தமிழ்நாடு

”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

சிறு, குறு நடுத்தர தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பில் அமைய உள்ள பட்டுக்கூடு விற்பனை நிலைய வளாகத்திற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், "நமது பாரம்பரிய ஆடை பட்டு ஆடை. வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து பட்டு இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்துகிறோம். எனவே நமக்கு தேவையான பட்டுகளை நாமே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், பட்டு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் பட்டுக்கூடு அங்காடி கடந்த 2021-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 388 மெட்ரிக் டன் பட்டுக்கூடுகள் ரூபாய் 16 கோடி 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. சமீபத்தில் இந்த அங்காடிக்கு பட்டுப் புழு வரத்து அதிகரித்துள்ளதால், அவற்றை கையாள்வதற்காக, பட்டு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதற்காக, தற்போது பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2 கோடி 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இன்று புதிய அங்காடி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளின் செலவினை குறைத்து வருமானத்தை உயர்த்திட இயந்திரங்கள், பண்ணை உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு கோடி வெண்பட்டு முட்டைகளை பாதுகாக்க 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓசூரில் குளிர் பதன கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பட்டுக்கூடுகளை பட்டுநூலாக நூற்பு செய்திட, 9 தானியங்கி பட்டு நூற்பாலைகள் அமைத்திட 8 கோடி 52 இலட்சம், 15 பட்டு முறுக்கேற்றும் ஆலைகள் அமைக்க 99 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஆண்டுக்கு 1,836 மெட்ரிக் டன் பட்டு உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு பட்டுவளர்ப்பில் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதால், 2725 மெட்ரிக் டன் ஆக இரு மடங்கு பட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது.

சிறு, குறு நடுத்தர தொழில்கள் வளர்த்திட நிறைய கடன் உதவிகள், வட்டி மானியம் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. அதனை வேலை வாய்ப்பற்றவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பட்டு விவசாயிகள் முறையாக திட்டமிட்டு அதிக கவனம் செலுத்தி இந்த தொழிலை செய்தால் அதிக லாபம் பெறலாம். அதற்கு அனைத்து வகைகளும் தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories