தமிழ்நாடு

இராமேஸ்வரத்துக்கு கூடுதல் ரயில்கள்? : டி.ஆர்.பாலு MP கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்!

இராமேஸ்வரத்துக்கு கூடுதலாக ரயில்கள் விடப் படுமா? என நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

இராமேஸ்வரத்துக்கு  கூடுதல் ரயில்கள்? : டி.ஆர்.பாலு MP கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத் தொடரில்,இராமேஸ்வரத்துக்கு கூடுதலாக ரயில்கள் விடப் படுமா? என நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு MP கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில்,அண்மையில் பாம்பன் கடல் பகுதியில் புதிய இரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஏற்கனவே இருந்த, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பாலம் பழைமையின் காரணமாக வலுவிழந்த காரணமாக புதிய இரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் காலப் பாலம் போல புதிய இரயில் பாலமும் அடியில் கப்பல்கள் இடையூறின்றி செல்ல ஏதுவாக, லிஃப்ட் போல், உயர்த்தி இறக்கும் வசதிகளுடன் அமைக்கப் பட்டுள்ளது. புதிய பாம்பன் இரயில் பாலம் திறக்கப் பட்ட பின் இராமேஸ்வரம் வரை முன்னர் இருந்தது போல இரயில் போக்குவரத்து தொடங்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், பல்லாயிரம் சுற்றுலாப் பயணிகளும் பிரசித்திபெற்ற இராமேஸ்வரம் கோயிலுக்கு இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு பயணிகள் இரயில் சேவைகள் எண்ணிக்கை அதிகரிக்கப் படுமா? தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள நகர்களுக்கும் புதிய எக்ஸ்பிரஸ் இரயில்கள் இயக்கப் படுகின்றனவா?

மேலும், பாம்பன் புதிய தூக்கு பாலம் இயக்கத்துக்கு வந்த உடனேயே தொழில்நுட்ப சிக்கல் காரணமாக பழுதடைந்து பல நாட்கள் இயக்க முடியாமல் இருந்ததா? தற்பொழுது, பழுது தான் சரிசெய்யப் பட்டு தூக்கு பாலத்தின் அடியில் கப்பல்கள் இடையூறின்றி செல்கின்றனவா? அப்படியானால் இவற்றின் விவரங்கள் என்ன? என்று கேட்டு இரயில்வே அமைச்சரிடம் திமுக நாடாளுமன்ற மக்களவைக் குழுத்தலைவர் டி.ஆர்.பாலு வினா எழுப்பி இருந்தார்.

இதற்கு ஒன்றிய இரயில்வே அமைச்சர் அஸ்வினி குமார் வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார். அதில், " இராமேஸ்வரம் செல்லும் இரயில் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு புதிதாக தாம்பரம்- இராமேஸ்வரம் இடையே தினசரி எக்ஸ்பிரஸ் இரயில் சென்ற 6.4.2025 முதல் இயக்கப் படுகிறது. மேலும், ஏற்கனவே இராமேஸ்வரத்துக்கு மொத்தம் 28 இரயில்வண்டி சேவைகள் உள்ளன. இவை , சென்னை, கோயம்புத்தூர்,கன்னியாகுமரி, திருப்பதி, அயோத்தி, வாரணாசி (காசி), பிரயாக்ராஜ் ( அலகாபாத்),புவனேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை இராமேஸ்வரத்துடன் இணைக்கின்றன. மேலும், தமிழ்நாடு எல்லைக்கு அப்பால் உள்ள பல்வேறு மாநில இரயில்பாதைகளின் வலையமைப்புடன் இராமேஸ்வரம் இரயில்பாதை இணைந்திருப்பதால் பயணியர் சேவைக்கான தேவைகள், இரயில்பாதைகள் மற்றும் இரயில்வண்டிகளின் இயக்கம்சார் சாத்தியக்கூறுகள், நிதி உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் புதிய இரயில்கள் விடுவது குறித்த முடிவுகளை "இந்திய ரயில்வே" நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

பாம்பன் கடல்பகுதியில் உள்ள இரயில் பாதை தூக்கு பாலம் எந்த கோளாறும் இன்றி கப்பல் போக்குவரத்துக்கு வசதியாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories