ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் உருவப்படத்தை நமது ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் திறந்து வைப்பதன் மூலம் பெரியார் உலக மயமாகிக் கொண்டுள்ளார் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தந்தை பெரியார்பற்றி – ‘‘மண்டைச் சுரப்பை உலகுதொழும்’’ என்றார் புரட்சிக்கவிஞர்; ஆம், பெரியார் உலக மயமாகிக் கொண்டுள்ளார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் உருவப்படத்தை நமது ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் திறந்து வைக்கிறார் – தேனினும் இனிய நற்செய்தி இது! இப்பொழுது தமிழ்நாட்டில் தந்தை பெரியார் வழி ‘திராவிட மாடல்’ ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியின் சாதனைகளை நாடெங்கும் பரப்புவீர்.
இன்னும் ஓரிரு நாள்களில் செப்டம்பர் பிறக்கிறது!
செப்டம்பர் திங்கள், திராவிட ஞாயிறு நமக்குக் கிடைத்தது ‘புரட்சிக் கீழடி’ அல்லவா?
அய்யா, அண்ணா மற்றும் பல்வேறு புரட்சி மலர்கள் பூத்த பூங்காவை நமக்கு அளித்த மாதம் அல்லவா?
எனவே, இம்மாதம் விழா மாதம்! ஆம், நாம் அனைவரும் நமது கொள்கை எதிரிகளின் சூழ்ச்சிக்குள் விழா(த) – விழ விடாத எழுச்சி மாதம் அல்லவா?
செப்டம்பர் மாதத்தின் சிறப்பு!
‘Come September’ என்று ஒரு சொலவடையே மேற்கு நாடுகளில் உண்டு.
திராவிட வரலாற்று மாதமான செப்டம்பரில் சிறப்புமிகு நிகழ்வுகளைப் புதிய பகுத்தறிவுத் திருவிழாக்களாக்கி, கொள்கைப் புத்தாக்க எழுச்சியுடன் நடத்திட நாம் ஆயத்தமாவோம்!
மூடநம்பிக்கை வழி – கற்பனைக் கதைகளைப் புகுத்தி – தேவர் – அசுரர்; மேல்ஜாதியினர் – கீழ்ஜாதி அடிமையினர், மோட்சம் – நரகம் இவற்றின் முதுகெலும்பைப் பெரியார் என்ற பே(ா)ராயுதமான அறிவாயுதம் உடைத்தது! நமது தலைகளை நிமிர வைத்த இயக்கத் தலைவர்கள் களமாடி, கடமையாற்றி, வெற்றி பெற்ற வீர வரலாற்றை உள்ளடக்கிய கற்பனைகளில்லாத, கண்ணியம் இழக்காத பிரச்சாரங்களை மேற்கொள்வோம். கொள்கை வெற்றிகளை அறுவடைச் செய்து, தன்மானப் பெருஞ்சாதனைகளைப் பறைசாற்றுவோம்.
தந்தை பெரியாரின் உலகப் பயணம்!
நமது இயக்கக் கொள்கைகளைக் கண்டு, எப்படி, எவ்வளவுதான் அவர்கள் இருட்டடித்தாலும், அரசியல் ஆயுதங்களையும், அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தினாலும், நாளும் வளர்ந்து, உலகம் முழுவதும் அத் தத்துவ கர்த்தாவான அறிவுரைஞர் (Mentor) தந்தை பெரியாரின் ‘‘மண்டைச் சுரப்பு’’ (ஆம், அது சுரக்கும் – இறைக்க இறைக்க அது மேலும் சுரந்துகொண்டே இருக்கும்) மக்களின் அறிவுத் தாக்கத்தை, மான ஏக்கத்தை, இலட்சிய நோக்கத்தை, வெற்றிக் களத்தில் குவிக்கும் விளைச்சல்கள் ஆக்கும். ஆண்டுதோறும் பெரியாரின் உலகப் பயணம் விரிவாகி, அவர்தம் தொண்டர்களாகிய நம்மை மட்டுமல்ல, அவரது அரிய ‘மண்டைச் சுரப்பை’ – மதிப்பீடு செய்யும் ஆய்வு அறிஞர் பெருமக்களையும் வியக்கவும், மகிழவும் செய்கிறது!
ஏட்டறிவினால் அவர் ‘பெரியாரானவர்’ அல்லர்!
