2023-24 ஆம் ஆண்டிற்கான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையில், சட்டமன்றத் தொகுதிகளில் விளையாட்டு வீரர்களின் உடற்தகுதி மற்றும் விளையாட்டு வளர்ச்சியினை தூண்டும் வகையில் சிறு விளையாட்டரங்கம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அதற்கு “முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம்” எனப் பெயரிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜி.கே.எம். காலனியில் 0.61 ஏக்கர் பரப்பளவில் 7.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றையதினம் திறந்து வைத்தார்.
இந்த முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம், 25 x 12.5 மீட்டர் வடிவில் உள்விளையாட்டரங்கம். நீச்சல் குளம், இரண்டு இறகுப்பந்து ஆடுகளங்கள் கொண்ட உள்விளையாட்டரங்கம், உடற்பயிற்சி செய்யும் பகுதி, மேலாளர்/பயிற்றுநர் அறை, உடை மாற்றும் அறை, சுற்றுச்சுவர் மற்றும் நுழைவு வாயில் ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் - 2025 (Chief Minister’s Trophy Games - 2025) அனைத்து மாவட்ட மற்றும் மண்டல அளவில் வருகின்ற 25.8.2025 முதல் 12.9.2025 வரை நடத்தப்பட உள்ளன. 2025-ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை அயனாவரம் - முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் தொடங்கி வைத்தார்.
இப்போட்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மாநில அளவில் 37 வகையான விளையாட்டுப் போட்டிகளும் என மொத்தம் 83.37 கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட உள்ளன. இந்த ஆண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள மொத்தம் 16,28,338 வீரர், வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனர்.
தனி நபர் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 1 இலட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். குழு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா 75 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக தலா 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் சிறப்பு மதிப்பெண்கள் மற்றும் சலுகைகள் பெற இயலும்.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கும், 25 வயதிற்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கும், 15 வயது முதல் 35 வரை பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும், தமிழ்நாடு அரசு மற்றும் அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள், தமிழ்நாட்டில் பணிபுரியும் ஒன்றிய அரசு பணியாளர்கள் ஆகியோருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.