தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்ட அவர், இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு, பதாகைகளுடன் திரண்ட தமிழர்கள், முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுதுது உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், முதலமைச்சருடன் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், இங்கிலாந்தில் கால் வைத்ததும் தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். லண்டனில் அளிக்கப்பட்ட வரவேற்பு நெகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இங்கிலாந்து பயணத்தில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தொழில்முனைவோரையும், முதலீட்டாளர்களையும் சந்தித்து உரையாட உள்ளார். முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் பங்கேற்கிறார். அப்போது, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
பின்னர், லண்டனில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்துக்கு நாளையதினம் செல்லும் முதலமைச்சர், அங்கு அயலகத் தமிழர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார். அப்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருக்கும் தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்து உரையாற்ற உள்ளார்.