தமிழ்நாடு

”SC – ST மாணவர்கள் நெஞ்சங்களில் கற்சிலையாக பதிந்திருக்கும் முதலமைச்சர்” : எழுத்தாளர் இமையம்!

SC – ST மாணவர்களை வெளிநாடுகளில் படிக்கவைக்கும் முதலமைச்சர் என்ற தலைப்பில் முரசொலியில் எழுத்தாளர் இமையம் கட்டுரை எழுதியுள்ளார்.

”SC – ST மாணவர்கள் நெஞ்சங்களில் கற்சிலையாக பதிந்திருக்கும் முதலமைச்சர்” : எழுத்தாளர் இமையம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இது பொற்காலம் என்று சொல்லலாம். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து அவருடைய கவனத்தின் முதலிடத்தில் இருப்பது ‘SC – ST நலத்துறை’தான்.

தி.மு.க. ஆட்சியில் இல்லாதபோதெல்லாம் SC – ST நலத்துறைக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை, அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படாத துறையாகத்தான் இருந்தது. கலைஞர் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் இத்துறைக்கு கூடுதல் நிதியும் வழங்கி, அக்கறையும் காட்டிவந்தார். SC – ST மக்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். அம்மக்களைத் தொழில்முனைவோராக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் ‘தாட்கோ’ நிற வனத்தை உருவாக்கினார். பல லட்சம் பேரைத் தொழில்முனைவோராகவும் மாற்றினார்.

சமூகநலத் திட்டங்களால் மக்களை மேம்படுத்துவது எவ்வளவு முக்கியமோ அதைவிட கல்வியின் வழியாக அதிகாரம் பெறுவது, பொருளாதார மேம்பாடு அடையச் செய்வது, சமூகக் கௌரவம் பெறச் செய்வதன் மூலம் நிலையான நீடித்த சமூக மாற்றத்தை உருவாக்க முடியும் என்று முதலமைச்சர் நம்புகிறார். பிறப்பின் அடிப்படையில், பொருளாதாரத்தின், வாழ்விடத்தின் அடிப்படையில் புறக்கணிக்கப்பட்ட, புறக்கணிக்கப்படுகிற SC – ST மாணவ மாணவியரை உயர்த்துவதற்கு, அவர்கள் சமூகக் கௌரவத்தைப் பெறுவதற்கு, அதிகாரத்தை, பொருளாதாரத்தைப் பெறுவதற்கு ஒரே வழி கல்விதான்.

‘ஒரு மனிதனுக்குக் கல்வியைக் கொடுத்துவிட்டால் போதும், உலகில் உள்ள அனைத்து விஷயங்களும் அவனுக்குத் தானாகக் கிடைத்துவிடும்’ என்பதன் அடிப்படையில் ‘அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டம்’ என்ற திட்டத்தை உருவாக்கி முதலமைச்சர் நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கிறார். லட்சிய நோக்கமற்ற அரசுக்கு இது போன்ற திட்டங்கள் சாத்தியமில்லை.

வெளிநாடுகளில் உயர்கல்வி பயில விரும்புகிற திறமை வாய்ந்த SC – ST மாணவர்கள், குடும்ப ஆண்டு வருமானம் 8 லட்சம் வரை இருந்தால் அவர்களுக்கு 36 லட்சமும், குடும்பமும் ஆண்டு வருமானம் 12 லட்சம் வரை இருந்தால் அவர்களுக்கு 24 லட்சமும் அரசு வழங்குகிறது. இத்தொகை கடன் அல்ல, முற்றிலும் இலவசம். இத்தொகையைக் கொண்டு உலக அளவில் தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலிட்டுள்ள 500 நிறுவனங்களில் படிக்க முடிந்தது. இன்றைய நிலையில் 162 மாணவ மாணவிகள் அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, இத்தாலி, சிங்கப்பூர், மலேசியா, நெதர்லாந்து, அயர்லாந்து, தென்கொரியா, ஆஸ்திரேலியா என்று பல நாடுகளில், விரும்புகிற பாடத்தைப் பயந்து வருகின்றனர். இது கற்பனை அல்ல, நிஜம். எந்த நாட்டில் படிப்பது, எந்தக் கல்வியைப் படிப்பது என்பது மாணவர்களின் தேர்வுதான். அரசு தலையிடாது. இத்திட்டத்திற்காக நடப்பாண்டில் மட்டும் 70 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது அரசு. இந்தத் திட்டம் இந்தியாவில் பிற எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படவில்லை.

