின் நலனை பாதுகாக்கும் வகையில், “நலம் காக்கும் ஸ்டாலின்” எனும் திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்தத் திட்டத்தின் கீழ், 1250 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக நடத்தப்பட்ட 185 முகாம்களில், 2 இலட்சத்து 60 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெற்றிருக்கிறார்கள்.

முந்தைய ஆட்சியாளர்களால் கைவிடப்பட்ட “நலம் காப்போம்” திட்டத்தை, நம்முடைய அரசு மீண்டும் செயல்படுத்தியது. கடந்த ஆண்டு மட்டும் இந்த முகாமில் 12 இலட்சம் பேர் பயன்பெற்றிருக்கிறார்கள் என்று சொன்னால், அதுதான் இந்தத் துறையின் சாதனை. ஆகவே, மருத்துவத்துறையில் இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்கும் தமிழ்நாடு தான் நம்பர்-1 என்பதை நிரூபிக்கும் வகையில், தொடர்ந்து திட்டங்களை நம்முடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நம்முடைய திராவிட மாடல் அரசு அமைந்தது முதல் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய அண்ணன் மா.சுப்பிரமணியன் அவர்கள் உட்பட மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இது அரசு நிகழ்ச்சி, நான் அதிகமாக அரசியல் பேச விரும்பவில்லை. அமைச்சர் அண்ணன் மா.சு அவர்கள், பேசும்போது, எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் குற்றச்சாட்டுக்கு எல்லாம் தெளிவாக பதில் கூறினார். உங்களுக்குத் தெரியும், எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தொடர்ந்து சுற்றுப்பயணத்தில் இருக்கின்றார். மக்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றார்.

சமீப காலமாக பத்து நாட்களுக்கு முன்பாக என்ன நடந்தது என்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள். அவர் ஒரு பொதுக் கூட்டத்தில் நடுரோட்டில் நின்று பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கு நோயாளிகளை ஏற்றிக் கொண்டு வந்திருந்த ஆம்புலன்ஸ் வண்டியை நுழையவிடாமல், அதற்கு என்னவெல்லாம் தடைகள் செய்ய முடியுமோ, அதை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். அதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவருக்கு நான் தெரிவித்துக் கொள்வது, நீங்கள் இன்றைக்கு ஆம்புலன்ஸ் வண்டிகளை எல்லாம் நிறுத்துவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால், உங்களுக்கு ஒன்று புரியவில்லை. உங்களுடைய கட்சியே, இயக்கமே விரைவில் ஆம்புலன்ஸ் வண்டியில் செல்லக்கூடிய நிலைமையை தமிழ்நாட்டு மக்கள் ஏற்படுத்துவார்கள். விரைவில் ஐசியூ-வில் தான் உங்களுடைய இயக்கம் அனுமதிக்கப்படும் என்பதைத் தெரிவித்து, உங்களையும் காப்பாற்றுகின்ற இந்த பொறுப்பை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செய்வார்கள் என்று நான் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

இந்த மருத்துவமனையில் பணியாற்றவுள்ள மருத்துவர்கள் – செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய நன்றிகளையும், பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டு, இந்த மருத்துவமனையை பயன்படுத்தி நோயற்ற வாழ்வை அமைத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அத்தனை பேருக்கும், பத்திரிகை நண்பர்கள், உங்கள் மூலமாக கேட்டுக் கொண்டு, இந்த வாய்ப்பை அளித்த அண்ணன் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கும், துறை அதிகாரிகள் அத்தனை பேருக்கும் மீண்டும் என்னுடைய நன்றியை தெரிவித்து, விடைபெறுகின்றேன்.

நன்றி வணக்கம் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories