சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை நகரம் முழுவதும் 118.9 கி.மீ நீளத்திற்கு மூன்று வழித்தடங்களுடன் மிகவும் எதிர்பார்க்கப்படும் இரண்டாம் கட்டத் திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 4-ல் கலங்கரை விளக்கம் நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரையிலான 10.03 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் ITD சிமென்டேஷன் இந்தியா நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு இதற்காக 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய மேம்பாட்டு வங்கி ஆகியவை நிதியுதவி வழங்குகின்றன.
வழித்தடம்-4-ல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் “மயில்”, மே 02, 2024 அன்று பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் நிலையம் நோக்கி சுரங்கம் தோண்டும் பணியயை தொடங்கி, 2,047மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியை வெற்றிகரமாக முடித்துவிட்டு ஆற்காடு சாலையில் மீனாட்சி கல்லூரிக்கு அருகில் கோடம்பாக்கம் நிலையத்தை இன்று (23.07.2025) வந்தடைந்தது.
கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.8 கி.மீ நீளத்தில் 12 சுரங்கப்பாதை நிலையங்கள் மற்றும் 18 உயர்த்தப்பட்ட நிலையங்களை கொண்ட வழித்தடம்-4-இன் வளர்ச்சியில் இந்த சாதனை ஒரு முக்கிய படியாகும்.
பனகல் பூங்கா மற்றும் கோடம்பாக்கம் இடையிலான இந்த சுரங்கப்பாதை பிரிவு 2-ஆம் கட்டத்தின் மிகவும் நீளமான சுரங்கப்பாதை பிரிவாகும். இதில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் மயில் 190 கட்டிடங்கள் வழியாக செல்ல வேண்டியிருந்தது, அவற்றில் பெரும்பாலும் குடியிருப்பு கட்டிடங்கள், அவற்றில் 50-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் பழைய கட்டிடங்கள். மேலும், பல இரயில் பாதைகளைக் கடப்பதற்கு முன்பு, செயலில் உள்ள இரயில் பாதைக்கு இணையாக சுரங்கப்பாதையை துளையிட வேண்டியிருந்தது.
இந்த சுரங்கப்பாதை இரண்டு தேவாலயங்கள் வழியாகவும், கோடம்பாக்கம் மேம்பாலத்திற்குக் கீழேயும் சென்றது. சவால்கள் இருந்தபோதிலும், 2.047 கி.மீ நீளமுள்ள இந்த சுரங்கப்பாதை, பொதுமக்களுக்கும் தற்போதுள்ள போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் சுரங்கப்பாதை பணியை நிறைவு செய்துள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இந்தச் சாதனை, சென்னையில் மெட்ரோ இரயிலை விரிவுபடுத்துவதற்கும், நகரின் பெருகிவரும் மக்களுக்குத் திறமையான, நம்பகமான போக்குவரத்தை வழங்குவதற்கும் அதன் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.