ஆங்கிலேயர் ஆட்சியின்போது மண்டபம் - இராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் இரயில் பாலம் உருவாக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து, 1911-ம் ஆண்டு பழைய பாம்பன் பாலம் கட்டும் பணி தொடங்கி 1914-ம் ஆண்டு முடிவடைந்தது.
கடலுக்கு நடுவே பாலம் கட்டும்போது கப்பல் வழித்தடத்திற்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு கடலின் மேலே இரயிலும், கீழே கப்பலும் செல்லும் வகையில் 'டபுள் லிவர் கேட்லிவர்' முறையில் இந்த பாலம் கட்டப்பட்டது.
இதற்கிடையே, பாம்பன் ரயில் பாலம் 110 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், கடல் அரிப்பின் காரணமாக பாலத்தின் பல இடங்களில் உறுதித்தன்மை குறைந்தது. கப்பல் போக்குவரத்துக்காக பயன்படும் ‘தூக்கு பாலத்தில்‘ அவ்வப்போது பழுதும் ஏற்பட்டது. எனவே, பாதுகாப்பு கருதி இப்பாலத்தில் 2022-ம் ஆண்டு டிசம்பர் 22-ந்தேதியுடன் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பழைய பாம்பன் ரயில் பாலம் அருகே புதிய இரயில் பாலம் கட்ட ஒன்றிய அரசு அனுமதி வழங்கிய நிலையில், பழைய பாலத்துக்கு அருகில் அமைக்கப்பட்ட புதிய பாலத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார். இந்த நிலையில் பழைய பாம்பன் பாலத்தை அகற்ற ரயில்வே நிர்வாகம் டெண்டர் வெளியிட்டுள்ளது.
ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் (ஆர்விஎன்எல்) என்ற ரயில் உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தும் ஒன்றிய அரசின் நிறுவனம் ரூ. 2.53 கோடியில் பழைய பாம்பன் பாலத்தை அகற்ற ஒப்பந்தம் கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனினும் 110 ஆண்டுகள் கடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பாம்பன் ரயில் பாலத்தை, பராமரித்து நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.