நாட்டுத் தொண்டினால், எதிர்நீச்சலால், கண்ட வெற்றி வாகையால், அவரின் பட்டறிவும், பகுத்தறிவும், அவரது ‘மண்டைச் சுரப்பை’ நாளும் புகழ் பூத்ததாக்கி வருகிறது!
முதலமைச்சர் அறிவித்த தேனினும் இனிய செய்தி!
நேற்று (29.8.2025) தி.மு.க. சட்டத் துறைத் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினருமான சகோதரர் என்.ஆர்.இளங்கோ இல்லத் திருமணத்தில், தேனினும் இனிக்கும் தெவிட்டாத செய்தியை நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் மக்களுக்குப் பிரகடனப்படுத்தினார்.
‘‘இந்தத் திருமண விழாவில், ஒரு முக்கியமான நிகழ்வை அறிவிக்க விரும்புகிறேன். நம்முடைய தமிழ்ச்சமூகம் சுயமரியாதையுடன் தலைநிமிர்ந்து நடைபோடுவதற்குக் காரணம், தந்தை பெரியார் அவர்கள்!
அதனால்தான், தந்தை பெரியாரைப் பற்றி எழுதிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள்,
“தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்!” என்று எழுதினார்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் சிந்தனையை உலகு தொழும் காட்சியை நாம் இந்தப் பயணத்தில் பார்க்கப்போகிறோம்.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் அய்யா படம்!
உலகின் மிகப்பெரிய அறிஞர்களைத் தந்த, புகழ்மிக்க அறிவுசார் நிறுவனமாகப் போற்றப்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் உருவப்படம் திறக்கப்பட இருக்கிறது! அதை என்னுடைய கரங்களால் திறந்துவைக்க இருக்கிறேன் என்று எண்ணிப்பார்க்கும்போது, நான் இப்போதே மகிழ்ச்சிக் கடலில் மிதந்துகொண்டு இருக்கிறேன்.
தந்தை பெரியார் தமிழ்நாட்டில் பிறந்து, தமிழில் பேசி - எழுதியிருந்தாலும், அவருடைய சிந்தனைகள் இந்த உலகத்திற்கானது; அனைவருக்கும் பொதுவானது!
அவர் வலியுறுத்திய, சுயமரியாதை - பகுத்தறிவு - பெண் விடுதலை - ஏற்றத்தாழ்வு மறுப்பு - தன்னம்பிக்கை - அனைவரும் சமம் ஆகிய கருத்துகளுக்கு எல்லைகள் கிடையாது. இவை உலக மக்கள் அனைவரும் பொதுவான வகையில் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட அறிவுமேதை உலகளவில் அடையாளம் காணப்பட்டு, அங்கீகரிக்கப்படுவது நம்முடைய தமிழ்நாட்டிற்கு பெருமை!’’ என்று குறிப்பிட்டுள்ளது கேட்டு எல்லையற்ற மகிழ்ச்சி! மகிழ்ச்சி!!
தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை 47 ஆண்டுகளுக்குமுன், 21.9.1983 இல் அதே ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழக வளாகத்தில், ஈழ விடுதலை இயக்க முன்னணித் தலைவர் (T.U.L.F கட்சியின் பொதுச்செயலாளர்) தலைமையில் நடத்தியபோது, நானும் கலந்துகொண்டேன். ஆக்ஸ்ஃபோர்டு நகர பெரியார் பற்றாளர்கள், ஆக்ஸ்ஃபோர்டு பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், ஆர்வலர்கள், சேகர் குடும்பத்தினர், பி.பி.சி. சங்கர் (அண்ணா), செல்வநாயகம் போன்றோர் முன்னெடுப்பில் அந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஏறத்தாழ அரை நூற்றாண்டு ஓடிய நிலையில், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்திற்குள் பகுத்தறிவுப் பகலவனின் கதிரொளி பாய்ச்சப்படுகிறது, அதுவும் ‘திராவிட மாடல்’ முதலமைச்சரால்!
படத்திறப்போடு ஆய்வரங்கம் – நூல்கள் வெளியீடு!
ஆய்வரங்க அறிஞர்கள் பங்குபெறும் சிறப்பான முழு நாள் நிகழ்வில் நூறாண்டு காணும் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கக் கொள்கைகள், களங்கள்பற்றி அரிய ஆய்வுரைகள் கொண்ட அருமையான நிகழ்வுகள் – கட்டுரைகள் படித்தல், விவாதித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய கருத்தரங்கமும் நடைபெறவிருக்கின்றது.
