சமூகத்தில் பெண்களைப் போன்று திருநங்கைகளும் போற்றப்பட வேண்டும்; அவர்கள் கண்ணியத்துடன் அழைக்கப்பட வேண்டும் என்ற உயரிய சிந்தனையின் வெளிப்பாடாக, மரபு சார்ந்த "அரவாணிகள்" என்ற சொல்லுக்கு மாற்றாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் "திருநங்கை" என்ற மரியாதைக்குரிய சொல் அதிகாரப்பூர்வமாக அறிவுமுகப்படுத்தப்பட்டது.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற வள்ளுவரின் ஆழமான சிந்தனைக்கு ஏற்ப, மனிதர்களுக்குள் எந்தவித ஏற்றத்தாழ்வும் இல்லை என்பதை நிலைநாட்டும் வகையில், திருநங்கைகளுக்கும் முழுமையான சமூக பாதுகாப்பு மற்றும் சமூக அங்கீகாரத்தை வழங்கி அவர்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்திட, இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக 15.04.2008 அன்று தமிழ்நாட்டில் "திருநங்கைகள் நல வாரியம்" அமைத்து, இந்தச் சமூகத்திற்கு துணை நின்ற முதல் மாநிலம் நமது தமிழ்நாடு ஆகும்.
தமிழ்நாடு அரசு, திருநங்கையர்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு, திருநங்கைகள் நல வாரியத்தின் வாயிலாக அடையாள அட்டை, ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1500 ஓய்வூதியம், குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, மருத்துவக் காப்பீடு, தையல் இயந்திரம், சொந்த தொழில் தொடக்க மானியம், சுயஉதவிக்குழு பயிற்சிகள், தொழில்திறன் மேம்பாடு பயிற்சிகள் உள்ளிட்ட பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
திருநங்கைகளின் கல்வித் தடைகளை அகற்றி, உயர்கல்விப் பங்கேற்பை ஊக்குவிக்கும் விதமாக, உயர்கல்வி பயிலும் திருநங்கைகளின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கல்விச் செலவுகளையும் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் அரசே ஏற்று வருகிறது.
இவற்றின் தொடர்ச்சியாக, திருநங்கை சமூகத்தின் கல்வி மேம்பாட்டினை உறுதி செய்யவும், உயர்கல்வி கற்கும் திருநங்கைகளை ஊக்குவிக்கவும் புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலம் மாதம் ரூ.1000 வழங்கப்படும் கல்வி ஊக்கத் தொகை, உயர்கல்வி பயிலும் அனைத்து திருநங்கையர்களுக்கும் கிடைக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது திருநங்கைகள் எந்தவித நிதிச் சுமையுமின்றி உயர்கல்வியைத் தொடரப் பெரிதும் உதவும்.
மேலும், திருநங்கைகளின் கண்ணியமான பணி வாய்ப்புகளை உறுதி செய்யும் நோக்கில், முதற்கட்டமாக சென்னை, ஆவடி மற்றும் தாம்பரம் மாநகரங்களில், ஊர்காவல் படையில் திருநங்கையர்கள் பணியமர்த்திட அரசு முன்னெடுத்துள்ளது.
திருநங்கைகள் சந்திக்கும் சவால்களைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை வழங்கும் நோக்கில், "அரண் பாதுகாப்பு இல்லம்" சென்னை மற்றும் மதுரையில் நிறுவப்பட உள்ளது. இந்த இல்லங்கள், குடும்ப ஆதரவின்றி அல்லது சமூகப் புறக்கணிப்புக்கு ஆளான திருநங்கைகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாகச் செயல்பட்டு, அவர்களுக்குத் தேவையான ஆதரவையும் பாதுகாப்பையும் வழங்கும்.
தமிழ்நாடு திருநங்கையர் நலக் கொள்கை – 2025
திருநங்கைகள் நல வாரியத்தின் வாயிலாக அடையாள அட்டை வழங்குவது முதல், சுய வேலைவாய்ப்புக்கான நிதி உதவி வரை பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வந்த நிலையில், சமூகத்தில் நீண்ட காலமாக ஒதுக்கப்பட்டு வந்த இச்சமூகத்திற்கு இன்னும் ஆழமான, கட்டமைக்கப்பட்ட மாற்றங்கள் தேவை என்பதை உணர்ந்து, வடிவமைக்கப்பட்டதே “தமிழ்நாடு மாநில திருநங்கையர் கொள்கை– 2025” ஆகும்.
