தமிழ்நாடு

வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!

சென்னையின் மழைநீர் வடிகால் கட்டமைப்பை பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு செய்தார்.

வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வடகிழக்குப் பருவமழையின் போது அதிகமழை பொழிவு ஏற்பட்டாலும், சென்னையில் நீர் தேங்காமல் இருப்பதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நீர்வளத்துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள கால்வாய்களில் ஆழப்படுத்துதல், அகலப்படுத்துதல், கான்கிரீட் சுவருடன் கூடிய மூடுகால்வாய்களை அமைத்தல், மழைநீர் கால்வாய்கள் அமைத்தல், கால்வாய்கள் கடலுடன் சேரும் பகுதிகளில் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உயர் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டங்கள் மற்றும் களஆய்வு பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றார்.

இதன் காரணமாக கடந்த ஆண்டுகளில் எதிர்பாராத வகையில் சென்னையில் அதிக அளவு மழைபெய்தபோதும், சில மணி நேரங்களிலேயே வெள்ளநீர் வடிந்து உடனடியாக போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதால் பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டைப் பெற்றது. தற்பொழுது பிற மாநிலங்களில் மேகவெடிப்பு உள்ளிட்ட பெருமழைப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறிப்பாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலுக்கிணங்க தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திரு.வி.க. நகர் மண்டலம், ஓட்டேரி நல்லா கால்வாயில் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாருதல், தடுப்புச்சுவரினை உயர்த்திக் கட்டுதல், சங்கிலி வேலி அமைத்தல் உள்ளிட்ட பணிகளை இன்று (30.8.2025) தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

தொடர்ந்து, திரு.வி.க நகர் மண்டலம், இரயில்வே ஆன்ஸ்லி கால்வாயில் 3.27 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் வியாசர்பாடி, கேப்டன் காட்டன் கால்வாயில் 6.85 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், கொடுங்கையூர் கால்வாயில் 3.75 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் என மொத்தம் 78.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாருதல், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மிதக்கும் பொருட்களை அகற்றும் பணிகளைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

மேலும், நீர்வளத்துறையின் மூலம் 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எண்ணூர் சிற்றோடை பாலம், கொசஸ்தலை ஆற்றில் சாம்பலை அகற்றுதல் மற்றும் தூர்வாரும் பணி, எண்ணூர் சுரங்கப்பாதை பக்கிங்காம் கால்வாயில் 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் தூர்வாரும் பணி, அமுல்லவாயல் பாலம், புழல் உபரிநீர் கால்வாயில் 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி என மொத்தம் 32.90 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான தூர்வாரும் பணிகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுகளின் போது, சீரமைப்புப் பணிகளை வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாக முடிவடையும் வகையில் விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள வேண்டும் எனவும் பணிகளை தொடர்புடைய உயர் அலுவலர்கள் தொடர் ஆய்வு மேற்கொண்டு குறிப்பிட்ட காலத்தில் முடிவடைவதை உறுதி செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு துணை முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

banner

Related Stories

Related Stories