நடப்பு ஆண்டு மாம்பழ விளைச்சல் அதிகமாக உள்ள நிலையில் விலையில் கடும் வீழ்ச்சியும் விற்பனையும் முழுமையாக இல்லாததால் உரிய லாபம் கிடைக்காமல் மாம்பழ விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிடைத்த விலைக்கு விற்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு மாம்பழ விவசாயிகள் நலன் காக்க ஒன்றிய, மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? இது போன்ற இன்னல்களை எதிர்கொள்ள மாம்பழ ஏற்றுமதி மை ஊக்குவிக்கவும் இன்ன பிற ஆதரவுகளை அளிக்கவும் மாங்கனி வாரியம் அமைக்கவும் அரசு முன்வருமா? என்று மக்களவையில் திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலனுக்கான ஒன்றிய இணை அமைச்சர் ராம்நாத் தாக்கூர் நாடாளுமன்ற மக்களவையில் அளித்த எழுத்துபூர்வ பதிலில்," நடப்பு மாம்பழ பருவத்தில் மாம்பழங்கள் விளைச்சல் சென்ற ஆண்டை விட 5 லட்சம் டன் அதிமாக, 228.37 லட்சம் டன் அளவில் உள்ளது. தென் மாநிலங்களில் மாம்பழ விளைச்சல் இந்த ஆண்டு அதிகமானதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது போன்ற சூழல்களில் மாம்பழ உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் அளித்திட ஒன்றிய அரசின் "சந்தை இடையீடு திட்டம்" செயல் படுத்தப் படுகிறது .
இத்திட்டத்தின் கீழ் விருப்ப ப் படும் மாநில அரசு உபரியாக உள்ள மாம்பழத்தை கொள்முதல் செய்து விவசாயிகளின் இழப்பை சரி செய்யலாம். இதனால் ஏற்படும் நஷ்டத்தில் 50 விழுக்காடு வரை மாநில அரசுகள் ஏற்க முன்வர வேண்டும். மாம்பழ விளைச்சலை அதிகரிக்கவும் அதற்கு தக்க உத்திகள் தொடர்பான அறிவுரைகளையும் மாம்பழ விவசாயிகளுக்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் வழங்கி வருகிறது.
மேலும், ஏற்றுமதி தொடர்பான உட்கட்டமைப்பு, பதப்படுத்தல் போன்றவைக்கு ஒன்றிய அரசின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மாம்பழ விவசாயிகளுக்கு ஏற்றுமதிக்கு தேவையான உரிய உதவிகளை அளிக்கின்றன" என தெரிவித்துள்ளார். அதேநேரம், மாங்கனி வாரியம் அமைப்பது குறித்து எந்த தகவலையும் அமைச்சர் தனது பதிலில் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.