“தமிழ்நாடு மாநில திருநங்கையர் கொள்கை– 2025” நோக்கம் மற்றும் இலக்கு
"யாரையும் விட்டுவிடாத வளர்ச்சி" என்ற ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளின் (SDGs) கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொண்டு, திருநங்கையருக்கு தங்கள் அடையாளங்கள் மற்றும் உடலமைப்பில் சுய-நிர்ணயத்துடன், பாகுபாடு, வன்முறை இல்லாதவர்களாக வாழவும், தங்கள் உரிமைகளை அணுகக்கூடிய மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு நியாயமான, சமமான மற்றும் வளமான சமூகத்தை உருவாக்குவதே இக்கொள்கையின் இலக்காகும்.
இந்தக் கொள்கை, தமிழ்நாட்டில் திருநங்கை/திருநம்பி மற்றும் இடைநிலை பாலினத்தவர்களின் முழுமையான சமூக ஒருங்கிணைப்பு, கண்ணியம் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
திருநங்கைகள் கொள்கையின் முக்கிய அம்சங்கள்
அடிப்படை உரிமைகளுக்கு முன்னுரிமை
சட்டப்பூர்வ அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பு
அடையாள ஆவணங்களின் தேவை
திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு
கல்வியில் சமத்துவ அணுகுமுறை
சுகாதாரப் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை
சமூக நீதி மற்றும் பிரதிநிதித்துவம்
குறைதீர்ப்பு முறைகள் மற்றும் விழிப்புணர்வு
செயல்பாடு மற்றும் கண்காணிப்பு கட்டமைப்பு
செயலாக்கம் மற்றும் கண்காணிப்பு
திருநங்கைகள் நல வாரியம், மாநில அளவில் ஆலோசனை அமைப்பாகவும், திருநங்கை சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் அமைப்பாகவும் செயல்படும். இந்தக் கொள்கையின் செயல்பாடுகள், அரசின் பல்வேறு துறைகள் மற்றும் பங்குதாரர்களின் பங்கேற்புடன் செயல்படுத்தப்பட உள்ளது.
மாநில தளத்தில் :
அரசு தலைமைச் செயலாளர் தலைமையிலான ஒரு உயர் மட்டக் குழு, அனைத்து தொடர்புத் துறைகளையும் உள்ளடக்கி, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூடி, திருநங்கையருக்கான திட்டங்கள், சட்டங்களை உருவாக்குவது குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குதல், திட்டங்களின் தாக்கத்தை கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல், கொள்கையின் செயல்திறனை காலமுறை மறுபரிசீலனை செய்தல் மற்றும் தேவையான திருத்தங்களை பரிந்துரைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும்.
மாவட்ட தளத்தில் :
இதேபோல், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி, திருநங்கையருக்கான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சிக்கான திட்டங்களை அமல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல். திருநங்கையர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்திட காலமுறை குறைதீர்ப்பு கூட்டத்தினை நடத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும்.
தமிழ்நாட்டின் இந்தத் திருநங்கையருக்கான நலக் கொள்கையானது, ஒரு நிர்வாக ஆவணமாக மட்டுமில்லாமல், மனித உரிமை, சமத்துவம் மற்றும் சுயமரியாதை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் ஒரு சமூகச் சான்றாக அமைந்துள்ளது. சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகளை நிலைநாட்டுவதன் மூலம், இக்கொள்கை ஒரு நவீன சமூக மாற்றத்திற்கான அடித்தளமாக அமைக்கப்பட்டுள்ளது.
இக்கொள்கை ஒடுக்கப்பட்ட பாலின அடையாளங்களுக்கான உரிமைகளைச் சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்வதுடன், சமூகத்தில் அவர்களுக்கான இடத்தை உறுதிசெய்து, பன்முகச் சமூகத்தைக் கட்டமைக்க முனைகிறது. அரசு வழங்கும் இந்த உரிமைகள், அவர்களுக்குச் செய்யப்படும் உதவிகள் அல்ல; மாறாக, அவை அவர்களின் உண்மையான உரிமைகள் என்பதை இக்கொள்கை தெளிவுபடுத்துகிறது. திருநங்கையர்களும் சமுதாயத்திற்குப் பங்களிக்கத் தயாரான முழுமையான குடிமக்கள் ஆவர். அவர்களை நம்மோடு ஒப்பாக வாழவைப்பது நம் அரசின் கடமையாகும் என்பதை இந்தக் கொள்கை வலியுறுத்துகிறது.