தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (4.8.2025) தலைமைச் செயலகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாட்டின் முன்னோடித் திட்டமான முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வுத் திட்டத்தின் முதல் தொகுதி நிறைவு விழாவில், 40 பசுமைத் தோழர்களுக்கு முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வுத் திட்ட நிறைவுச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வுத் திட்ட சிறப்பிதழையும் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில், முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வுத் திட்ட நிறைவுச் சான்றிதழ்களை பெற்ற பசுமைத் தோழர்கள் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, வரையாடு திட்டம், தமிழ்நாடு அழிந்து வரும் உயிரினங்களுக்கான நிதியம், இந்தியாவின் முதல் கடல்பசு பாதுகாப்பகம், தேவாங்கு சரணாலயம் மற்றும் இருவாச்சி பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் தொடர்ச்சியாக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தேசிய அளவில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. மாற்றத்தை உண்டாக்குவதில் இளைஞர்களின் ஆற்றலின் வலிமையை உணர்ந்து தமிழ்நாடு அரசு காலநிலை நடவடிக்கை மற்றும் சூழலியல் நிர்வாகத்திற்கென பிரத்யேகமாக, இந்தியாவின் முதல் மாநில – அளவிலான முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வுத் திட்டத்தினை தொடங்கியது.
கடந்த ஆகஸ்ட் 2023-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்ட இத்திட்டமானது, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையால் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல் கல்விகளுக்கான நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்பட்டது. அரசு இயந்திரத்தில் இளம் திறமையாளர்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தில், மாவட்டத்திற்கு ஒருவர் என 38 மாவட்டங்களுக்கு 38 பசுமைத் தோழர்கள் மற்றும் மாநில அளவில் இருவர் என மொத்தம் 40 பசுமைத் தோழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், மேலும், அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாட்டின் முக்கிய இயக்கங்களான பசுமைத் தமிழ்நாடு இயக்கம், காலநிலை மாற்ற இயக்கம், ஈரநில இயக்கம் மற்றும் நெய்தல் மீட்சி இயக்கம் ஆகியவற்றின் செயல்பாட்டினைத் தொடர்ந்து கண்காணிக்க பிரத்யேகமான திட்ட மேலாண்மை அலகு ஒன்றும் உருவாக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டின் மேற்கூறிய முக்கிய இயக்கங்களை முன்னெடுத்துச் செல்வதில் பெரும் பங்காற்றிய முதல் தொகுதி பசுமைத் தோழர்களது பணிக்காலம் ஜூலை 2025-ல் நிறைவடைந்தது. மாவட்ட நிர்வாகங்களின் வழிகாட்டுதளுடன் பணியாற்றிய இப்பசுமைத் தோழர்கள், நிலைத்தன்மை மற்றும் சூழலியல் சார்ந்த பிரச்சினைகளுக்கான கள அளவிலான அறிவுக் களஞ்சியங்களை உருவாக்குதல், நெகிழி ஒழிப்பு மற்றும் அலையாத்திக் காடுகளின் மீட்டெடுப்பு உள்ளிட்ட மக்களை மையமாகக் கொண்ட பரப்புரைகளை மேற்கொள்ளுதல், காலநிலைத் திறன்மிகு கிராமங்கள் மற்றும் கடலோர மீள்தன்மைக்கான முன்னெடுப்புகளின் மேம்பாட்டிற்கு உறுதுணையாக செயல்பட்டனர்.
மேலும், சுற்றுச்சூழல் சவால்களுக்கு தொழில் நுட்பம் சார்ந்த கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை முறைகளை ஒருங்கிணைத்தல், மாவட்ட அளவிலான காற்று, நீர் மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவற்றின் மேம்பாடு ஆகிய பணிகளிலும் இப்பசுமைத் தோழர்கள் பங்காற்றினர்.
இந்தியாவிலேயே, இளைஞர்களால் வழி நடத்தப்படுகின்ற, மாவட்டங்களுடன் ஒருங்கிணைந்த பசுமைப் புத்தாய்வுத் திட்டத்தினை மாபெரும் அளவில் நிறுவனப்படுத்தியதில் தமிழ்நாடு தான் முதலிடம் வகிக்கிறது. இத்திட்டமானது புத்தாய்வுத் திட்டம் என்பதனையும் கடந்து, மாவட்டத்திற்கென குறிப்பிட்ட காலநிலை திட்டங்கள் மற்றும் நிகழ்நேர கண்காணிப்பு இணையதளம், குடிமக்கள் பங்க்கேற்பு மற்றும் தொடர்புக் கட்டமைப்புகள், தொழில் நுட்பம் சார்ந்த சுற்றுச்சூழல் சேவைகளை வழங்குதல், அடிப்படையளவில் மதிப்பிடக்கூடிய சூழலியல் முன்னேற்றங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட கொள்கைக் கருவியாக செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் இரண்டாம் தொகுதியின் 38 – மாவட்ட அளவிலான பணிக்காண விண்ணப்பங்கள் மே மாதம் முதல் வரவேற்கப்பட்டன. விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி, தமிழ் மொழிப் புலமை, தலைமைப் பண்பு மற்றும் தரவு பகுப்பாய்வுத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பசுமைத் தோழர்கள் மாத உதவித் தொகையாக ரூ. 65,000 -மும் பயணச் செலவினத்திற்கென கூடுதலாக ரூ. 10,000-மும் பெறுவர்.
மாபெரும் வரவேற்பினைப் பெற்ற இத்திட்டத்தின் இரண்டாம் தொகுதியின் 38 இடங்களுக்கு சுமார் 9000-ற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தது, இந்திய அளவில் சுற்றுசூழல் நிர்வாகம் மற்றும் காலநிலை நடவடிக்கையில் இளைஞர்களுக்கு அதிகரித்து வரும் ஆர்வத்தைக் காட்டுகிறது.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இப்பசுமைத் தோழர்களுக்கு 30 நாள் அறிமுகப் பயிற்சியும் அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பணியும் வழங்கப்படும். அவர்களது கடமையினையும் பணியின் பயன்களையும் உறுதி செய்ய மாதந்திர பணி அறிக்கைகள் மற்றும் செயல்திறன் மதிப்பீடு ஆகியவை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும்.
வரும் காலங்களில், இப்பசுமைப் புத்தாய்வுத் திட்டமானது தமிழ்நாட்டின் காலநிலை மாற்றத்திற்கெதிரான ஆயத்தத் திட்டங்களுக் அடித்தளமாக விளங்கும். மேற்கூறிய இயக்கங்களின் செயலாக்கத்தில் போதுமான அனுபவங்களைப் பெற்ற முதல் தொகுதி பசுமைத் தோழர்கள் சிலர் உயர் கல்வி மற்றும் காலநிலை மாற்றம் சார்ந்த பணிகளில் இணைந்துள்ள நிலையில் நடைமுறையில் இருக்கும் அரசுத் திட்டங்களில் சிலர் பணியமர்த்தப்படவிருக்கின்றனர். எதிர்வரும் இப்புத்தாய்வுத் திட்ட தொகுதிகளும் வரம்புகள் விரிவாக்கப்பட்டு, மக்கள் பங்கேற்பு மற்றும் காலநிலை முன்னுரிமைகளை உள்ளடக்கி தமிழ்நாட்டினை நிலையான சூழலியல் நிர்வாகத்தில் தேசிய அளவில் தலைமை வகிக்கச் செய்யும்படி உருவாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.