தமிழ்நாடு

தூத்துக்குடி - மும்பைக்கு புதிய ரயில் எப்போது? : மக்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி MP!

தூத்துக்குடி - மும்பைக்கு புதிய ரயில் எப்போது? என மக்களவையில் கனிமொழி MP கேள்வி எழுப்பி உள்ளார்.

தூத்துக்குடி - மும்பைக்கு புதிய ரயில் எப்போது? : மக்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி MP!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி இன்று எழுத்துபூர்வமான கேள்விகளை ரயில்வே அமைச்சரிடம் எழுப்பினார்.

அதில், ”தூத்துக்குடிக்கும் மும்பைக்கும் இடையே மேம்படுத்தப்பட்ட ரயில்வே இணைப்புக்கான முக்கியத்துவம் வாய்ந்த தேவை இருப்பதை ஒன்றிய அரசு அறிந்திருக்கிறதா… இதன் அடிப்படையில் லோக்மான்ய திலக் எக்ஸ்பிரசை (ரயில் எண். 11043/11044) தூத்துக்குடிக்கு நீட்டிப்பதன் மூலமோ அல்லது புதிய நேரடி ரயில் சேவையை அறிமுகப்படுத்துவதன் மூலமோ இத்தேவையை நிறைவேற்ற ஒன்றிய அரசு முனைந்திருக்கிறதா?

இந்த சேவை அறிமுகப்படுத்தப்படுவதற்கு கால நிர்ணயம் ஏதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?. தூத்துக்குடிக்கு ரயில் இணைப்பை மேம்படுத்த வேறு ஏதேனும் நடவடிக்கைகளை எடுக்க அரசு திட்டமிட்டுள்ளதா மற்றும் அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?” ஆகிய கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

இக்கேள்விகளுக்கு ஒன்றிய ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதிலில்,”மும்பை - தூத்துக்குடிக்கு இடையே 19567/19568 எண் கொண்ட தூத்துக்குடி - ஓகா விவேக் எக்ஸ்பிரஸ் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி பயணிகளின் வசதிக்காக, இந்திய ரயில்வே 19.07.2024 முதல் வாரத்திற்கு இரு முறை இயக்கப்படும் 16765/16766 மேட்டுப்பாளையம் -தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலை அறிமுகப்படுத்தியிருக்கிறது. மேலும், திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் (16791/16792) சேவை 15.08.2024 முதல் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தவிர போக்குவரத்து தேவைகள், செயல்பாட்டு சாத்தியக் கூறுகள், திட்டத்துக்கு தேவையான வளங்கள் கிடைக்கும் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து , புதிய ரயில்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் ரயில் சேவைகளை நீட்டித்தல் ஆகியவை ரயில்வேயில் தொடர்ந்து நடைபெற்று வரும் செயல்முறைகளாகும்” என்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories