வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சாலையில் பொதுக்கூட்டம் போல பொதுமக்களிடம் பேசினார். அப்போது அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது. அதனை பார்த்து கோபமடைந்த எடப்பாடி பழனிசாமி, "அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதில் நோயாளியாக மருத்துவமனைக்கு செல்வார்" என மிரட்டல் விடுத்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து என்றால் முதலில் விரைந்து வரும் ஆம்புலன்சுக்கு வழிவிடாமல், ஓட்டுநரை மிரட்டியுள்ளது பழனிசாமியின் உண்மையான சுயரூபத்தை காட்டியுள்ளது.
ஆம்புலன்ஸ் வந்தால் வழிவிட வேண்டும் என்பது ஒரு மனிதாபிமானம் ஆகும். ஆனால் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் அதுவும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராக இருந்த ஒருவர், தான் நடத்தும் பொதுக்கூட்டத்தில் நடுவே அவசரமாக வந்த ஆம்புலன்சுக்கு வழிவிடாமல், அதன் ஓட்டுநரை மிரட்டியுள்ளார். இதுதான் பழனிசாமி தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்கும் லட்சணமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் சாலையின் நடுவே பழனிசாமி பொதுக்கூட்டம் நடத்தியதோடு உயிரை காப்பாற்றுவதற்காக சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநரை பகிரங்கமாக மிரட்டியுள்ளார். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியுள்ளார்.