முரசொலி தலையங்கம் (11-08-2025)
பள்ளிக் கல்விக் கொள்கை!
“ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர் கல்வி”என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னதுதான் பள்ளிக் கல்விக் கொள்கையின் உன்னதமான நோக்கம் ஆகும்.
தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை -2025 என்பதில் பள்ளிக் கல்விக் கொள்கையை மட்டும் முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். கல்வியை ஒருசிலருக்கானதாக மாற்ற முயற்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் பாசிச தேசியக் கொள்கைக்கு மாற்றாக சமூகநீதி –சமநீதி - தமிழ்ப் பண்பாட்டை உள்ளடக்கிய கல்விக் கொள்கையாக பள்ளிக் கல்விக் கொள்கை அமைந்துள்ளது. சமஸ்கிருதப் பண்பாட்டை உருவாக்குவதாக தேசியக் கல்விக் கொள்கை இருக்க, தமிழ்ப் பண்பாட்டு அடித்தளத்தில் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் கல்விக் கொள்கை அமைந்துள்ளது.
சமஸ்கிருதத்தை புகுத்துவது, இந்தியைத் திணிப்பது, பள்ளிகளுக்குள் வந்தவர்கள் 3, 5, 8, 10, 11, 12 ஆகிய வரிசையாகப் பொதுத்தேர்வுகளை வைத்து வடிகட்டி வெளியில் அனுப்புவது, ‘எனக்கு படிப்பு வரவில்லை’ என்ற சூழலை உருவாக்குவது, பரம்பர்யக் கல்வி என்ற பெயரால் மாணவர்களை பகுத்தறிவாளர்களாக மாற்றுவது, குலக்கல்வியை குருகுலக் கல்வியாகப் புகுத்துவது என தேசியக் கல்விக் கொள்கையில் எத்தனையோ படுகுழிகள் வெட்டப்பட்டுள்ளன. அதனால்தான் தமிழ்நாடு அரசு, தேசியக் கல்விக் கொள்கையைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
மாற்றாக மாநிலக் கல்விக் கொள்கையை வகுக்க நிபுணர் குழுவையும் அமைத்தது. அதில் பள்ளிக் கல்விக்கான கொள்கை அறிக்கை மட்டுமே இப்போது வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டின் தனித்துவமான பண்பாடு, மொழி, சமூகமரபு ஆகியவற்றை உள்ளடக்கி முற்போக்குத் தன்மையுடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குழந்தைகளுக்கான பார்வையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்களுக்குள் பலதரப்பட்டவர்கள் வருகிறார்கள். அவர்களது ஏற்றத்தாழ்வுகளைப் பூர்த்தி செய்வதாகவும் அமைந்துள்ளது. கற்பித்தல் மட்டுமல்ல, கற்பிக்கத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்குகிறது. உள்கட்டமைப்பு வசதிகள், விடுதிகள், உதவித் தொகைகள் ஆகியவற்ரை வழங்குகிறது.
மூன்றாம் வகுப்பு முடிவதற்குள் ஒவ்வொரு குழந்தையும் வாசித்தல், கணிதத் திறனை அடைவது உறுதி செய்யப்படும். மனப்பாடம் செய்வதைக் குறைத்து புரிந்து கற்றலை உருவாக்க நினைக்கிறார்கள். மாணவர்களை வினாக்கள் கேட்கவும், கண்டறியவும், புதுமையாகச் சிந்திக்கவும் ஊக்குவிப்பதோடு, பாடங்கள் தமிழ்நாட்டின் வளமான இலக்கிய மரபு, சமூக இயக்கங்கள் மற்றும் சுற்றுச் சூழல்தொடர் முன்னேற்றப் பார்வையைப் பாராட்டும் வகையில் அமையவுள்ளன. இந்த உள்ளூர் அறிவு மற்றும் உலகளாவிய நிகழ்விற்கு உட்படுத்துதல், குழந்தைகள் உலகினையும் அதன் தனித்துவமாக நிலையையும் ஆழமான மனித , விழுமிய மற்றும் உள்ளடக்கங்களின் பார்வையுடன் புரிந்துகொள்ள அவர்களை நிலை நிறுத்துகிறது.
பள்ளிக்கல்விச் செயல்பாடுகளில் ரோபோடிக்ஸ், தரவு அறிவு மற்றும் நிதித் திட்டமிடுதல் ஆகியவற்றை இணைக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தினை வகுப்பறைக்குள் கொண்டு செல்கிறார்கள். 11 வயதுடைய சிறு குழந்தைகள் இயந்திர மனிதனை வடிவமைத்தல், குறியீடுகளை எழுதுதல், செயற்கை நுண்ணறிவு எவ்வாறு வடிவமைக்கப்படுகிறது புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும். ஸ்மார்ட் ஆய்வகங்கள், பயிற்சி பெற்ற வழிகாட்டிகள் மற்றும் மின்னிய கருவிப் பெட்டகங்களின் உதவியுடன் அரசுப் பள்ளிகளை மின்னிய புத்தாக்கம் பொருளாதார அதிகாரம் பெறுதல் ஆகியவற்றை அடையும் சக்தியாக TN - SPARK அமைகிறது.
