”உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்திற்கு எதிரான வழக்கு அல்ல இது. பெரியார், அண்ணா,எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு எதிராக வழக்கு தொடுத்து அதிமுக பெரிய துரோகம் செய்துள்ளது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, " முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு கொண்டுவந்துள்ள திட்டங்கள் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. மக்கள் மத்தியில் திமுக அரசுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதனால் 2019 ஆம் ஆண்டு முதல் திமுக அணைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று வருகிறது. இதை தாங்கிக் கொள்ளமுடியாத எடப்பாடி பழனிசாமி காழ்ப்புணர்ச்சியில் அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை அறிமுகம் செய்த உடன் புதியதாக ஏதோ கண்டுபிடித்தது போலவும், புதியதாக ஞானோதயம் வந்தது போலவும் சி.வி.சண்முகம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரில் திட்டம் வைக்க கூடாது என வழக்கு தொடுத்துள்ளார்.
ஆனால், உண்மையை யாரும் மறுத்துவிட முடியாது. அதிமுக ஆட்சி காலத்தில் 25 திட்டங்களுக்கு அம்மா பெயர் வைத்தனர். இதை எல்லாம் திமுக நீதிமன்றம் சென்று தடுக்கவில்லை. மேலும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கூட பெயர் மாற்றம் செய்யாமல் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.
”உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்திற்கு எதிரான வழக்கு அல்ல இது. பெரியார், அண்ணா,எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு எதிராக வழக்கு தொடுத்து அதிமுக பெரிய துரோகம் செய்துள்ளது. இந்த வழக்கில் கேவலமான அரசியல் செய்யக்கூடாது என அதிமுகவிற்கு உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது.
ஜெயலலிதாவிற்கு அனைத்தையும் செய்தது திமுக தான், ஜெயலலிதா பெயரில் கொண்டு வரப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை அதையும் நீதிமன்றம் சென்று ஒப்புதல் பெற்றது திமுக தான். எடப்பாடி பழனிசாமி இனிமேல் திருத்திக்கொள்ள வேண்டும்.
காந்தி, நேரு பெயரில் திட்டங்கள் இருக்கக் கூடாது என பிரதமர் மோடி சொல்கிறார். அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயரில் திட்டங்கள் இருக்கக்கூடாது என எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடுக்கிறார். இவர்கள் இருவருக்கும் என்ன வித்தியாசம்?.” என கேள்வி எழுப்பியுள்ளார்.