வசதி படைத்தவர்கள் மட்டுமே, உயர் வகுப்பினர் மட்டுமே விமானத்தில் ஏற முடியும், வெளிநாடு செல்ல முடியும், படிக்க முடியும், வசதி வாய்ப்பினைப் பெறலாம் முடியும், சமூகக் கௌரவத்தைப் பெற முடியும் என்ற நிலையை மாற்றி, சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மாணவ மாணவியர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளவர்களும் விமானத்தில் பயணிக்க முடியும், வெளிநாடுகளுக்குச் செல்ல முடியும், விரும்புகிற நிறுவனத்தில், விரும்புகிற உயர் கல்வியைப் பெற முடியும் நிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தியிருக்கிறார். ‘அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வித் திட்டம்’ என்பது தி.மு.க.வின் தேர்தல் அறிவிக்கப்பட்ட அறிவிப்பில், விளம்பரம் செய்யப்பட்ட திட்டமல்ல.

கல்வி அறிவைப் பெறுவதற்குத் தடை விதித்தது, உயர்ந்த சாதியினருக்கே படிப்பு வரும், அவர்களால் மட்டுமே படிக்க முடியும், அவர்களுக்கு மட்டுமே அதற்கான உரிமை இருக்கிறது, பிற சாதியினருக்குப் படிப்பு வராது, அவர்களால் படிக்க முடியாது, அதற்கான உரிமை அவர்களுக்கு இல்லை என்று சொன்னது இந்து மதம். அந்தக் கற்பித்தத்தை உடைத்தெறிந்து எல்லாரும் படிக்க வேண்டும், எல்லாராலும் படிக்க முடியும், அதற்கான உரிமை எல்லாருக்கும் இருக்கிறது, அதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்துவேன் என்று சொல்வது – முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு.

”SC – ST மாணவர்கள் நெஞ்சங்களில் கற்சிலையாக பதிந்திருக்கும் முதலமைச்சர்” : எழுத்தாளர் இமையம்!

சமத்துவத்தைத் தடுப்பது, மக்களைப் பிளவுபடுத்துவது, பெண்களை இழிவுபடுத்துவது, தீண்டாமையைக்கடைப்பிடிப்பது, மக்களைத் தடுப்பது, சாதியை அழியாமல் பாதுகாப்பது, மூடநம்பிக்கை களைத் தொடர்ந்து கட்டமைப்பது, வறுமை, நோயை, பிறப்பை, முன் ஜென்மத்தோடு, பாவபுண்ணியத்தோடு இணைத்ததுதான் மதம் தந்த பரிசு. ‘அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்ட’த்தைத் தந்தது ஸ்டாலினின் அரசு. எது வெகுமதியான பரிசு?

வெகு அபூர்வமாகத்தான் வறியவர்களை உயர்த்துவதற்கான அன்பால் நிறைந்த கரங்கள் நம்மை நோக்கி நீளும். அந்தக் கரங்களைப் பற்றிக்கொள்வது நம் கடமை. SC – ST மாணவர்களை நோக்கி மட்டுமல்ல, அம்மக்களை நோக்கியும் ஸ்டாலினின் கரங்கள் நீண்டு இருக்கின்றன. அன்பைக் காட்ட, அரவணைத்துக் கொள்ள, கைக்கி விடுவதற்காக.