அதற்கெல்லாம் மகுடம் சூட்டியதுபோன்றது, அதே விழாவில், சிறந்த ‘பெரியார் ஆய்வறிஞர்களான’ பேராசிரியர் முனைவர் ஆ.இர.வெங்கடாசலபதி, பேராசிரியர் கார்த்திக் ராம் மனோகரன் ஆகியோர் உருவாக்கியுள்ள ‘‘The Cambridge Companion to Periyar’’ என்ற ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு (ஆங்கில) நூலை நமது தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட இருக்கிறார் என்ற செய்தியாகும்.
இதனை Cambridge University Press வெளியிடுகிறது!
இதுபற்றி வெளியாகியுள்ள ஓர் ஆங்கிலக் குறிப்பையும், புத்தக அட்டையையும் பாருங்கள்!
உலக மயமாகிறார் பெரியார்!
‘‘பெரியார் உலக மயமாகிறார் – உலகம் பெரியார் மயமாகிறது’’ என்பதற்கான பெருவெளிச்ச வெடிப்பாகும் இது!
பேராசிரியர்கள் ஆ.இர.வெங்கடாசலபதி அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக பெரியார் வாழ்க்கை வரலாற்றை ஓர் ஆய்வு அறிவு அணிகலனாக,
‘‘ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி அவர்
அணிந்திராத அணியாவார்
அறிந்திராத அறிவாவர்’’ என்று உலகத்திற்கு ஆங்கில மொழிமூலமே தர, (கவனச்சிதறல்கள் – அவருடைய விரிந்த ஆய்வுத் தளத்திற்குத் தவிர்க்க முடியாதவையாக இருந்தாலும்,) மிகுந்த கடும் உழைப்பை – உடல்நலனையும் பொருட்படுத்தாது தந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு அச்சார நூலே இந்த ‘‘The Cambridge Companion to Periyar’’ தொகுப்பு நூலாகும்.
ஆஸ்திரேலியாவில் பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டம் சார்பில் மாநாடு!
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மாநகரில் ‘பெரியார் அம்பேத்கர் சிந்தனை படிப்பு வட்டம்’ சார்பில், வருகிற நவம்பர் 1, 2 ஆகிய நாள்களில் – அமெரிக்கப் பெரியார் பன்னாட்டு அமைப்புடன் இணைந்து மிகச்சிறப்பான வகையில், பன்னாட்டு மாநாடு (International Conference) நடத்த ஆயத்தமாகி, ஏற்பாடுகளைச் செய்வதில் மிகவும் சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறது. ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா நாடுகளிலிருந்தும், அமெரிக்கா, அய்ரோப்பா கண்டத்தின் சில நாடுகளிலிருந்தும் ஏராளமான அறிஞர் பெருமக்கள், பேராளர்கள், தமிழ்நாட்டிலிருந்து பேராளர்கள் சுமார் 30 பேருக்குக் குறையாமல், அம்மாநாட்டில் கலந்துகொள்ள ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன!
நமக்கு ஊடக விளம்பரம் அதிகம் கிடையாது; திட்டமிட்ட இருட்டடிப்பைத் தாண்டித்தான் – என்றும் எதிர்நீச்சல் வீரராக பெரியார் என்ற பேராயுத அறிவுப் போராளி, தனது லட்சியப் பயணத்தில் வெற்றி மைல் கற்களை அடைந்து வருகிறார்.
பெரியார் என்னும் சமூக விஞ்ஞானத் தத்துவம் என்றும் மங்காது; மறையாது; பெருகி வருவது காலத்தின் கட்டாயம்; ஞாலத்தின் விழைவும், வேட்கையும் அல்லவா!
ஆரிய ‘அவதார’க் குடுக்கைகளால் வீழ்த்த முடியாது!
எனவே, கழகத் தோழர்கள் செப்டம்பர் மாதம் முழுவதும், பெரியார் – அண்ணா – கலைஞர் ஆகியோரை ‘‘Mentor’’களாகக் கொண்டு, வழிநடந்து, வெற்றிக்கனிப் பறிக்க ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகளை விரிவாக விளக்கி அடைமழைப் பிரச்சாரம் செய்வீர்!
‘‘மெண்டாரின்’’ (Mentor) பிரச்சாரத்தை சில ஆரிய அவதாரக் குடுக்கைகள் வீழ்த்திவிட முடியாது என்பதற்கு இவை நல்ல பதில் அல்லவா!
செப்டம்பரின் சிறப்போ, சிறப்பு!!