தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை உறுப்பினர்களாக நியமிக்கும் சட்டத்திருத்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சரிடம், திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி சில கேள்விகளை முன்வைத்தார்.
பஞ்சாயத்துகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கிய மாநிலங்கள் எவை? இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்ட ஆண்டு குறித்த தகவல்கள் என்ன? ’
அரசு நிர்வாகத்தில் மாற்றுத் திறனாளிகளின் பிரதிநிதித்துவம் தொடர்ந்து குறைவாக இருக்கும் நிலையில், நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சிஅமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு தேசிய அளவிலான கொள்கையை கொண்டு வருவதற்கோ, இது தொடர்புடைய சட்டங்களை திருத்தவோ ஒன்றிய அரசு திட்டம் வைத்திருக்கிறதா? அப்படியானால், அதன் விவரங்கள்;
மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம், தேசிய மாற்றுத் திறனாளிகள் ஆணையம் மற்றும் நிபுணர் குழுவிடமிருந்து ஏதேனும் பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளதா, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?
ஜனநாயக நிர்வாகத்தின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத் திறனாளிகளின் அரசியல் பங்கேற்பு மற்றும் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கு ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள அல்லது மேற்கொள்ள உத்தேசித்துள்ள நடவடிக்கைகள் என்ன? ” ஆகிய கேள்விகளை கனிமொழி எம்பி எழுப்பினார்.
இந்தக் கேள்விகளுக்கு ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் பி.எல்.வர்மா அளித்த பதிலில், “கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் இந்திய அரசியலமைப்பின் 7 ஆவது அட்டவணையின்படி மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குள் வருபவையாகும்.
பெண்கள், பட்டியல் சமுதாயத்தினர், பழங்குடியினர் ஆகியோருக்கான இடஒதுக்கீடுகளைப் போலல்லாமல், பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு இந்திய அரசியலமைப்பின் கீழ் வழங்கப்படவில்லை.
அதேநேரம், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் (2016), மாற்றுத் திறனாளிகளுக்கு சமத்துவம் மற்றும் பாகுபாடுகள் காட்டப்படாத உரிமையை வழங்குகிறது இச்சட்டத்தின்படி மாற்றுத் திறனாளிகள் பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை.
இச்சட்டத்தின்படி ஒன்றிய மற்றும் மாநில மாற்றுத் திறனாளிகள் ஆலோசனை வாரியங்களில் மாற்றுத் திறனாளிகளின் பங்கேற்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜனநாயக நிர்வாகத்தில் மாற்றுத் திறனாளிகளின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காகவும், இடஒதுக்கீடு நோக்கத்திற்கான பதவிகளை அடையாளம் காண்பதற்கான நிபுணர் குழுக்களில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பதையும் மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் உறுதி செய்கிறது.
இச்சட்டத்தின் பிரிவு 11, அனைத்து வாக்குச் சாவடிகளும் மாற்றுத் திறனாளிகள் அணுகக் கூடியதாகவும், தேர்தல் செயல்முறை தொடர்பான அனைத்து நடைமுறைகளும் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கக் கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்ய இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் மாநிலத் தேர்தல் ஆணையங்களை கட்டாயப்படுத்துகிறது.
மாற்றுத் திறனாளிகள் மேப்பிங், முறையான வாக்காளர் விழிப்புணவு மற்றும் தேர்தல் பங்கேற்பு (SVEEP) ஆகிய திட்டங்களின் மூலம் மாற்றுத் திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுதல் மற்றும் வாக்குப் பதிவை அவர்கள் எளிதில் அணுகக்கூடியதாக மாற்ற இந்தியத் தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது,
குறிப்பிடத் தக்க அளவு மாற்றுத் திறன் கொண்ட மாற்றுத் திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வசதி போன்றவை இதில் அடங்கும். தேர்தல் ஆணையம் ‘சக்ஷம் (Saksham)’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த செயலி மூலம் மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிகளுக்கு வந்து செல்வதற்கான சக்கர நாற்காலி வசதி மற்றும் போக்குவரத்து வசதி போன்ற உதவிகளைப் பெறுவதற்கு வழிகோலுகிறது” என தெரிவித்துள்ளார் ஒன்றிய இணை அமைச்சர்.