SC – ST மாணவ மாணவிகள், வெளிநாடுகளில் அவர்கள் விரும்பும் உயர் கல்வியை வழங்குவது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு முக்கியமானது, தமிழ்நாட்டில் கல்விச் சூழலை மேம்படுத்துவது முக்கியமாகும் என்று எண்ணிய முதலமைச்சர், SC – ST மாணவ மாணவிகள் தங்கிப் பயந்து வரும் விடுதிகளை மேம்படுத்துகிறார்கள். பழைய விடுதிக் கட்டடங்களை எல்லாம் இடித்துவிட்டு புதிய கட்டடங்களாகக் கட்டப்பட்டு வருகின்றன. அந்த விதத்தில் சைதாப்பேட்டையிலுள்ள எம்.சி. ராஜா கல்லூரி மாணவர் விடுதியின் பழைய கட்டடம், 44 கோடி செலவில் தற்போது 8 மாடிகள் கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தற்போது சென்னையின் அடையாளங்களில் எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதியும் ஒன்றாக உள்ளது.

கல்வி கற்கிற இடங்களில், கல்வி கற்பதற்காக தங்கியிருக்கிற இடங்களில் சாதி பாகுபாடற்ற, வேறுபாடற்ற சூழல் நிலவ வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளின் கீழ் இயங்கிவந்த அனைத்து வகையான விடுதிகளின் பெயர்களையும் நீக்கிவிட்டு, ‘சமூகநீதி நலவிடுதிகள்’ பெயரில் அழைக்கப்படும் என்று அறிவித்து, அரசாணையும் வெளியிட்டு பழைய பெயர்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளையும் முதலமைச்சர் எடுத்துள்ளார்.

“புதிய பெயர் வைப்பதினால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப் போகிறது?” என்று பலர் கேட்கிறார்கள். அதற்கு, “ஒரு சொல்லின் வழியாக சாதி சார்ந்த இழிவுகள் நிகழ்ந்துவருகின்றன. அது இனி நடக்கக் கூடாது. மாறும். மாறியே தீர வேண்டும்” என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். 21ஆம் நூற்றாண்டிலும் பழமைவாதம் பேசிக்கொண்டிருக்க, பிற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையில்லை என்பது முதலமைச்சரின் நோக்கமாக உள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவ மாணவியர் விடுதிகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவ மாணவியர் விடுதிகள் குறிக்கும் சொற்கள் வெறும் சொற்களா? இச்சொற்கள் மாணவ மாணவிகளிடையே மேல் - கீழ், உயர்வு - தாழ்வு என்ற மனவேறுபாட்டை உருவாக்குகிறது. இச்சொற்கள் உளவியல் ரீதியான அழுத்தத்தை, அவமானத்தை உருவாக்குகிறது.ஆகவே சாதி ரீதியிலான பெயர்கள் கொண்டவிடுதிகளின் பெயர்களை அகற்றுவது அவசியம் என்று எண்ணித்தான் இக்காரியத்தை முதலமைச்சர் செய்திருக்கிறார்.

புதிய பெயர் வைத்ததில் நுண் அரசியல் இருக்கிறது. தமிழ்நாட்டின் சமூக உளவியலை முதலமைச்சர் நன்கு அறிந்திருக்கிறார். தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா என்பதே சாதியத்தைப் போற்றுகிற சமூகம் தானே. பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகளுக்கிடையே சாதி சார்ந்த பெருமித உணர்வு இல்லை என்று சொல்ல முடியுமா? நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களை சாதியக் கண்தானே பார்க்கிறோம். எந்தெந்த விதத்தில் சாதி சார்ந்த பாகுபாடுகள் இருக்கிறதோ அவற்றையெல்லாம் நீக்கியே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

