தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நூற்றாண்டு தொடக்க விழா, 2025ஆம் ஆண்டுக்கான சிறந்த செவிலியர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு செவிலியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”அனைத்து செவிலியர்களும் சேவை மிக்க செவிலியர்கள் என்றாலும், சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு நைட்டிங்கேல் அம்மையார் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 22 செவிலியர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது
2019ஆம் ஆண்டு முதல் 2023 வரையிலான கொரோனா காலத்தில் இந்தியாவிற்கு வழிகாட்டியாக நமது தமிழ்நாட்டைச் சார்ந்த செவிலியர்கள் இருந்தார்கள். அவர்களது உழைப்பு அளப்பரியது. கொரோனா தடுப்பூசி போடுவதற்காக அவர்கள் மலை எல்லாம் ஏறி இறங்கினார்கள்.
2,300 மலைக்கிராமங்கள் மற்றும் நடந்து செல்லக் கூட வழியில்லாத இடங்களுக்கு கூட சென்று தடுப்பூசியை சேர்த்தார்கள்.
பேரறிஞர் அண்ணா சொன்னார், “மனிதர்களின் மனிதாபிமானத்தின் உச்ச வடிவமாக செவிலியர்களை பார்க்கிறோம்” என்று, முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னார், “செவிலியர்கள் இல்லாமல் மருத்துவம் பூரணமடையாது” என்று, இன்றைக்கு இவர்கள் வழியில், MRB சார்பில் 3,253 ஒப்பந்தசெவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்தவர் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
அதுமட்டுமல்லாது, ஒப்பந்த செவிலியர்களுக்கு மாதம் ரூ.14,000-ஆக இருந்த ஊதியத்தை ரூ.18,000 ஆக உயர்த்தி வழங்கினார் நம் முதலமைச்சர். தற்போது, 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 150 செவிலியர்களை பணி நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2,250 கிராமப்புற சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்களுக்கு மிக விரைவில் பணி ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்” என தெரிவித்தார்.