தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வரும் நிலையில், அதற்கு கூடுதலாக மெருகேற்றும் விதமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு ஒரு வார கால அரசுமுறைப் பயணத்தை இன்று (ஆக.30) தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இப்பயணத்தில் முதலீடுகளை ஈர்ப்பது முக்கிய நோக்கமாக இருப்பினும், அது தவிர்த்து சில கருத்தரங்குகளிலும் பங்கேற்க இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
குறிப்பாக, செப்டம்பர் 4ஆம் நாள் இங்கிலாந்தின் Oxford பல்கலைக்கழகத்தில் நடைபெற இருக்கிற சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு கருத்தரங்கில், தந்தை பெரியார் திருவுருவப் படத்தை திறந்து வைக்கிறார்.
இதனால், தமிழ்நாட்டில் புரட்சி கண்ட தந்தை பெரியாரின் கொள்கைகள் உலகளாவிய கவனத்தை ஈர்க்க இருக்கிறது.
இவ்வகையான, பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த பயணம் செப்.7 அன்று நிறைவடைந்து, செப்டம்பர் 8ஆம் நாள் தாயகமான தமிழ்நாட்டிற்கு திரும்புகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இதுவரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.