இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள 50 சதவீத வரி விதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த வரிவிதிப்பால் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 66 சதவீதம் பாதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
அதிலும் குறிப்பாக ஆடை வர்த்தகம் பெரும் பாதிப்பை சந்திக்க உள்ளது. இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியில் 68% பங்களிப்பை திருப்பூர் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் 50% வரி அமலுக்கு வந்துள்ளதால் 3 ஆயிரம் கோடி வரை வர்த்தகம் பாதிக்கும் என ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
மேலும் ஆடை உற்பத்தி மட்டுமல்லாது, அணிகலன்கள், தோல் பொருட்கள், கடல் சார் உணவுகள், வேதிப்பொருட்கள், தானியங்கி ஊர்திகள், இரும்பு, எஃகு உள்ளிட்ட முக்கியத் துறைகள் பெரும் நெருக்கடியைச் சந்திக்கும். இந்த வரி விதிப்பால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 0.4 விழுக்காடு வரை சரியக்கூடும் என உலகளாவிய வர்த்தக ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.
இந்நிலையில், ஜவுளி தொழிலை பாதுகாக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள சமூகவலைதைள பதிவில், ”அமெரிக்காவின் வரி 50% ஆக உயர்த்தப்பட்டிருப்பது தமிழ்நாட்டின் ஏற்றுமதியை கடுமையாகப் பாதித்துள்ளது. குறிப்பாக திருப்பூரில் ஜவுளி ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கிட்டத்தட்ட ரூ.3,000 கோடி வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஜவுளி தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கும் வரிச்சலுகையை ஒன்றிய அரசு அதிகரிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.