2019 முதல் 2021 வரையிலான நிதியாண்டுகளுக்கான கல்வி உரிமை (RTE) திருப்பிச் செலுத்தும் நிதியை தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுவிக்காமல் இருப்பது குறித்து மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில் அவர், தொடர்ந்து தாமதம் ஏற்படுவதற்கான காரணங்களையும் கேட்டுள்ளார். சமக்ர சிக்ஷா அபியானில் இருந்து RTE திருப்பிச் செலுத்தும் நிதிமுறையை துண்டிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவை ஒன்றிய அரசுக்கு சுட்டிக்காட்டிய அவர், தேசிய கல்விக் கொள்கைகளை ஏற்க மறுத்த மாநிலங்களுக்கு RTE திருப்பிச் செலுத்துதல்கள் எவ்வாறு கையாளப்படும் என்பது குறித்து தெளிவான கொள்கையை ஒன்றிய அமைச்சகம் வெளியிடவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இயற்கை பேரிடர்களுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள்!
புயல், மழை, பூகம்பம், வெள்ளம் போன்றவற்றால் ஏற்படும் பேரழிவை முன்னறிவிப்பதற்காக அரசாங்கம் முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்புகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அரக்கோணம் மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
புயல்கள் மற்றும் பிற இயற்கை பேரிடர்களால் தொடர்ந்து பாதிக்கப்படும் மாநிலங்களில் முன்கூட்டியே அறிவிக்கும் எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்த ஒன்றிய அரசு இதுவரையில் ஏற்படுத்தியுள்ள நடவடிக்கைகள்பற்றிய விவரங்கள் என்ன? மற்றும் மழை, பூகம்பம், வெள்ளம் போன்றவற்றால் ஏற்படும் சேதங்களைத் தடுப்பதற்கான கடந்த ஐந்து ஆண்டுகளின் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளின் பயன்பாடு மற்றும் அதன் மூலம் தடுக்கப்பட்டதைக் காட்டும் தரவு அரசாங்கத்திடம் உள்ளதா, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார்.
சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு!
தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மையம் (NCCC) பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தும் திட்டங்களின் விவரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக பொள்ளாச்சி தொகுதி மக்களவை உறூப்பினர் கே. ஈஸ்வரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் NCCC க்காக ஒதுக்கப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட தொகை எவ்வளவு? காவல்துறை அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் பிற பணியாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சைபர் குற்ற விழிப்புணர்வு பட்டறைகளின் எண்ணிக்கை என்ன? மற்றும் நாட்டின் சைபர் குற்றங்கள் மற்றும் சைபர் பாதுகாப்பைக் கையாள்வதில் பல்வேறு நிறுவனங்களிடையே முறையான ஒருங்கிணைப்பு உள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன என்றும் அவர் கேட்டுள்ளார்.