நாட்டின் தனிநபர் வருமானத்தில், தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருப்பதாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர் வருமானத்தில் பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் தொடர்ந்து பின்தங்கி வரும் நிலையில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா போன்ற தென் மாநிலங்களில், தனிநபர் வருமானம் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
தனிநபர் வருமானம் தேசிய அளவில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 710 ரூபாயாக உள்ள நிலையில், தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ஒரு லட்சத்து 96ஆயிரத்து 309 ரூபாயாகும். இது இந்திய அளவில் 2-வது இடமாகும். கடந்த அதிமுக ஆட்சியின் இறுதியாண்டான 2020-21-ல் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 1.43 இலட்சம் ரூபாய் மட்டுமே.
திராவிட மாடல் ஆட்சியில், கடந்த நான்கு ஆண்டுகளில் சராசரியாக 8.15 சதவீதம் வளர்ச்சியோடு 2024-25 ஆம் ஆண்டில் தனி நபர் வருமானம் 1.96 இலட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த ஆட்சிக் காலத்தில், 2016-17 ஆம் ஆண்டு முதல் 2020-21 ஆம் ஆண்டு வரை 4.42 சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது.
இத்தகைய உயரிய சராசரி வளர்ச்சியானது, வெற்றிகரமான திராவிட மாடல் ஆட்சிக்கு ஒரு சான்றாகும். தேசிய சராசரியுடன் ஒப்பிடுகையில் 2024-25 ஆம் ஆண்டில் தேசிய சராசரி தனிநபர் வருமானம் 1.14 இலட்சம் மட்டுமே. 2014-15 முதல் 2024-25 வரையிலான கடந்த பத்தாண்டு தேசிய சராசரி வளர்ச்சி விகிதம் 57 சதவீதம் மட்டுமே. ஆனால், அனைவரையும் வியக்க வைக்கும் வகையில், தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி விகிதமோ 83.3 சதவீதம் ஆகும்.
இந்தச் சாதனையானது, திராவிட மாடலின் தொலைநோக்கு திட்டங்கள், தொழில் வளர்ச்சி, முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களின் வெற்றியைப் பிரதிபலிக்கிறது. "எல்லார்க்கும் எல்லாம்" என்ற உன்னத கொள்கையோடு செயல்பட்டு வரும் நமது திராவிட மாடல் ஆட்சிக்குக் கிடைத்த அடுத்த மணிமகுடம் தான் இது.
இந்நிலையில், இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில், தனிநபர் வருமானக் குறியீட்டில் தேசிய சராசரியை விஞ்சினோம்! கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்! என்று குறிப்பிட்டுள்ளார். அடுத்து வரவுள்ள திராவிட மாடல் 2.0-இல் தனிநபர் வருமானக் குறியீட்டில், முதல் மாநிலமாக உயருவோம்! என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.