தமிழ்நாடு

கைத்தறி நெசவாளர்களுடைய வாழ்வை முன்னேற்றுவது நம்முடைய பொறுப்பு : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

கைத்தறித் துறை என்பது மிக, மிகப் பாரம்பரியமான ஒரு துறை.

கைத்தறி நெசவாளர்களுடைய வாழ்வை முன்னேற்றுவது நம்முடைய பொறுப்பு : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று கைத்தறித்துறையின் சார்பில் நடைபெற்ற 11 வது தேசிய கைத்தறி நாள் விழாவில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை:-

கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பாக நடைபெறுகின்ற 11-ஆவது தேசிய கைத்தறி நாள் விழாவில் பங்கேற்று உங்களையெல்லாம் ஒரே இடத்தில் சந்திப்பதில் நான் மிகுந்த பெருமையடைகின்றேன், மகிழ்ச்சி அடைகின்றேன்.

இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள அமைச்சர் அண்ணன் காந்தி அவர்களுக்கும் மற்றும் துறையினுடைய அனைத்து அலுவலர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அத்தியாவசியத் தேவை என்பதை நீங்கள் அறிவீர்கள். அதில், உடுத்த உடை என்ற தேவையை பூர்த்தி செய்து வருகின்ற நெசவாளர்களுக்கும், திராவிட இயக்கத்திற்கும் இடையேயான உறவு இன்றைக்கு நேற்று உருவானது அல்ல. குறிப்பாக, 70 ஆண்டுகளுக்கு முன்பே நெசவாளர்களுடைய துயர் துடைப்பதற்காக களத்தில் நின்ற வரலாறு நம்முடைய கழகத்திற்கு உண்டு.

1953-ஆம் ஆண்டில் தேங்கிக் கிடந்த கைத்தறித் துணிகளை, பேரறிஞர் அண்ணா அவர்கள் தெருத்தெருவாக சென்று விற்றார். இங்கே சென்னையிலே நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஒருநாள் முழுவதும் விற்பனை செய்தார்கள். அன்றைக்கு, அண்ணா, கலைஞர், அவர்களுடைய தம்பிகள் எல்லாம் சேர்ந்து ஒரே நாளில் விற்பனை செய்த தொகை எவ்வளவு தெரியுமா? மொத்தம் ஒரு லட்சம் ரூபாய்! அந்த காலத்தில் இது மிகப் பெரிய தொகை. இன்றைய மதிப்பில் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாயைத் தாண்டும்.

இதில் சென்னையில் கலைஞர் அவர்கள் மட்டும் 20 ஆயிரம் ரூபாய்க்கு கைத்தறித் துணிகளை விற்றார்கள். நெசவாளர்களுடைய வாழ்க்கை நிலை, அவர்களுடைய கவலைகளை முற்றிலும் உணர்ந்தவராக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் இருந்தார்கள். அதனால் தான், கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போதெல்லாம் நெசவாளர்களுடைய வாழ்வை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை ஒவ்வொரு முறையும் தந்தார்கள்.

இன்றைக்கு தமிழ்நாட்டிலே சுமார் 2 இலட்சம் கைத்தறிகள் இருக்கின்றன. இரண்டரை லட்சம் நெசவாளர்கள் அதில் பணியாற்றுகிறீர்கள். கைத்தறிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாவிலேயே அசாம் மற்றும் மேற்கு வங்கத்திற்கு பிறகு இன்றைக்கு தமிழ்நாடு 3 ஆவது இடத்தில் இருப்பதற்கு என்னுடைய வாழ்த்துகள். தமிழ்நாட்டில் உற்பத்தியாகின்ற கைத்தறி துணிகளுக்கு இன்று உலகளவில் பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது.

குறிப்பாக, நம்முடைய காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டன் புடவைகள், பவானி ஜமக்காளம், மதுரை சுங்குடி புடவைகள், உள்ளிட்ட 10 கைத்தறிப் பொருட்களுக்கு GI என்று சொல்லப்படுகிற புவிசார் குறியீடு இன்றைக்கு கிடைத்திருக்கின்றது.

