சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ – மாணவியருக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத் தொகையினை வழங்கி, உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது :
“நம்முடைய சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியைச் சேர்ந்த 1,736 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சகோதரர் சிற்றரசு, நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் தயாநிதி மாறன் இருவரும் பேசும்போது, ‘தேர்தலில் நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்துக்குத் தங்களின் ஆதரவைத் தர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்கள். இது தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு நடத்தப்படுகின்ற நிகழ்ச்சி இல்லை. இது வருடந்தோறும் உங்களுக்காக நடக்கின்ற நிகழ்ச்சி. உங்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உங்களின் கல்வி எந்தவிதத்திலும் தடைப்படகூடாது என்பதற்காக நடத்தப்படுகின்ற நிகழ்ச்சி.
நான் தமிழ்நாட்டின் எத்தனையோ மாவட்டங்களுக்குச் சென்றாலும், நம் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணித் தொகுதியில் நடக்கின்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போதுதான், ஒருவன் வீட்டிலிருந்து கிளம்பி, பல இடங்களுக்குப் போய் விட்டுத் திரும்பி சொந்த வீட்டிற்கு வருகின்ற உணர்வு ஏற்படுகிறது. சொந்த உறவினர்களைக் பார்க்கின்ற உணர்வு உங்களைப் பார்க்கும்போது ஏற்படுகிறது.
உங்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுக்கின்ற நிகழ்ச்சி என்பது கூடப்பிறந்த அண்ணன், தன் தம்பி – தங்கைகளின் கல்விக்குத் துணை நிற்கிற ஒரு நிகழ்வாகத்தான் இந்த சிறப்பான நிகழ்ச்சியைப் பார்க்கிறேன்.
பொதுவாகவே, மாணவர்கள் உங்களையெல்லாம் பார்க்கும்போது ஒரு உற்சாகம் வரும். ஏனென்றால், மாணவர்கள் உங்களிடமிருந்துதான், புதிய புதிய கருத்துகள், சிந்தனைகள், வரும். புதிய புதிய கேள்விகளை எழுப்பப் போவது நீங்கள்தான். ஆகவே, சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் சிந்தனையை தூண்டிவிடக்கூடிய ஆற்றல், மாணவர்களான உங்களிடம்தான் இருக்கிறது. தமிழ்நாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல, இந்த நாட்டின் எதிர்காலமே நீங்கள்தான்.
4 வருடங்களுக்கு முன்பு, நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முதல் முறையாக 25 பேருக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் அளவுக்கு கல்வி உதவித்தொகை கொடுத்தோம். அன்றைக்கு 25 பேரில் ஆரம்பித்தோம். இன்றைக்கு 1,736 பேருக்கு 2 கோடியே 15 லட்சம் ரூபாய் அளவுக்கு கல்வி உதவித்தொகை கொடுக்கிறோம்.
இந்த 4 வருடத்தில், இன்றுடன் சேர்த்து, மொத்தம் 3 ஆயிரத்து 734 மாணவர்களுக்கு 4 கோடியே 58 லட்சம் ரூபாய் அளவுக்கு கல்வி உதவித்தொகை கொடுத்து இருக்கிறோம். இந்தியாவிலேயே ஒரு சட்டமன்றத் தொகுதியில் கல்விக்காக தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இப்படி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுக்கிற ஒரே இயக்கம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான். தி.மு.க.வையும் மாணவர்களையும் என்றைக்குமே பிரிக்க முடியாது.
