தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிலையில், இந்த விமான நிலையம் அமைய காரணமாக இருந்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், "தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் திறக்கப்பட்டுள்ளது. இதற்காக 2010-ம் ஆண்டு எடுக்கப்பட்ட முன்னெடுப்புகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது(கலைஞர் எங்கும் நிறைந்திருக்கிறார்).
தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை, திறந்து வைத்துள்ள பிரதமருக்கு நன்றி. இந்த புதிய முனையம் திறக்கப்பட்டுள்ளதன் மூலம், தூத்துக்குடி பகுதியில் முதலீடுகள் குவிந்து, வளர்ச்சி அதிகரிக்கும் என்பது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் உத்தரவாதம்.
தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்திற்காக 712 ஏக்கர் இடம் கையகப்படுத்தும் பணிகளை, 2021-ம் ஆண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நிர்வாகம் நிறைவேற்றித் தந்தமைக்காக நன்றி. தூத்துக்குடி விமான நிலைய ஆலோசனைக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற
உறுப்பினருமான கனிமொழி, தென்மாவட்டங்களில் தொழில்துறை வளர்ச்சியடைய, டெல்லியில் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு, ஒன்றிய அமைச்சர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தியமைக்காக நன்றி.
வரும் ஆக. 4-ம் தேதி மேலும் பல முக்கிய அறிவிப்புகளை திராவிட மாடல் அரசு வெளியிட இருக்கிறது.தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மேலும் பல விமான நிலையங்கள் தேவைப்படுகிறது.அதற்கான நடவடிக்கைகளை திராவிட மாடல் அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்"என்று கூறப்பட்டுள்ளது.