கேரளாவில் கண்டெய்னர் லாரியிலிருந்து 3.24 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், திருவாரூரை சேர்ந்த பா.ஜ.க.வினர் உள்ளிட்ட 11 பேரை கைது செய்து கேரள தனிப்படை காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே கொல்லம் - கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மாதம் 30 ஆம் நாள் அன்று கண்டெய்னர் லாரியிலிருந்து 3.24 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது.
இது குறித்து ஆலப்புழா கரீலகுலஞர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 பேர் அடங்கிய கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதற்காக தென்காசி மாவட்டம் குற்றாலம், திருப்பூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கி திட்டம் தீட்டியதாகவும் தெரியவந்துள்ளது. கரீலகுலஞர காவல் ஆய்வாளர் நிஜாமுதீன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட வாகனங்களை சிசிடிவி காட்சிகள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு வாகனங்களில் ஒன்றான இனோவா வாகனம் ஏற்கனவே திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இதில் தொடர்புடைய மற்றொரு மகேந்திரா ஸ்கார்பியோ வாகனம் திருவாரூர் நகர் பகுதியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி நிர்வாகி ஸ்ரீராம் என்பவருக்கு சொந்தமானது என கண்டறிந்து இன்று ஸ்ரீராம் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து, வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய திருவாரூர் மாவட்ட பாஜக நிர்வாகிகளான துரையரசன், சதீஷ், ராஜேஷ், ஹரிகுமார் உள்ளிட்ட 11 பேர் குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் தலைமறைவான நிலையில் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது.
பிரபல மலையாள திரைப்பட நடிகர் மம்முட்டி நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான "கண்ணூர் ஸ்குவாட்" திரைப்பட பாணியில் கேரள தனிப்படை காவல்துறை குற்றவாளிகளை பல்வேறு இடங்களில் தேடி திருவாரூரில் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.