திராவிட மாடல் அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க திராவிட முன்னேற்றக் கழகத்தில் மக்களை உறுப்பினர்களாக சேர்க்கும் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற மாபெரும் முன்னெடுப்பு திட்டத்தில் உறுப்பினர்கள் சேர்க்கையை கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 3.7.2025 அன்று சென்னை, ஆழ்வார்பேட்டையில் மக்களை நேரடியாக சந்தித்து தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், முன்னணியினர் அனைவரும் அவரவர் சொந்த வாக்குச்சாவடிகளில் இருக்கும் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து “ஓரணியில் தமிழ்நாடு” இயக்கத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து தொலைபேசி வழியாக, மாவட்ட செயலாளர்களை தொடர்பு கொண்டு, கண்காணித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் வெளிமாவட்டங்களுக்கு செல்லும் போதும் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், “ஓரணியில் தமிழ்நாடு” முன்னெடுப்பின் வழியாக தி.மு.கவில் 2 கோடிக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கழகத்தில் உறுப்பினராக இணைந்துள்ளனர்.
இது குறித்து திமுக சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க "ஓரணியில் தமிழ்நாடு" எனும் மாபெரும் முன்னெடுப்பை கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் குடும்பம் குடும்பமாக 2 கோடிக்கு மேற்பட்ட பொதுமக்கள் சமூகநீதியை காக்கும் ஜனநாயக பேரியக்கமான திமுகவில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.