தமிழ்நாடு

100 நாள் வேலை திட்டம் - ரூ. 4034 கோடி நிலுவைத் தொகை : மக்களவையில் கேள்வி எழுப்பிய திமுக MPக்கள்!

100 நாள் வேலை திட்டத்திற்கான நிலுவைத் தொகையை விடுவிக்காதது ஏன் என திமுக எம்.பிக்கள் மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

100 நாள் வேலை திட்டம் - ரூ. 4034 கோடி நிலுவைத் தொகை : மக்களவையில் கேள்வி எழுப்பிய திமுக MPக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மக்களவையில் தி.மு.க எம்.பிகள் 100 நாள் வேலை திட்டம் குறித்து சரமாரியாக கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் (MGNREGS) கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பு பெற்ற நபர்களின் எண்ணிக்கை மற்றும் நாட்களின் விவரங்கள் குறித்து தென்சென்னை திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இத்திட்டத்திலுள்ள நிதி பற்றாக்குறைகள், நிலுவையில் உள்ள ஊதியம், பிரதான் மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்படுவது மற்றும் தாமதமாவது என பல்வேறு விசயங்கள் குறித்து கேட்டுள்ளார்.

கிராமப்புற சாலை மேம்பாட்டில், குறிப்பாக தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களில், மாநிலங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வை நிவர்த்தி செய்ய அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் கிராமப்புற திட்டமிடல் மற்றும் சிறந்த நடைமுறைகளை ஒன்றிய அரசு தமிழ்நாடு மாதிரியை தேசிய அளவில் கொண்டு செல்ல வகுத்துள்ள திட்டங்கள் குறித்தும் தமிழச்சி தங்கபாண்டியன் கேட்டுள்ளார்.

நூறு நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்துக!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் (MGNREGS) சிறப்பம்சங்களை விளக்கக் கோரி நாடாளுமன்றத்தில் கள்ளக்குறிச்சி திமுக மக்களவை உறுப்பினர் மலையரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில், கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்குள் அத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை என்ன? கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்குள் MGNREGS ஐ செயல்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதியின் அளவு? நிலையான வாழ்வாதாரங்களை வழங்குதல், கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் வறுமையை ஒழித்தல் ஆகியவற்றில் அதன் செயல்திறனை அளவிடுவதற்கு MGNREG திட்டத்தின்கீழ் அரசு செய்துள்ள மதிப்பீட்டு விவரங்கள் என்ன?

வெறும் உடல் உழைப்புக்கு அப்பால் திறன் வாய்ப்புகள் அல்லது வாழ்வாதார உருவாக்கத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் MGNREG திட்டத்தை விரிவுபடுத்த அல்லது சீர்திருத்த அரசாங்கத்திடம் உள்ள திட்டங்கள் என்ன? மேலும் பணி தரத்தை மேம்படுத்துதல் மற்றும் மேலாண்மைக்கான தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பது ஆகியவை குறித்த திட்டங்கள் என்ன என அவர் விரிவான விளக்கம் கோரியுள்ளார்.

நூறுநாள் வேலை திட்டத்தின்கீழ் உள்ள நிலுவைத் தொகைகள் எவ்வளவு?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்ட மொத்த தொகையை ஆண்டுவாரியாக வெளியிடுமாறு இன்று நாடாளுமன்றத்தில் தேனி மக்களவை உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் ஒன்றிய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 2024-2025 நிதியாண்டில் இத்திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ. 4034 கோடி நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்காதது ஏன் என்றும் அவர் கேட்டுள்ளார்.

நூறு நாள் வேலை திட்டத்தில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பெண்களின் வேலைவாய்ப்பு விகிதம் (MGNREGS) கிராமப்புறங்களில் பல ஆண்டுகளாகக் குறைந்துள்ளதற்கான காரணங்கள் குறித்து பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளில், மாநிலம்/யூனியன் பிரதேசங்கள் வாரியாக, MGNREGS இன் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை என்ன? MGNREGS இன் கீழ் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பை அதிகரிக்க அவர்களுக்கு நிலையற்ற/அட்டவணை வேலைகளை வழங்க அரசாங்கம் முன்மொழிகிறதா? அப்படியானால், அதன் விவரங்கள்; மற்றும் இது தொடர்பாக அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள்? என்றும் அவர் கேட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories