தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும்
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னை, தண்டையார்பேட்டை பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (12.8.2025) தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராயப்பேட்டை பாலாஜி நகர் பகுதியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் குடிமைப் பொருட்களை வழங்கும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்து, வயது முதிர்ந்த பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று குடிமைப் பொருட்களை இன்று வழங்கி, அவர்களுடன் உரையாடினார்.
சிறப்பு கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும், இத்திட்டத்தின் கீழ் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் செயல்பட்டு வரும் 36 நியாய விலைக் கடைகளுக்குட்பட்ட 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளைக் கொண்ட 2,467 குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள 3,548 குடும்ப உறுப்பினர்களின் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மூடிய வாகனங்களில் மின்னணு எடைத்தராசு, e POS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாக தகுதியுள்ள பயனாளிகளின் இல்லத்திற்கே சென்று நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் விநியோகம் செய்ய உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் தேனாம்பேட்டை மண்டலக் குழுத்தலைவர் எஸ்.மதன்மோகன், மாநகராட்சி ஆளுங்கட்சி துணைத் தலைவர் ஏ.ஆர்.பி.எம்.காமராஜ், மாமன்ற உறுப்பினர் திருமதி. வே.கமலா செழியன், சென்னை தெற்கு பொதுவிநியோகத் திட்ட இணைப் பதிவாளர் திருமதி எஸ்.லட்சுமி உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.