முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (25.8.2025) தலைமைச் செயலகத்தில், சென்னை, தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் 5.10 கோடி ரூபாய் செலவில் முழு அளவில் புனரமைக்கப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய படப்பிடிப்புத்தளத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்த தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிறுவனமானது திரைப்படத் தயாரிப்பு, தொழில்நுட்ப கல்வி நுணுக்கங்களையும் கலை உணர்வுகளையும் பயிற்றுவிக்கும் முன்னோடி நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் முக்கியக் குறிக்கோள் பல்வேறு விதமான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்பங்களையும் பிற திரைப்படத் துணைப் பாடங்களையும் மாணவர்களுக்குக் கற்றுத்தருவதாகும்.
இவ்வரசு பொறுப்பேற்றது முதல் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் மேம்பாட்டிற்காக ரூ.1.58 கோடி செலவில் இப்பயிற்சி நிறுவனத்தின் கூட்ட அரங்கம், பழுதடைந்த கட்டடங்கள் மற்றும் மின்கலன்கள் போன்றவை சீரமைக்கப்பட்டுள்ளதோடு, மாணவ, மாணவியர் மற்றும் பணியாளர்கள் அமர்ந்து உணவு அருந்துவதற்காக ரூ.25 இலட்சம் செலவில் உணவு அருந்தும் அறையும் அமைக்கப்பட்டது.
மேலும், இந்நிறுவனத்தின் கல்வித் தரத்தினை உயர்த்திட வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, அக்குழுவின் பரிந்துரையின் பேரில் மாணவர் கல்வி நலன் கருதி பாடத்திட்டங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்களின் நலன் கருதி இறுதித் திட்ட குறும்படப் படப்பிடிப்பு தயாரிப்புச் செலவினம் ஒவ்வொரு குழுவிற்கும் ரூ. 1 இலட்சம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்நிறுவனத்தை மேலும் மேம்படுத்தும் வகையிலும், மாணவர்களின் கல்வி நலன்கருதியும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் ஒப்பனை அறைகள், அலங்கார உடை அறை, உணவு அருந்தும் அறை ஆகியவை இணைந்த சுமார் 17,517 சதுர அடி குளிபடப்பிடிப்புத்தளம், பழைய மாணவர் விடுதி, நீதிமன்றம், சிறைச்சாலை, படப்பிடிப்புத் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய குளிரூட்டக் கருவிகள், இரண்டு புதிய மின்மாற்றிகள் (11 kv HT 500 KVA- Transformers) மற்றும் இதர மின் சீரமைப்புப் பணிகள் உள்ளிட்டவை 5.10 கோடி ரூபாய் செலவில் முழு அளவில் புனரமைக்கப்பட்டு, முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த புனரமைக்கப்பட்ட குளிரூட்ட வசதியுடன் கூடிய படப்பிடித்துத் தளம் திரைப்படத் துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.