தமிழ்நாடு

”Tamil Nadu Rising மட்டுமல்ல Tamil Nadu will keep on Rising” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

நம்முடைய திராவிட அரசு மீது மக்கள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை, தொழில் தொடங்கும் உங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் நாங்கள் தொடர்ந்து நிச்சயமாக வழங்குவோம் .

”Tamil Nadu Rising மட்டுமல்ல Tamil Nadu will keep on Rising” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (4.8.2025) தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆற்றிய உரை:-

தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க வேண்டுமென்று நாங்கள் விடுத்த அழைப்பை ஏற்று, இந்த மாநாட்டிற்கு வருகை தந்திருக்கக்கூடிய தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அனைவரையும் அன்போடு வருக! வருக! வருக! என நான் வரவேற்கிறேன்!

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை முதன்மையாக கொண்டு நம்முடைய திராவிட மாடல் அரசு அதற்கான கட்டமைப்புகளை மிக சிறப்பான வகையில் உருவாக்கியிருக்கிறது. முதலீட்டாளர்கள் மாநாடுகளையும், முதலீட்டாளர்களுடனான சந்திப்புக்களையும் தொடர்ச்சியாக நாம் நடத்திக்கொண்டு வருகிறோம். சென்னை, கோவை, தூத்துக்குடி, துபாய், ஜப்பான், அமெரிக்கா - அதுபோல ஸ்பையின், அமெரிக்கா என்று பல இடங்களில் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தி, தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்து இருக்கிறோம்.

2024-ஆம் ஆண்டு சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்த, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கடுமையாக உழைத்துகொண்டு இருக்கிறார். பல நாடுகளுக்குசென்று, வெளிநாட்டு முதலீடுகளைத் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து குவிக்கிறார். அதெல்லாம் தொழில் நிறுவனங்களாக உருவாக பாடுபடுகிறார்!

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருகிறார். சொன்னதைச் செய்வோம் என்பதுதான் நம்முடைய அரசின் குறிக்கோள்! முதலமைச்சராக இருக்கக்கூடிய நான் என்னென்ன சொல்கின்றேனோ, அதையெல்லாம் தொழில்துறையில் செய்து கொண்டு வருகிறார் டி.ஆர்.பி. ராஜா அவர்கள்.

முத்து நகர் தூத்துக்குடியில் இரண்டாவது முறையாக இந்த நிகழ்வு நடைபெறுகிறது. துறைமுகமும், இயற்கை வளமும் திறமையான மனிதவளமும் நிறைந்திருக்கும் இந்த மாவட்டத்தை தொழில்வளர்ச்சி மிக்க மாவட்டமாக வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறோம். தென் மாவட்டங்களில் அமைக்கப்படும் தொழிற் பூங்காக்களில், தொழிற்சாலைகளுக்கு சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படுகிறது. உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, எப்போது வேண்டும் என்றாலும் உடனே தொழில் துவங்கலாம் என்ற தயார் நிலையில், இந்த தொழிற் பூங்காக்கள் தயாராக இருக்கிறது.

நீர்த் தேவையை நிறைவு செய்ய, கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலையும் அமைக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நியோ டைடல் பார்க் தொடங்கப்பட்டிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில், டாடா எரிசக்தி மற்றும் விக்ரம் சோலார் எரிசக்தி ஆகிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விருதுநகரில் ஆயிரத்து 52 ஏக்கர் பரப்பளவில் PM மித்ரா பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. மொத்தத்தில், நம்முடைய தென் தமிழ்நாடு இதுவரை பார்க்காத தொழில் வளர்ச்சியை சாத்தியமாக்கி வருகிறோம்!

தென் தமிழ்நாடு பற்றி தலைவர் கலைஞர் கண்ட கனவு இன்றைக்கு நிறைவேறிக்கொண்டு இருக்கிறது. அதனால் தான் வின்ஃபாஸ்ட் தொழிற்சாலையின் தொடக்க விழாவில் நான் சொன்னேன் – இந்நாள் தென் மாவட்ட வளர்ச்சியில் ஒரு மிகப் பெரிய பொன்னாளாக அமைந்திருக்கிறது. ஆட்சிக்கு வந்த உடனே, தமிழ்நாட்டை 2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்று டார்கெட் செட் செய்தோம்!

அதை அடைய, பெருமளவில் முதலீடுகளை மேற்கொள்ள கூடிய உயர் தொழில் நுட்ப முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்லாமல், பெருமளவில் வேலைவாய்ப்புகளை அளிக்கும் முதலீடுகளையும் ஈர்க்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம்.

உயர் தொழில்நுட்பம் சார்ந்த செமிகண்டக்டர் உற்பத்தி, மின்வாகனங்கள் உற்பத்தி, சோலார் செல்கள், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, தகவல் தரவு மையங்கள் போன்ற அனைத்துத் துறைகளிலும் முன்னேறுவதற்கு அதில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறோம். அதிக அளவிலான உயர் ஊதிய வேலைவாய்ப்புகள் கொண்ட இந்த துறைகள் மூலமாக, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், உற்பத்திச் சூழலையும் மேம்படுத்த முடியும். அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலைகளை வளர்ச்சி குறைந்த மாவட்டங்களில் அமைப்பதால், அந்த வட்டாரத்து மக்களின் தனிநபர் வருமானம் அதிகரிக்கும்!

அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களுமான வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்ற பரந்த நோக்கத்தோடு இந்த ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கிறோம். தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து வரக்கூடிய கப்பல்களுக்கு இந்தியாவின் நுழைவு வாயிலாக தூத்துக்குடி துறைமுகம் இருக்கிறது. அதனால்தான் முதலீடுகளும் தூத்துக்குடியை நோக்கி இன்றைக்கு அணிவகுத்து வந்து கொண்டிருக்கிறது.

தூத்துக்குடி பகுதியை “புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையமாக” உருவாக்கும் வகையில், பல்வேறு பசுமை ஹைட்ரஜன், சோலார் செல் உள்ளிட்ட உற்பத்தி திட்டங்களை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். இப்போது கூட வின்ஃபாஸ்ட் உற்பத்தியை தொடங்கி வைத்துவிட்டுதான், இந்த மாநாட்டிற்கு வந்து கலந்து கொண்டிருக்கிறேன். இந்த சிறப்பான நிகழ்ச்சியில், தூத்துக்குடி மற்றும் நெல்லையின் வளர்ச்சிக்காக 4 சிறப்பு அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.

முதல் அறிவிப்பு - தூத்துக்குடி மாவட்டத்தில் 250 ஏக்கர் பரப்பளவில், ஒரு விண்வெளி பூங்கா - ஸ்பேஸ் பார்க் அமைக்கப்படும். இந்த பூங்கா, விண்வெளி துறைக்குத் தேவையான கருவிகளின் உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

இரண்டாவது அறிவிப்பு - கப்பல் கட்டுமானத் துறையை மேம்படுத்த நாம் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இதற்காக ஒரு பிரத்யேக நிறுவனம் வெகுவிரைவில் தொடங்கப்படும். அந்த நிறுவனம் மூலம், கப்பல் துறை தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துக் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படும்.

மூன்றாவது அறிவிப்பு - முருங்கை ஏற்றுமதி மற்றும் சாகுபடி கூட்டமைப்பிற்காக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 5 கோடியே 59 இலட்சம் ரூபாய் செலவினத்தில் ஒரு பொது வசதி மையம் நிறுவப்படும்.

நான்காவது அறிவிப்பு - திருநெல்வேலி மாவட்டத்தில், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் மண்டலப் பிரிவு அமைக்கப்படும்.

நாங்கள் எடுத்து வரும் பெரு முயற்சிகளின் பலனாக, கடந்த நான்கு ஆண்டுகளில், 10 இலட்சத்து 30 ஆயிரத்து 348 கோடி ரூபாய் அளவிற்கு, உறுதி செய்யப்பட்ட முதலீடு, 32 இலட்சத்து 28 ஆயிரத்து 945 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் 898 திட்டங்களை ஈர்த்திருக்கிறோம்.

இன்றைக்கு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், 32 ஆயிரத்து 554 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 49 ஆயிரத்து 845 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு என்ற வகையில், 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இது தவிர MSME துறை சார்பில், 244 கோடியே 45 இலட்சம் ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் ஆயிரத்து 56 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், 19 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, 2 ஆயிரத்து 530 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3 ஆயிரத்து 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 5 திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.

மேலும், டாட்டா பவர் சோலார், இன்ஃபினிக்ஸ் மற்றும் பினக்கிள் இன்ஃபோ-டெக் ஆகிய 3 நிறுவனங்களைச் சேர்ந்த பல்வேறு நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் இங்கே நான் வழங்கியிருக்கிறேன்.

இன்றைக்கு கையெழுத்தாகி இருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், மின்னணுவியல், பாதுகாப்பு, கப்பல் கட்டுமானம் மற்றும் தோல் அல்லாத காலணிகள் போன்ற பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

வின்ஃபாஸ்ட் திட்டம் மூலமாக, மின் வாகனத் துறைக்கான மையமாக தூத்துக்குடி உருவெடுத்து வரும் அதே நேரத்தில், மின்னணுவியல் துறைக்கான மையமாகவும் தூத்துக்குடி மாறப் போவது உறுதி.

நம்முடைய திராவிட அரசு மீது மக்கள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை, தொழில் தொடங்கும் உங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் நாங்கள் தொடர்ந்து நிச்சயமாக வழங்குவோம். நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற மாதிரி, நம்முடைய இளைஞர்களின் திறனை மேம்படுத்த அனைத்து முயற்சிகளுக்கும் நாங்கள் ஊக்கமளித்து பல்வேறு பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

“எந்த விதமான தொழிற்சாலை அமைத்தாலும், அதற்கான திறன்கொண்ட பணியாளர்கள் இங்கு இருக்கிறார்கள்” என்று தொழிலதிபர்கள் என்னிடம் அடிக்கடி சொல்கிறார்கள். உங்களுக்குத் தேவையான அனைத்தும் தமிழ்நாட்டில் இருக்கிறது! உங்களின் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வாருங்கள் என்று அன்போடு அழைக்கிறேன்.

கடின உழைப்பால் இந்த வளர்ச்சியை, வெற்றியை நாம் ஈட்டியிருக்கிறோம். இது நீடிக்க வேண்டும், மேலும் பெருக வேண்டும். டி.ஆர்.பி. ராஜா இந்த மாநாட்டிற்கு “Rising” என்று பெயர் வைத்துள்ளார். பொருத்தமான பெயர் தான். என்னைப் பொறுத்தவரையில், “Tamil Nadu Rising” மட்டுமல்ல, திராவிட மாடல் ஆட்சியில் “Tamil Nadu will keep on Rising” என்று சொல்லி, உங்கள் எல்லோருக்கும் மீண்டும் ஒரு முறை என்னுடைய இதயபூர்வமான நன்றியைச் சொல்லி விடைபெறுகிறேன்.

banner

Related Stories

Related Stories