கைகளால் உற்பத்தி செய்யப்படுகிற பொருட்களுக்கு எப்போதும் ஒரு தனி மார்க்கெட் உண்டு. குறிப்பாக கடந்தாண்டு மட்டும் 1,146 கோடி ரூபாய் மதிப்பிலான கைத்தறி பொருட்கள் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

கைத்தறி நெசவாளர்களுக்கு நவீன தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகள், புதிய டிசைன்ஸ் குறித்த விழிப்புணர்வு போன்றவற்றை ஏற்படுத்தினால் அவர்களால் மென்மேலும் சாதிக்க முடியும். அப்படிப்பட்ட அளப்பரிய பணியைத் தான் நம்முடைய கைத்தறித் துறை அமைச்சர் அண்ணன் காந்தி அவர்கள் இன்றைக்கு தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமல்ல, அரசினுடைய இலவச வேட்டி, சேலை ஆர்டர்களின் மூலமும், பள்ளிக் குழந்தைகளுக்கான uniform துணிகளுக்கான ஆர்டர்கள் மூலமாகவும் இன்றைக்கு கைத்தறி நெசவாளர்களுடைய வாழ்வாதாரத்தை நம்முடைய திராவிட மாடல் முதலமைச்சர் அவர்கள் உறுதி செய்து வருகின்றார்.

குறிப்பாக, கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத வகையில், கடந்த ஆண்டு பொங்கலுக்காக 3 கோடியே 54 லட்சம் வேட்டி, சேலைகள் கொள்முதல் செய்யப்பட்டன. இதற்காக நிலுவைத் தொகையுடன் சேர்த்து நெசவாளர்களுக்கு 150 கோடி ரூபாய் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வழங்கி இருக்கின்றார். அதுமட்டுமல்ல, கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் அளவு கட்டணமில்லா மின்சாரம் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வழங்கி கொண்டு இருக்கிறார்.

நம்முடைய கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை, கோ ஆப்டெக்ஸ் மூலம் இன்றைக்கு லண்டன், ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் நடந்த சர்வதேச expo-க்களில் காட்சிப்படுத்தி நெசவாளர்களுக்கு இன்றைக்கு உற்சாகமும் உத்வேகமும் தந்திருக்கிறது நம்முடைய கைத்தறித் துறை.

ஆரணியில், 44 கோடியே 69 லட்சம் ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு நினைவு கைத்தறிப் பட்டுப் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் இன்றைக்கு வேகமாக நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் 10 இடங்களில் mini handloom parks அமைக்கப்படும் என்று நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார். அதில் காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அந்த மினி பூங்காக்கள் இன்றைக்கு செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. ஆகவே, நம்முடைய திராவிட மாடல் அரசு என்றைக்கும் நெசவாளர்களுடைய முன்னேற்றத்திற்கு துணை நிற்கும்.

தாங்கள் சார்ந்திருக்கக் கூடிய கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சிக்கு பெருமளவில் பங்காற்றியதற்காக சிறந்த நெசவாளர் விருதும், innovative and marketable designs உருவாக்கியதற்காக சிறந்த designer விருதும் இன்றைக்கு வழங்கப்படுகிறது. விருதுகளைப் பெறுகின்ற உங்கள் அனைவருக்கும் நம்முடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் கைத்தட்டல்கள் மூலம் தெரிவித்துக் கொள்வோம்.

தமிழ்நாட்டின் கைத்தறித் துறை என்பது மிக, மிகப் பாரம்பரியமான ஒரு துறை. இதனை மென்மேலும் வளர்த்தெடுத்து, நெசவுத் தொழிலையும், நெசவாளர்களுடைய வாழ்வையும் முன்னேற்றுவது நம்முடைய பொறுப்பு. அந்தப்பணியை நாம் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்வோம்.

இவ்வாறு துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories