திராவிட இயக்க எழுத்தாளரும் தி.மு.கழகத்தின் கலை, இலக்கிய, பகுத்தறிப் பேரவைச் செயலாளருமான திருவாரூர் அர. திருவிடம் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-
தந்தை பெரியாரின் பெருந்தொண்டராக விளங்கிய திருவாரூர் தண்டவாளம் அரங்கராஜ் அவர்களின் புதல்வரும், திராவிட இயக்க எழுத்தாளரும், தி.மு.கழகத்தின் கலை, இலக்கிய, பகுத்தறிப் பேரவைச் செயலாளருமான திருவாரூர் அர.திருவிடம் அவர்கள் மறைந்தார் என்று அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
அர. திருவிடம் அவர்கள் திராவிட இயக்கக் கொள்கைகளை அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்க 1972 ஜூன் முதல் வார இதழாக வெளிவந்த ‘திருவிடம்’ எனும் இதழைத் தொடங்கி நடத்தி வந்தார். திராவிட இயக்க முன்னோடிகளின் படங்களை முகப்பில் ஏந்தி, பல முன்னணி திராவிட அறிஞர்களின் படைப்புகளையும், பகுத்தறிவுப் புதையலான கட்டுரைகளையும் கொண்டு இது வெளியாகி வந்தது.
கலைஞரின் காலடிச் சுவடுகள். கலைஞர் 100: சகாப்தமும் சாமான்யனும், காந்தி – கோட்சே, தி.மு.க. பெற்ற வெற்றிகளும் வீரத்தழும்புகளும், திராவிடப் புதையல், தூக்கு வேண்டாம் துப்பாக்கியால் சுடு என எண்ணற்ற நூல்களைத் தொடர்ந்து எழுதி வந்து அறிவுப் பங்களிப்பினைச் செய்து வந்தவர் அர. திருவிடம் அவர்கள்.
அர. திருவிடம் அவர்கள் எழுதி சீதை பதிப்பகத்தின் வெளியீடாக வந்த திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை எனும் முக்கிய வரலாற்று நூலினை 2019-ஆம் ஆண்டு கழக இளைஞரணிச் செயலாளர் - இன்றைய துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டிருந்தார் என்பதையும் இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.
அர. திருவிடம் அவர்களின் செறிவான பங்களிப்புகளுக்கு அங்கீகாரமாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் சிறப்பு நேர்வாகத் தமிழ் வளர்ச்சித் துறையின் ‘இலக்கிய மாமணி’ விருது இவருக்கு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
குடும்பம் குடும்பமாக, வாழையடி வாழையாக, தலைமுறை தலைமுறையாக இயக்கம் வளர்க்கும் திராவிட இயக்கத்தின் மரபில், தனது தந்தையின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, திராவிடம் பரப்புவதே தனது வாழ்க்கைப் பணி எனத் தனிமனித இயக்கமாகவே செயல்பட்டு வந்த வரலாற்று, கருத்துப் பெட்டகத்தை நாம் இழந்துவிட்டோம். ஆற்றல்மிகு கொள்கைப் பிடிப்பாளரான அர. திருவிடம் அவர்களின் மறைவு தமிழ்ச் சமூகத்துக்கும் திராவிட இயக்கத்துக்கும் மிகப் பெரும் இழப்பு.
அவர் மறைந்தாலும் அவரது படைப்புகளும் பணியும் திராவிட இயக்கத்தின் தொண்டினையும் வீரமிகு வரலாற்றையும் அடுத்த தலைமுறை இளைஞர்களுக்குத் தொடர்ந்து கொண்டு சேர்க்கும்.
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், திராவிட இயக்க அறிஞர் பெருமக்களுக்கும், நண்பர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.