தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (14.8.2025) தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் புதுக்கோட்டை, திருப்பத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 9 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கங்கள்-3, தென்காசி மாவட்டத்தில் 15 கோடி ரூபாய் செலவில் பல்வேறு விளையாட்டு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மாவட்ட விளையாட்டு வளாகம், சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில்
6 கோடியே 38 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 பாரா-விளையாட்டு மைதானங்கள், கோவில்பட்டியில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர்களுக்கான ஹாக்கி விளையாட்டு முதன்மை நிலை மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல். உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. மேலும், மாநிலத்தில் அதிநவீன விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை பெருநிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து நன்கொடை பெற்று ஏற்படுத்திட "தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை"யை உருவாக்கியது. சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திட தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
திறந்து வைக்கப்பட்ட விளையாட்டுத் துறை கட்டடங்களின் விவரங்கள்
2023-24ஆம் ஆண்டிற்கான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையில், சட்டமன்றத் தொகுதிகளில் விளையாட்டு வீரர்களின் உடற்தகுதி மற்றும் விளையாட்டு வளர்ச்சியினை தூண்டும் வகையில் சிறு விளையாட்டரங்கம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அதற்கு “முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம்” எனப் பெயரிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில், திருவரங்குளம் கிராமத்தில் 6.42 ஏக்கர் பரப்பளவில், 400 மீட்டர் தடகள பாதை (மண்), கால்பந்து மைதானம், கையுந்துபந்து ஆடுகளம், நீளம் தாண்டுதல் பகுதி, பார்வையாளர்களுக்கான இருக்கைகளுடன் கூடிய அரங்கம், உடற்பயிற்சி கூடம், உடை மாற்றும் அறை, நிர்வாக அலுவலகக் கட்டடம், கழிப்பறைகள், சுற்றுச்சுவர் மற்றும் நுழைவு வாயில் ஆகிய வசதிகளுடன் 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம்;
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில், நிம்மியம்பட்டு கிராமத்தில் 6.00 ஏக்கர் பரப்பளவில் 400 மீட்டர் தடகள பாதை (மண்), கால்பந்து மைதானம், கையுந்துபந்து ஆடுகளம், கூடைப்பந்து ஆடுகளம், கபாடி ஆடுகளம், கோ-கோ ஆடுகளம், நீளம் தாண்டுதல் பகுதி, தடைகள் தாண்டும் ஓடுதளப்பாதை, பார்வையாளர்களுக்கான இருக்கைகளுடன் கூடிய அரங்கம், உடற்பயிற்சிக்கூடம், நிர்வாக அலுவலகக் கட்டடம், கழிப்பறைகள், சுற்றுச்சுவர் மற்றும் நுழைவு வாயில் ஆகிய வசதிகளுடன் 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம்;
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில், சிவன்மலை கிராமத்தில் 6.56 ஏக்கர் பரப்பளவில் இறகுப்பந்து உள்விளையாட்டரங்கம், கையுந்துபந்து ஆடுகளம், கூடைப்பந்து ஆடுகளம், கபாடி ஆடுகளம், உடற்பயிற்சிக்கூடம் மற்றும் நுழைவு வாயில் ஆகிய வசதிகளுடன் 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம்;
தென்காசி மாவட்டம், பட்டக்குறிச்சி கிராமத்தில் 20.46 ஏக்கர் பரப்பளவில் 400 மீட்டர் தடகள ஓடுபாதை (மண்) மற்றும் நீளம் தாண்டுதல், கையுந்துபந்து உள்விளையாட்டரங்கம், கபாடி ஆடுகளம் கொண்ட உள்விளையாட்டரங்கம், கூடைப்பந்து ஆடுகளம், கால்பந்து மைதானம், நவீன உடற்பயிற்சி கூடம், நிர்வாக அலுவலகக் கட்டடம், உணவகம், உடைமாற்றும் அறை, கழிவறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 15 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட விளையாட்டு வளாகம்;
சென்னை - நேரு பூங்கா விளையாட்டு வளாகத்திலும் மற்றும் திருச்சி, மதுரை, கடலூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு வளாகங்களில் பாரா விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், பாரா-விளையாட்டு அரங்கம், அரைவட்ட திறந்தவெளி மேற்கூரை கொண்ட பாரா இறகுப்பந்து, உட்கார்ந்து விளையாடும் பாரா கையுந்துபந்து, பாரா டேபிள் டென்னிஸ், பாரா போச்சியா (Boccia), பாரா டேக்வொண்டோ, பாரா ஜுடோ ஆடுகளம், பாரா கோல்பால் (Goal ball) ஆகிய விளையாட்டுகளுக்கான பன்னோக்கு உள்விளையாட்டரங்கம், பாரா பளுதூக்குதல் அடங்கிய உடற்பயிற்சிக்கூடம், சக்கர நாற்காலிகளுடன் அணுகும் வகையிலான சாய்வுதளம் கொண்ட ஆண், பெண் இருபாலருக்கான கழிப்பறைகள் ஆகிய வசதிகளுடன் 6 கோடியே 38 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 பாரா விளையாட்டு மைதானங்கள்;
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், ஹாக்கி விளையாட்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், நவீன பயிற்சி வசதிகளை உருவாக்கிடவும், 60 மாணவர்களுக்கான தங்கும் வசதியுடன் கூடிய அறைகள், உணவு உண்ணும் அறை, சமையலறை, இருப்பு அறை, தொலைக்காட்சி கூடம், பார்வையாளர் ஓய்வறை, காப்பாளர் அறை, அலுவலக அறை, விளையாட்டு உபகரணங்கள் வைப்பதற்கான இருப்பு அறை, படிப்பதற்கான அறை மற்றும் பொழுதுபோக்கு அறை, ஆகிய வசதிகளுடன் தரை மற்றும் முதல் தளம் கொண்ட 20,369 சதுர அடி கட்டட பரப்பளவில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர்களுக்கான ஹாக்கி விளையாட்டு முதன்மை நிலை மையம்; என மொத்தம் 37 கோடியே 38 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கங்கள்,
5 பாரா-விளையாட்டு மைதானங்கள், தென்காசி மாவட்ட விளையாட்டு வளாகம் மற்றும் மாணவர்களுக்கான ஹாக்கி விளையாட்டு முதன்மை நிலை மையம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.