இந்திய ரயில்வேயில் லோகோ பைலட்டுகள் எனப்படும் இன்ஜின் ஓட்டுனர்களுக்கான ஓய்வு, ரயில்வேயில் காலி பணியிடங்களை நிரப்பும் முறை குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி மக்களவையில் கேள்விகளை எழுப்பியிருந்தார்.
அதன் விவரம் வருமாறு:-
இந்திய ரயில்வேயில், ரயில் இன்ஜின்களை இயக்கும் லோகோ பைலட்டுகளுக்கு வேலை நேரம் மற்றும் விடுப்புக் கொள்கை உள்ளதா? அப்படியானால் ஒரு வேலை நாளில் ஒரு லோகோ பைலட்டின் மொத்த வேலை நேரம் எவ்வளவு? அதில் இடைவேளை மற்றும் இயற்கை உபாதைக்கான நேரம் உள்ளிட்ட விவரங்கள் என்ன?
பணியில் இருக்கும் லோகோ பைலட்டுகளுக்கு உணவு உட்கொள்வதற்கும் இயற்கை உபாதைகளுக்கு சென்று வரவும் இடைவேளை வழங்க வேண்டும் என்ற அவர்களின் நீண்டகால கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்தது என்பது உண்மையா? இதனால்தான் பெரிய ரயில் விபத்துகளில் மனித தவறுகள் காரணமாகக் கூறப்படுகின்றன என்பது உண்மையா?
லோகோ பைலட்டுகளின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நீண்ட தூர அல்லது அதிவேக ரயில்களில் இரண்டு லோகோ பைலட்டுகள் அல்லது உதவி பைலட்டுகளை நியமிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறதா, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?
லோகோ பைலட்டுகளுக்கு வெளியூர் பயணத்தில் இருந்து திரும்பிய பின் கட்டாயமாக 16 மணிநேர ஓய்வும், வாராந்திர 30 மணிநேர ஓய்வும் முறையாக வழங்கப்படவில்லை என்ற குறைகளை அரசாங்கம் அறிந்திருக்கிறதா?
லோகோ பைலட்டுகள் மற்றும் உதவி லோகோ பைலட்டுகளுக்கு போதுமான ஓய்வு வழங்கப்படுவதை உறுதி செய்ய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?
ரயில்வேயில் தற்போது உள்ள லோகோ பைலட்டுகள் மற்றும் உதவி லோகோ பைலட்டுகளுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு? அவற்றை நிரப்பாததற்கான காரணங்கள் என்ன?” ஆகிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.
வெள்ள மேலாண்மைக்கு புதிய திட்டங்கள் என்ன?
நாடு முழுவதும் வெள்ள மேலாண்மை மற்றும் நீர்ப்பாசனத்திற்காக அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் மொத்த திட்டங்கள் மற்றும் திட்டங்களின் எண்ணிக்கை குறித்து திமுக தேனி மக்களவை உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இத்திட்டங்களின்கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில், மாநில வாரியாக, ஒவ்வொன்றிலும் ஒதுக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட, வெளியிடப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட மொத்த நிதிகளின் விவரங்கள் என்ன மற்றும் மேற்கூறிய காலகட்டத்தில் இந்தத் திட்டங்கள் மூலம் அடைந்த சாதனை என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.