தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்படவுள்ள "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" விரிவாக்கம் குறித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஊடகச் செயலாளர் பி.அமுதா இன்று (25.08.2025) பத்திரிகையாளர்களை சந்தித்து அளித்த பேட்டி:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்க உள்ளார்கள். நாளை காலையில், முதலமைச்சர் அவர்கள், சென்னை, மயிலாப்பூர் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் இந்தத் திட்டம் துவக்கப்படவுள்ளது.
நாளை அனைத்து நகரப்புறங்களிலும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கப்பட இருக்கிறது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள் இந்தத் திட்டத்தினை தொடங்கி வைக்க உள்ளார்கள். மொத்தம் 2 ஆயிரத்து 429 பள்ளிகளில், இந்தத் திட்டம் நாளைக்கு தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் 3 இலட்சத்து 6 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற உள்ளார்கள். இது 5வது கட்டம். இதுவரை நான்கு கட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 110 விதியின் கீழ் 07.05.2022 அன்று காலை உணவு திட்டம் குழந்தைகளுக்கு தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்கள்.
செப்டம்பர் 15, 2002 அன்று மதுரை மாவட்டத்திலுள்ள ஆதிமூலம் தொடக்கப்பள்ளியில் Pilot phase முன்னோட்டமாக தொடங்கப்பட்டது. அந்த Pilot phase-ல் 1,545 பள்ளிகளுக்கு இந்த திட்டங்கள் பரிச்சார்த்த முறையில் தொடங்கப்பட்டது.
Pilot phase-ல் நகராட்சிகளில் உள்ள சில பள்ளிகள் – மாநகராட்சிகளில் உள்ள சில பள்ளிகள் – கிராமப்புறங்களில் உள்ள சில பள்ளிகள் – மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகள் இப்படி இவைகள் எல்லாவற்றையும் உள்ளடக்கியது இந்த Pilot phase. ஆகவே, 1,545 பள்ளிகளுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டது என்று கண்டறிந்த பிறகு விரிவாக்கம்-2 எடுத்தோம்.
விரிவாக்கம் 2-ல் (Phase-2), மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில் அரசு தொடக்கப்பள்ளிகளில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 01.03.2023 அன்று அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பள்ளிகளின் எண்ணிக்கை 433 பள்ளிகள் – பயன்பெற்ற 56,160 பள்ளிக்குழந்தைகள் இந்த விரிவாக்கம்-2-ல் பயன்பெற்றிருக்கிறார்கள்.
25.8.2023-ல் மூன்றாவது கட்டம் (Phase-3) செயல்படுத்தப்பட்டது. அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலமாக, கட்டம்-1, கட்டம்-2, கட்டம்-3 என்று இந்த மூன்றை கட்டத்தையும் சேர்த்து மொத்தம் 30 ஆயிரத்து 992 பள்ளிகள் இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்டு 15.32 லட்சம் குழந்தைகள் பயன் பெற்றிருக்கிறார்கள்.
விரிவாக்கம் நான்கில் (Phase-4), கிராமப்புறங்களில், ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில், கடந்த ஆண்டு 15.07.2024 அன்று இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்தத் திட்டத்தில் மட்டும் 3 ஆயிரத்து 995 பள்ளிகள் - 2.21 லட்சம் குழந்தைகள் பயன்பெற்றனர். ஆக மொத்தம் நான்கு கட்டங்களில் இதுவரை 34 ஆயிரத்து 987 பள்ளிகள் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு இதுவரை 17 லட்சத்து 53 ஆயிரத்து 257 குழந்தைகள் பயன் பெற்றுள்ளனர்.
இந்தத் திட்டமானது குறிப்பாக, பொதுமக்களிடமும், குழந்தைகளிடமும், ஆசிரியர்களிடமும், தாய்மார்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது எப்படி எங்களுக்கு தெரிய வந்தது என்றால், இரண்டு studies செய்தோம். அரசுத் துறையான மாநிலத் திட்டக் குழுவின் (State Planning Commission) மூலமாக ஒரு ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல, Department of Evaluation Applied Research என்ற அரசாங்கத் துறையின் மூலமாகவும், ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், ஒரு தனியார் தொண்டு நிறுவனம் (Evedensia) மூலமாக ஆராய்ச்சி செய்யப்பட்டது. இந்தக் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு என்னென்ன வகையில் பயன் பெற்றிருக்கிறார்கள்? அனைத்து பள்ளிக் கூடங்களிலும் 8.30 மணிக்கு குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு விடுகிறது – அதனால், அந்த நேரத்திற்குள் வந்து விடுகிறார்கள். நேரம் தவறாமை (Punctuality), வருகைப் பதிவேடு (Attendance) மேம்படுத்தப்பட்டிருக்கிறது - குழந்தைகள் சுறுசுறுப்பாக வகுப்பில் பதில் சொல்கிறார்கள் – குழந்தைகள் ஆரோக்கியமாக தென்படுகிறார்கள் என்று studies-ல் தெரிய வந்திருக்கிறது. ஆசிரியர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால், குழந்தைகள் மிக கவனமாக வகுப்பை கவனிக்கிறார்கள். அவர்களுடைய Attendance plan உருவாக்கியிருக்கிறது என்று சொல்கிறார்கள்.
அதேபோல, நன்றாக குழந்தைகள் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது – அவர்களுடைய ஆரோக்கியமும் (improve) செம்மைப்படுத்தப்பட்டிருக்கிறது என்று Health parameters-ல் studies சொல்லியிருக்கிறது.
குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்களில் ஆரோக்கியமான சாப்பாடு தரப்படுகிறது – இங்கே என்னென்ன தருகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும் – பொங்கல் வகைகள், கிச்சடி, உப்புமா (அரிசி, ரவை, கோதுமை, சேமியா) இதெல்லாம் சேர்ந்த (ingredients) ஒவ்வொரு நாளைக்கும் ஒரு மெனு போடப்பட்டிருக்கிறது.
அந்த மெனுவின்படி அந்த குழந்தைகளுக்கு காலை உணவு தருகிறோம். அந்த உணவோடு சேர்த்து காய்கறிகளையும் சேர்த்தும் தருகிறோம். ஆதலால், சூடாகவும், காய்கறிகளுடனும் தருவதால் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது – வீட்டிற்கும் சென்று குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள் – முன்பெல்லாம், கிச்சடி, உப்புமா போன்றவை சாப்பிடுவதற்கு அவ்வளவு ஆர்வம் இருக்காது. ஆனால் இப்போது இங்கே நன்றாக சமைத்து தருவதால், ஆரோக்கியமான உணவுகளை கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள் என்று ஆராய்ச்சியில் தெரியவந்திருக்கிறது.
தாய்மார்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், குறிப்பாக வேலைக்கு போகின்ற பெண்கள் - குழந்தைகளுக்கு ஒழுங்காக சமைத்துக் கொடுக்க முடியவில்லை என்ற மனக்குறை இருக்கிறது என்றும், அவசர அவசரமாக சாப்பிட குழந்தைகளுக்கு கையில் இருப்பதை கொடுத்துவிட்டுப் போய்விடுவதாகவும் சொல்கிறார்கள். இப்போது என்ன உணர்கிறார்கள் என்றால், நாங்கள் குழந்தைகளை தயார் செய்து அனுப்பி வைத்தால் போதும் – பள்ளிகளிலேயே காலை உணவு கொடுப்பதால் எங்களுக்கு நேரம் மிச்சமாகிறது என்றும், எங்களுக்கு வேலைப்பளுவும் கொஞ்சம் குறைந்திருப்பதால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றும் தாய்மார்கள் சொல்லி இருக்கிறார்கள்.
மற்றொரு விஷயம் குழந்தைகள் நல்ல பழக்கவழக்கங்களை பழகி இருக்கிறார்கள் - கைகளை கழுவி விட்டு தான் சாப்பிடுகிறார்கள். அனைத்து குழந்தைகளும் வரிசையில் நின்று சோப் போட்டு கை கழுவி விட்டு தான் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். கை கழுவும் பழக்கத்தை இந்தத் திட்டத்தின் மூலமாக நடைமுறைப்படுத்தி இருக்கிறோம்.
நகரப் புறங்களிலும், மாநகராட்சிப் பகுதிகளிலும் இந்த சாப்பாடு (Centralised Kitchen) மைய சமையலறையின் மூலமாக தயாரிக்கப்பட்டு வேன்கள் மூலமாக அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல, ஊரகப் பகுதிகளிலும், பேரூராட்சிகளிலும் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலமாக வழங்கப்படுகிறது. மேலும், அங்கு குழந்தைகளின் அம்மாக்களும் இருக்கிறார்கள். முக்கியமான விஷயம் என்னவென்றால், எந்தக் குழந்தையின் தாய்மார்கள் சமையலறையில் சமைத்து வைத்திருக்கின்றோமோ, அந்தக் குழந்தை பள்ளியில் படிக்கவேண்டும். அப்போதுதான் இன்னும் அக்கறையாகவும், ஆர்வமாகவும் அவர்கள் சமைக்கிறார்கள். ஆராய்ச்சியின்படி, அந்தக் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் அவர்களின் தாய்மார்களுக்கு சமையல் பணியை வழங்கியிருப்பதால், அவர்கள் முழு ஈடுபாட்டுடன் இந்த பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இது நமக்கு ஒரு கூடுதல் பயனளிக்கக்கூடியது.
மேலும், குழந்தைளிடம் கேட்டபோது, வழங்குகின்ற உணவுகள் நன்றாக இருக்கிறதா? திருப்தியாக இருக்கிறதா? அவைகள் போதுமானதாக இருக்கிறதா? என்று கேட்டதற்கு, குழந்தைகள், எங்களுக்கு வயிறு நிறைய அவர்கள் கொடுக்கிறார்கள் - போதுமானதாக இருக்கின்றது என்பதையும் நம்முடைய feedback-ன் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆதலால், குழந்தைகள் சந்தோஷமாக இருக்கிறார்கள் – ஆசிரியர்களும், குழந்தைகள் தினந்தோறும் வகுப்பிற்கு வருகிறார்கள் – வகுப்பிற்கு ஆர்வமாக வருகிறார்கள் – பெற்றோர்களுக்கும் அவர்களுடைய பழு குறைந்திருக்கிறது - நல்லபடியாக குழந்தைகள் சாப்பிடுகிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆதலால் இந்தத் திட்டம் ஒரு நல்ல வரவேற்பை பெற்றிருப்பதால், இந்த ஐந்தாவது கட்டம் நம்முடைய முதலமைச்சர் அவர்களால் நாளை சென்னை, மயிலாப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் திறக்கப்பட உள்ளது. நாளை மட்டும் அனைத்து நகரப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த திட்டம் விரிவாக்கப்படவுள்ளது.
பள்ளிகளின் எண்ணிக்கை 2,429 – 3 இலட்சத்து 6000 குழந்தைகள் பயன்பெற உள்ளார்கள்.