அரசால் நடத்தப்பட்டுவரும் விடுதிகளில் சாதி சார்ந்த அடையாளங்களை நீக்குவதற்கு ‘சமூகநீதி நல விடுதிகள்’ என்று எப்படிப் பெயர் மாற்றினரோ அதே மாதிரி ‘காலனி’ என்ற சொல் அரசின் ஏழு ஆவணங்களில் இடம்பெற்றுள்ளது. அச்சொல் இம்மண்ணின் பூர்வகுடி மக்களை இழிவு படுத்தும் சொல்லாக இருக்கிறது. அச்சொல்லையும் அரசு ஆவணங்களிலிருந்து நீக்கி காலனி என்ற சொல்லுக்கு மாற்றாக மலர்களின் பெயர்கள், பழங்களின், தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டிருக்கும் நதிகளின், அறிவியல் அறிஞர்களின், புலவர்களின் பெயர்கள் வைக்கப்படும் என்று அறிவித்து, அதற்கான நடவடிக்கைகளையும் (நகர்ப்புறங்களில் இருக்கும் ‘காலனி’ என்ற சொல் மாற்றப்படாது) முதலமைச்சர் எடுத்துவருகிறார்.

இந்த மண்ணின் பூர்வகுடிகளாக இருப்பவர்கள் SC – ST மக்களே. அவர்களுடைய கலையை, பண்பாட்டை, நாகரிகத்தை, மொழியை, இலக்கியத்தை, மீட்டுரு வாக்கம் செய்ய வேண்டும். இச்சமுதாயத்திற்காக உழைத்த தியாகிகளைப் போற்ற வேண்டும் என்ற நோக்கில் ‘ஆதிகலைக்கோல்’ என்ற மாபெரும் பண்பாட்டு நிகழ்வு, பல கோடி செலவில் நடைபெற்றது. முதலமைச்சர் உத்திரவிட்டார். ‘தாட்கோ’ நிறுவனம்தான் இந்தியாவே கவனிக்கிற அளவுக்கு ‘ஆதிகலைக்கோல்’ பெரும் கலை விழாவை நடத்தியது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர், மருத்துவர் மதிவேந்தன், கூடுதல் கவனமும், அக்கறையும் கொண்டு, நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தினார். இந்நிகழ்வை மட்டுமல்ல, SC – ST மக்களுக்கான நலத்திட்டங்களைக் கொண்டுபோய் சேர்ப்பதில் தீவிரம் காட்டி வருபவர். சமூக அக்கறை உள்ளவர். வேகமாக செயல்படக்கூடியவர். இந்நிகழ்வுக்காக SC – ST செயலர் லட்சுமி பிரியா, ஆணையர் ஆனந்த், ST இயக்குநர் அண்ணா துரை, ‘தாட்கோ’ நிர்வாக இயக்குநர் கந்தசாமி ஆகியோர் தங்களுடையஉழைப்பினை முழுமையாக்கத் தந்தார்கள்.

அதிகாரிகளுடைய ஒத்துழைப்பும் ஈடுபாடும் அக்கறையும் இல்லையென்றால், எந்தத் திட்டமும், சட்டமும் வெற்றி பெறாது. நல்ல நிர்வாகத்திற்குத் திறமைவாய்ந்த, சமூக அக்கறையுள்ள அதிகாரிகளும் வேண்டும். இந்த விழா அரசியல் லாபத்திற்காக, அரசியல் விளம்பரத்திற்காக நடத்தப்பட்டதல்ல, இம்மண்ணின் பூர்வகுடி மக்களுடைய கலை, பண்பாடு, மொழி, இலக்கியம் மிகவும் மேம்பட்டது, அதை உலகறியச் செய்ய வேண்டும் என்ற முதலமைச்சரின் உயரிய நோக்கம்தான் காரணம்.

SC – ST மக்களுடைய வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்ற லட்சிய நோக்கத்திற்காகப் போராடிய தலைவர்களைத் தமிழ்ச் சமூகம் போற்ற வேண்டும். அவர்களுக்கு நன்றி உணர்வோடு இருக்க வேண்டும், அவர்களைக் கௌரவப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அயோத்திதாசர் மணிமண்டபத்தையும் எல். இளைய பெருமாள் மணிமண்டபத்தையும் கட்டியுள்ளார் முதலமைச்சர். ‘இந்த மணிமண்டபங்கள் கட்டப்பட்டதின் நோக்கம் தமிழ்ச் சமூக வாழ்வின் மேன்மைக்காகவும் உயர்வுக்காகவும் போராடிய மாமனிதர்களைப் போற்றுவதும் கொண்டாடுவது. அரசினுடைய கடமை மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த சமூகத்தின் கடமை’ என்றும் முதலமைச்சர் கூறியிருக்கிறார்.

தமிழ்ச் சமூக வாழ்வின் உயர்வுக்காகப் போராடிய மனிதர்களை வணங்குவது, போற்றுவதும் சமூகத்தின் கடமைதானே. வரலாற்றை அறியாத சமூகம் மேன்மை அடையாது. யாரோ, எப்போதோ போட்ட பாதையில்தான் நாம் இப்படி நடந்துகொண்டிருக்கிறோம். இன்று நாம் அனுபவிக்கிற அனைத்து வசதிகளும், வாய்ப்புகளும் நேற்றைய மனிதர்களுடைய உழைப்பால் விளைந்தவைதான்.

தமிழ்நாட்டில் மலைப் பகுதிகளிலும் தரைப் பகுதிகளிலும் வாழக்கூடிய 37 பிரிவுகளிலான பழங்குடி மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அவர்களுடைய வாழ்விடம் அனைத்து விதமான கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்த, பொருளாதார ரீதியிலான வளத்தை ஏற்படுத்தியது ‘தொல்குடி வேளாண்மை மேலாண்மை (ஐந்திணை) திட்டம்’ முதலமைச்சர் புதிதாக உருவாக்கியிருக்கிறார். நான்காண்டுகளுக்குள் இத்திட்டத்தைச் செயல்படுத்த ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறார். ஆண்டுக்கு 250 கோடி என்ற அளவில் செலவிடப்பட்டு, இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ST மக்களுடைய வாழ்க்கையில் பெரும் மாற்றம் நிகழ்ந்து வருகிறது.

தமிழ்நாட்டில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்படும் SC – ST மக்களுக்காக ஒரு சட்டப் பாதுகாப்பு வேண்டும், பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அதற்காக ஒரு அமைப்பு வேண்டும் என்ற அடிப்படையில் முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு மாநில SC – ST ஆணையத்தை ஏற்படுத்தினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு SC – ST ஆணையத்தின் மூலம் விரைவில் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. SC – ST மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும், அவர்களைப் பாதுகாப்பதிலும், இந்தியாவில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது. சாதி சார்ந்த இழிவுகளை அகற்றுவதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேகமாக வருகிறார். ‘சிறந்த செயலே – சிறந்த சொல்’ என்பதுதான் முதலமைச்சரின் வாழ்க்கை நெறியாக இருக்கிறது. அவருடைய அரசின் முழக்கமாகவும் இருக்கிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இப்போது புறக்கணிக்கப்படுகிற துறையாக இல்லாமல் போற்றப்படுகின்ற ஒரு துறையாக, புதிய முகத்தை, புதியதாக வெளிச்சத்தைப் பெற்ற துறையாக இருக்கிறது.

SC – ST மாணவ மாணவிகளின் கல்வி, அம்மக்களுடைய வாழ்க்கைத் தரம்,பொருளாதார தரம் உயர வேண்டும் என்ற பெரும் கனவோடு இந்தியாவில் பிற எந்த மாநிலங்களிலும் செய்யாத, செய்ய இயலாத திட்டங்களை எல்லாம் நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கிற தமிழ்நாட்டின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முகமும் பெயரும் SC– எஸ்.டி.மாணவ மாணவிகளின் நெஞ்சங்களில், அம்மக்களின் மனங்களில் கற்சிலையாக என்றும் பதிந்திருக்கும்.

banner

Related Stories

Related Stories