இந்திய அளவில் வேகமாக பொருளாதார வளர்ச்சி அடையும் மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவிற்கு, தமிழ்நாட்டின் வளர்ச்சி அமைந்து வருகிறது.
ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை உருவாக்கவும், அதனை சுற்றுச்சூழலுக்கு சுகந்த வளர்ச்சியாக அமைக்கவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தொழில்வழிகாட்டி நிறுவனமான "கைடன்ஸ்" வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜெர்மனியின் முன்னணி நிறுவனமான RENK குழுமம், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சூளகிரியில் தனது அதிநவீன உற்பத்தி சேவையை தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் அர்ஜுன் டேங்கிற்கு தேவையான உதிரி பாகங்களை அளிப்பதில் இருந்து கடற்படையின் ஐஎன்எஸ் விக்ராந் போர் கப்பலுக்கு உதவும் வரை, இந்தியாவின் பாதுகாப்பு பயணத்தில் RENK முக்கிய பங்களித்து வருகிறது.
தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள புதிய சேவை, ராணுவம் மற்றும் சிவில் துறைகளுக்கு மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகளை உருவாக்குவதன் மூலம் தனது பயணத்தை தொடர இருக்கிறது.
இந்தியாவின் இரண்டு பாதுகாப்பு வழித்தடங்களில் ஒன்றான தமிழ்நாட்டை, துல்லியமான பொறியியல், பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் உயர்தர உற்பத்திக்கான உலகளாவிய மையமாக மாற்றும் வகையில் முன்னேறி வருவதாகவும் "கைடன்ஸ்" நிறுவனம் தெரிவித்துள்ளது.