துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (5.8.2025) தலைமைச் செயலகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்தும், முந்தைய ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்திய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்றும் துணை முதலமைச்சர் அவர்கள் துறைவாரியாக அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தாவது,
அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய உத்தரவின்பேரில், வடகிழக்குப் பருவமழையையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த இந்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
சில வருடங்களாகவே, பருவமழை காலங்களில் சென்னை அதிகமான மழைப்பொழிவை எதிர்கொண்டு வருகின்றது. கடந்த காலங்களில், கனமழை காரணமாக ஏற்பட்ட விளைவுகள், பாதிப்புகள், உள்ளிட்டவற்றை அனுபவமாகக் கொண்டு, நாம் பல்வேறு முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
குறிப்பாக மழை, வெள்ள காலத்தில் அரசு அலுவலர்கள் நீங்கள் ஆற்றுகிற பணி என்பது பாராட்டுக்குரியது. உங்களுடைய பணியால் தான், ஒவ்வொரு முறையும் சென்னை கனமழை, பெரு வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து மீண்டு வருகின்றது.
கடந்த காலங்களில் நடத்தப்பட்ட கூட்டங்களில் நாம் பல்வேறு கருத்துக்களை, அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கின்றோம், இன்னும் சொல்லப் போனால், பல கூட்டங்களுக்கு நம்முடைய முதலமைச்சர் தலைமை வகித்து, நமக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியிருக்கின்றார்கள்.
சென்ற கன மழையின் போது, நாம் அனைவரும் களத்தில் நின்றோம். அது நாராயணபுரம் ஏரியாக இருக்கட்டும், விருகம்பாக்கம் கால்வாயாக இருக்கட்டும், கடற்கரையோர முகத்துவாரங்கள் என அனைத்து இடங்களிலும் நாம் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டோம்.
அங்கே கிடைத்த கள அனுபவங்கள், சூழல்களை மையமாக வைத்து, மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருப்பதற்கான திட்டங்களை நாம் வகுத்தோம். இப்படி தீட்டப்பட்ட திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக நீர்வளத்துறை ஒருபுறமும், பெருநகர சென்னை மாநகராட்சி மறுபுறமும், இந்தப்பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்கள். இந்தப்பணிகளில் முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கே நான் எடுத்துரைக்க விரும்புகிறேன்.
ஓட்டேரி நல்லா கால்வாய். வீராங்கல் ஓடை மற்றும் விருகம்பாக்கம் கால்வாய் ஆகியவை மாநகராட்சியினுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அந்தக் கால்வாய்களின் நீர்வழிப்பாதைகள் 95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
அதே போல மாதவரம் பகுதியில், செங்குன்றம் அருகேயுள்ள சாலைகளில் தண்ணீர் தேங்குவது தொடர்கதையாக இருந்து வந்தது. நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்பில் இருந்த அந்த சாலைகளை, முதலமைச்சர் அவர்கள் மாநகராட்சி மூலம் சீரமைக்க உத்தரவிட்டார்கள்.
அதன்படி, மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் மூலம், அந்த சாலைப்பகுதியில் 23 கோடியே 12 இலட்ச ரூபாய் மதிப்பில் Double Vent ஏற்படுத்தப்பட்டு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகின்றது. மழைநீர் தேங்குவதைத் தவிர்க்க சென்னையின் 18 சுரங்கப்பாதைகளில் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கொருக்குப்பேட்டை போஜராஜன் நகர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 30 கோடியே 13 இலட்சம் மதிப்பீட்டில் வாகன சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே ரயில்வே பாதையின் குறுக்கே 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பில் culvert அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
இது தவிர நீர்வளத்துறை சார்பில், வெள்ளத்தடுப்பிற்காக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் 12 பணிகள் 338 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகின்றன. உதாரணமாக, TANGEDCO நிதி மூலமாக எண்ணூர் முகத்துவாரத்தில் 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
பக்கிங்ஹாம் கால்வாயில் சேரும் கீழ்கட்டளை வடிகால் 1 மற்றும் 2-இல் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஒக்கியம் மடுவிலிருந்து நீரை விரைவாகவும், நேரடியாகவும் கடலுக்கு கொண்டு செல்ல 91 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் தொடங்கவுள்ளன.
மேலும், நாம் கள ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில், மூவரசம்பட்டு ஏரியில் இருந்து கீழ்கட்டளை கால்வாய் வரை 34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் Cut & Cover அமைக்கும் பணியும் நாராயணபுரம் ஏரியிலிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு நீரை கொண்டு செல்ல 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் மதகுகள் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த ஆண்டு நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், நம்முடைய முதலமைச்சர் அவர்களிடம் எடுத்துச் சொன்ன கருத்துக்களின் அடிப்படையில், இந்தப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டன. இந்தப்பணிகள் முழுமையடையாத சூழல் இருக்கிறது. அவற்றை மழைக்காலத்துக்குள் செய்ய வேண்டியது மிக, மிக அவசியம்.
மின்சார லைன்கள், EB பாக்ஸ், போன்றவற்றை உரிய முறையில் பராமரிப்பதை மின்சாரத்துறை உறுதி செய்ய வேண்டும். பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள், பேரிடர் மீட்பு பணிகளின் போது, ஒவ்வொரு துறைக்கும் இடையே ஒருங்கிணைப்பு (coordination) இருக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சி, மெட்ரோ வாட்டர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதனை அந்தந்தப் பகுதிகளில் நியமிக்கப்படுகின்ற, Nodal Officers உறுதி செய்ய வேண்டும். தற்போது நடைபெற்று வருகின்ற பணிகள் தொடர்பான Reports-ஐ உடனுக்குடன் update செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான், நிலைமைக்கு ஏற்ப நடவடிக்கைகளை எடுக்க முடியும். நம்முடைய முதலமைச்சர் அவர்கள், சென்னைக்கு என்று தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்து இருக்கின்றார்கள்.
சென்னையில் எப்போது மழை வெள்ளம் வந்தாலும், தன்னார்வலர்கள் அரசோடு இணைந்து செயல்பட தயாராக இருக்கின்றார்கள். ஆகவே, அவர்களையும் உள்ளடக்கி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
எப்படி வார் ரூம் அமைத்து, தொலைபேசி வழியாக புகார்களை பெறுகிறோமோ, அதே போல, சோசியல் மீடியாவில் வருகின்ற புகார்கள், கேட்கப்படும் உதவிகளை Monitor செய்வது மிக மிக அவசியம். நம்முடைய அரசு அமைந்த இந்த 4 ஆண்டுகளில், பெரியளவில் எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நாம் செயல்பட்டு இருக்கின்றோம்.
கடந்த 4 ஆண்டுகளை விட இந்தாண்டு நாம் இன்னும் அதிக விழிப்புணர்வோடும், அதிக எச்சரிக்கையோடும் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். மக்கள் பாதிக்காத வகையிலும், மற்றவர்கள் குறை சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்காமலும் இருக்கின்ற வகையில் நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
உங்களுக்கு எல்லா வகையிலும், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் துணை நிற்பார்கள். கடந்த காலங்களைப் போல, நானும் எப்போதும் உங்களோடு களத்தில் இருப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றி வணக்கம் என்று துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.