பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் (80) அண்மையில் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று நிலையில், இன்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு :
நாகாலாந்து மாநில ஆளுநரும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான இல.கணேசன் அவர்கள் 80 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து துயரம் அடைந்தேன்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புச் செயலாளர், தலைவர், செயலாளர், பொதுச்செயலாளர், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர், துணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளில் பணியாற்றி கட்சி வளர்ச்சிக்கு பாடுபட்டவர் இல.கணேசன் ஆவார். மாநிலங்களவை உறுப்பினராகவும், மணிப்பூர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றியவர் இல.கணேசன் ஆவார்.
கண்ணியமான அணுகுமுறையும், தமிழிலும், ஆங்கிலத்திலும் அழகாக உரையாற்றும் ஆற்றலும் பெற்றிருந்த இல.கணேசன் அவர்கள் மிசா காலத்தில் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டு கட்சிப் பணிகளில் ஈடுபட்டார். இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமல் பொதுவாழ்க்கையில் சிறப்புடன் பணியாற்றிய பெருமைக்குரியவர் இல.கணேசன் ஆவார்.
அவரது மறைவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இரங்கலையும், அவரது மறைவால் துயரம் அடைந்துள்ள அவரின் உறவினர்கள், இயக்கத் தோழர்கள் ஆகியோர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.