மாணவர்களால் உருவான இயக்கம்தான் நம் திராவிட முன்னேற்றக் கழகம். தமிழ்நாட்டுக்கு எப்போதெல்லாம் பிரச்சினை வருகிறதோ, அப்போதெல்லாம் அதை எதிர்த்து கழகத்துடன் கைகோர்த்து முன்வரிசையில் நின்று போராடியவர்கள் உங்களைப் போன்ற மாணவர்கள்தான். அதனால்தான், கழகம் ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, என்றைக்குமே மாணவர்களுக்கு பக்கபலமாக இருந்து வருவது, நம் திராவிட முன்னேற்றக் கழகம்தான்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில், தமிழ்நாடு முழுவதும் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி ஆரம்பித்தார். அதேபோல் தமிழ்நாடு முழுவதும் 3 கிலோ மீட்டருக்கு ஒரு நடுநிலைப்பள்ளி, 5 கிலோமீட்டருக்கு ஒரு மேல்நிலைப்பள்ளியைத் திறந்து வைத்தார். 50 வருடம் முன்பு, அங்கொன்று, இங்கொன்றுமாகத்தான் கல்லூரிகள் இருந்தன. அதை தமிழ்நாடு முழுவதும் திறந்து வைத்தவர் நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான்.
மருத்துவம் - பொறியியல் படிக்க நுழைவுத்தேர்வு தேவையில்லை என்று சட்டம் போட்டு, அந்த நிலையை உருவாக்கியவரும் கலைஞர் அவர்கள்தான். பெண்களுக்குக் கட்டணமில்லா கல்வி, மாணவர்களுக்குக் கட்டணமில்லா பயணத்துக்கு, பஸ் பாஸ், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்குக் கல்விக்கட்டணம் ரத்து செய்தது, கல்விக்கடனுக்கு வட்டியை தள்ளுபடி செய்ய வைத்தது என கலைஞர் அவர்கள் மாணவர்களுக்காக செய்த சாதனையைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
இன்றைக்கு கலைஞர் வழியில், நம்முடைய முதலமைச்சர் அவர்களும், ‘ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து உங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். மாணவர்களாகிய நீங்கள் படிப்பு, படிப்பு, படிப்பு என்று படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்” என்று அடிக்கடி சொல்வார்கள்.
நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் இருக்கிற முக்கியமான திட்டங்களில் ஒன்று முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம். அதிகமான மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு வர வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட திட்டம் இது.ஒவ்வொரு நாளும் சுமார் 20 லட்சம் மாணவர்கள் இந்தத் திட்டத்தின் வாயிலாக பயன்பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள். வெளி மாநிலங்களும், ஏன் வெளிநாடுகளும்கூட இன்றைக்கு இந்தத் திட்டத்தைப் பின்தொடர ஆரம்பித்து இருக்கிறார்கள்.
புதுமைப்பெண் திட்டம். அரசுப் பள்ளியில் படித்து, எந்தக் கல்லூரிக்கு உயர்கல்விப் படிக்கச் சென்றாலும், மாணவியாக இருந்தால் புதுமைப்பெண், மாணவனாக இருந்தால் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் அவர்களின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்குகிறார் நம் முதலமைச்சர் அவர்கள்.
நீங்கள் மேற்படிப்பில் என்ன படிக்கலாம். படித்தால் மட்டும் பத்தாது. உங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி கொடுக்கக்கூடிய நான் முதல்வன் திட்டம். ”இல்லம் தேடி கல்வி”, ”எண்ணும் எழுத்தும்” இப்படி பல்வேறு திட்டங்களை நம் முதலமைச்சர் அவர்கள் மாணவர்களுக்காக உருவாக்கி இருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல், வகுப்பறைக்கு வெளியிலும் மாணவர்கள் படிக்க வேண்டும் என்று, 250 கோடி ரூபாயில் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை, நம் முதலமைச்சர் திறந்து வைத்து இருக்கிறார்கள்.
அதேபோல, கோவையில் பெரியார் அறிவுசார் மையம் மற்றும் நூலகம் அமைக்கப்பட்டு, அடுத்து, திருச்சியில் காமராஜர் பெயரில் மிகப்பெரிய நூலகம் கட்டப்பட்டு வருகிறது. கழக அரசு மட்டுமல்ல, நம் திராவிட முன்னேற்றக் கழகமும் மாணவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டு வருகிறது.
மாணவர்கள் நிறைய வாசிக்க வேண்டுமென்று, நம் தொகுதியில், தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக கலைஞர் நடமாடும் நூலகத்தைத் திறந்து வைத்தோம். அதே மாதிரி இளைஞர் அணி சார்பில், கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, 234 தொகுதிகளிலும் தொகுதிக்கு ஒரு நூலகத்தைத் திறக்க வேண்டும் என்று தலைவர் அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். அதையும் திறந்து வருகிறோம்.
பத்திரிகையாளர் திட்டம்
இளைஞர் அணி சார்பில், ”கலைஞர் மாணவர் பத்திரிகையாளர் திட்டத்தை’ நம் முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்து இருக்கிறார்கள். அதில், இணைய விருப்பம் உள்ள மாணவர்கள் நீங்கள் அதற்காக விண்ணப்பிக்கலம்.
இதைப்போல கல்விக்கு முக்கியத்துவம் தருகிற முன்னெடுப்புகளால், இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, 75 சதவிகிதம் மாணவர்கள் உயர் கல்வியில் சேர்கிறார்கள்.
இந்த 75 சதவிகிதத்தை 100 சதவிகிதமாக ஆக்க வேண்டும் என்று நம் முதலமைச்சர் அவர்கள் அவரின் பணிகளைச் செய்துகொண்டு இருக்கிறார்கள். அந்த உழைப்பினால்தான், 14 வருடத்துக்கு பிறகு தமிழ்நாடு 11.20 சதவிகித வளர்ச்சியுடன் இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருக்கிறது.
இதை எல்லாம் பார்த்து வயிற்றெரிச்சலில், ஒன்றிய அரசு நம் வீட்டுப் பிள்ளைகளின் கல்வியை முடக்கலாம் என்று பல்வேறு வழிகளில் சூழ்ச்சி செய்துகொண்டு இருக்கிறது. மாணவர்களைக் கல்வியில் இருந்து வெளியேற்றுவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசு செய்துகொண்டு இருக்கிறது.
இந்த சூழ்ச்சிகளை எல்லாம் எதிர்த்து, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில்கூட, மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டு, ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட, நம் முதலமைச்சர் அவர்களின் முயற்சிகளுக்கு மாணவர்கள் நீங்கள் என்றைக்கும் ஆதரவாக நிற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
குறிப்பாக இன்றைக்கு உதவித்தொகை பெற்று இருக்கிற சேப்பாக்கம்-திருவல்லிக்கேணித் தொகுதியைச் சேர்ந்த மாணவச் செல்வங்கள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். உயர் பதவிகளுக்கு வந்து, நீங்கள் நான்கு பேருக்கு வழிகாட்ட வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். அதை நீங்கள் செய்வீர்கள் என்று எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
அதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக மட்டுமல்ல, உங்களின் கூடப் பிறக்காத அண்ணனாகவும் செய்து தருவதற்கு, நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். ஆகவே நன்றாகப் படியுங்கள்.
நீங்கள் விளையாட்டிலும் சிறந்து விளங்குங்கள், விளையாட வேண்டிய நேரத்தில் விளையாடுங்கள். உங்களுக்காக நம் திராவிட முன்னேற்றக் கழகமும் – நம் திராவிட மாடல் அரசும், நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் என்றைக்கும் துணை நிற்பார்கள்.
நான் இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினராக, விளையாட்டுத்துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக இருக்கிறேன் என்றால், அதற்கு முழு முதல் காரணம் இங்கு வந்திருக்கின்ற நீங்கள்தான்.
மாணவர்கள் உங்களின் ஆதரவுடன் 2026 -இல் 7-வது முறையாக கழக ஆட்சி அமையப்போவது உறுதி. ஆகவே, இன்னும் அதிகமான திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மாணவர்களாகிய உங்களுக்குத் தர இருக்கிறார்கள், என்று சொல்லி, மீண்டும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.