தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான மதன் பாப் (வயது 71), உடல்நலக் குறைவால் நேற்று சென்னையில் காலமானார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவர் அதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்
மதன் பாப்பின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தியாகும். அடிப்படையில் இசைக்கலைஞரான இவர் கிட்டாரிஸ்ட்டாகவும், தூர்தர்ஷன் டிவியில் இசைக் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார். அதன்பின்னர் கே.பாலசந்தரின் அறிமுகத்தால் நடிப்பில் இறங்கிய அவர், ‛நீங்கள் கேட்டவை' படத்தில் கீ போர்டு ஆர்ட்டிஸ்ட்டாக சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து ‛வானமே இல்லை, தேவன் மகன், பூவே உனக்காக, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், ப்ரெண்ட்ஸ், தெனாலி, ஐயா, வேல்' உள்ளிட்ட 200 படங்கள் வரை நடித்துள்ளார்.சினிமா தவிர்த்து டிவி காமெடி ஷோக்களிலும் நடுவராக பணியாற்றி உள்ளார்.
பெரும்பாலும் காமெடி ரோல்களில் நடித்து வந்த இவர் பல படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்தார். . மேடை நாடகம், விளம்பரங்கள், டிவி சீரியல்கள் என பலவற்றிலும் அசத்தி உள்ள இவர், தனது இளம் வயத்தில் குத்துச்சண்டை வீரராகவும் இருந்துள்ளார்.
மதன் பாப்பின் உடல் சென்னை, திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் உடலுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். நேற்று மாலை நடிகர் மதன் பாபு உயிரிழந்த நிலையில் இன்று அவருடைய குடும்ப வழக்கப்படி இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. மதன் பாபு உடல் திருவான்மியூரில் உள்ள அவரின் வீட்டிலிருந்து பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 3;00 மணியளவில் தகனம் செய்ய உள்ளது.