கலை விழாக்கள், கலை, இசை, நாடகம் மற்றும் நடனம் ஆகியவற்றில் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்துவதாக கலை விழாக்கள் பள்ளிக் கல்வியோடு இணைக்கப்பட உள்ளன. உடலல்வி என்பது ஒருமணிநேர வகுப்பாக இல்லாமல், கல்வியோடு இணைக்கப்பட்டதாக இருக்கும்.
மாணவர்களை தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாற்ற உறுதி செய்கிறது இந்தக் கல்விக் கொள்கை. தமிழ்ப் பெருமைகள் கற்பிக்கப்பட உள்ளன. தமிழும் ஆங்கிலமும் என்ற இருமொழிக் கொள்கையை உறுதி செய்துள்ளது அரசு.
எவர் ஒருவரும் கல்விச் சாலைக்குள் புறக்கணிக்கப்படக் கூடாது என்பது இக்கல்விக் கொள்கையின் நோக்கமாக உள்ளது. அனைவருக்கும்மான வகுப்பறைகள், அனைவரும் பங்கேற்கும் வகுப்புகள் இதன் நோக்கமாக உள்ளன. ஒவ்வொரு மாணவனையும் கவனிப்பது, ஒவ்வொரு தேவையையும் ஆதரிப்பது, ஒவ்வொரு குரலையும் மதிப்பது இந்தக் கல்விக் கொள்கையின் மைய நோக்கம். இது சமத்துவம் சார்ந்த, உள்ளடக்கிய பள்ளிக் கல்விக்கான தமிழகத்தின் முன்னோடியான முயற்சியாக அமைந்துள்ளது.
பள்ளிகளை வெறும் கல்விக் கட்டிடங்களாக மட்டும் அல்லாமல், பசுமைசார்ந்த (பச்சை), ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் மாணவர் நட்புச் சூழலுடன் கூடிய (மாணவர் நட்பு) கற்றல் வளங்களாக்க மாற்றத்தைக் குறிக்கோளாக்கக் கொண்டது. மழைசேகரிப்பு அமைப்புகள், மின்னணு ஆய்வுகள், பாதுகப்பான கழிப்பறைகள், உடல்வி வளங்கள் ஆகியவற்ரை ஏற்கின்றன. இந்த உள்கட்டமைப்பு மேம்பாடுகள், மாணவர்களின் நலனையும் கற்றல் அனுபவத்தையும் முன்னிறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
•மொழி என்று எடுத்துக் கொண்டால் இருமொழித் திறனுடன் வாழ்க்கைக்குப் பயன்படும் மொழி அறிவைக் கொள்கை உறுதி செய்கிறது.
•பாடத் திட்டம் என்று பார்த்தால் இன்றைய வளர்ச்சிக் கல்வியான AI, காலநிலை அறிவியல்முதல், வாழ்க்கைக்குத் தேவையான தனித்திறமைகள் வரை அனைத்தையும் உறுதி செய்கிறது.
•தேர்வு முறையானது மனப்பாடக் கல்வியைத் தாண்டிய திறன் மேம்பாட்டுக் கனிப்பாக அமைந்துள்ளது.
•மொத்தத்தில் அனைவருக்கும் சமத்துவக் கல்வியாக இருக்கிறது.
பள்ளிக் கல்விக்காக ஆண்டுதோறும் ஒதுக்கும் தொகை ரூ.45 ஆயிரம் கோடியைத் தாண்டி உள்ளது. இது இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத நிதி ஒதுக்கீடு ஆகும். உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பேராசிரியர் அன்பழகன் பெயரால் வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டு ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வகுப்பறைகள், கழிவறைகள், சுற்றுச்சுவர், குடிநீர், மின்சாரம் ஆகிய தேவைகள் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டன. வருகிறது. மின்னணு வகுப்பறைகள், அறிவியல் மற்றும் கணினி ஆய்வகங்கள், பல்நோக்கு அரங்குகள், விளையாட்டு மைதானங்கள், நூல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொடர்ந்து கண்காணித்து வருகிறார். 234 தொகுதிக்கும் போய் பார்த்து வருகிறார். ‘திராவிட மாடல்’ ஆட்சியின் உண்மையான நோக்கம் இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.
இதனை இன்று மேம்படுத்தவே பள்ளிக் கல்விக் கொள்கையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வடித்தெடுத்து வழங்கி வருகின்றனர்.
மணற்கேணியைத் தோண்டத் தோண்ட நீர் கிடைப்பதைப் போல, திராவிட மாடல் ஆட்சியானது மக்களுக்கு தினந்தோறும் நன்மைகளைச் செய்து வருகிறது. இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல, எதிர்காலத் தலைமுறைக்கும் சேர்த்து முதலமைச்சர் வழங்கி உள்ள மாபெரும் கொடைதான், இந்தக் கல்விக் கொள்கை.