உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை கடந்த ஜூலை 15 ஆம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது :-
“மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று அவர்கள் குறைகளை கேட்டு அறிந்து அதற்கு தீர்வு காணும் வகையில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சர் கடந்த 15 ஆம் தேதி சிதம்பரத்தில் துவங்கினார்.
இந்த திட்டம் பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தத் திட்டம் மூலம் பல கோரிக்கைகள் உடனே நிறைவேற்றப்பட்டு வருகிறது.
சென்னையில் 200 வார்டுகளில் 400 முகாம்கள் கணக்கிடப்பட்டு, முதற்கட்டமாக 110 கணக்கிடப்பட்டு, அதை நிறைவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. பெயர் மாற்றம், பிறப்பு சான்றிதழ், மின்சார துறைக்கான கட்டணம் கட்டும் இடத்தில் இருக்கும் பெயர் மாற்றம், வரி விதிப்பு பெயர் மாற்றங்கள் போன்ற பல்வேறு சேவைகளை இந்தத் திட்ட மூலம் வழங்கி வருகிறது.
13 துறைகளை சார்ந்த 43 சேவைகள் இங்கு செயல்படுகிறது. சுமார் 4000 பேர் இதில் திட்டத்தின் கீழ் பணிகளைப் பெற வருவார்கள் என்று குடிநீர், கழிப்பறை வசதி என பல்வேறு அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த திட்டமானது மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றிருக்கிறது. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மக்கள் மனங்களில் வைரக்கல்லாக இருக்கும்.” என்றார்.
=> திமுகவை எதிர்க்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று சீமான் உள்ளிட்டோருக்கு இபிஎஸ் அழைப்பு விடுத்தது குறித்த கேள்விக்கு...
“புலிக்கு பயந்தவர்கள் என் மீது படுத்துக் கொள்ளுங்கள்” என்ற வகையில் மனது கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைக்கு மிருக பலத்தோடு, அசைக்க முடியாத கட்டமைப்போடு திமுக இருக்கிறது. நாள்தோறும் திட்டங்கள், தினமும் மக்கள் பாராட்டும் வகையில் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் இந்த அரசை, எத்தனை அணிகள் ஒன்று சேர்ந்து வந்தாலும் இந்த அரசை அசைத்துப் பார்க்க முடியாது. 2026-ல் நமது முதலமைச்சர் மீண்டும் முதலமைச்சராவதை யாரும் தடுக்க முடியாது” என்றார்.
=> முதலமைச்சரின் உடல் நிலை குறித்த கேள்விக்கு...
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார். அவர் ஆரோக்கியமாக தான் இருக்கிறார்.
பூரண நலம் பெற்று முன்பை விட அதிவேகமாக மக்கள் பணியிலும் இயக்கப் பணியிலும் ஈடுபடுவார். இறைவன் அருள் அவருக்கு எப்போதும் துணை நிற்கும். கோடான கோடி மக்களையும் காக்கும் முதலமைச்சர் பூரண நலத்துடன் மக்கள் பணியாற்ற வருவார் என்று நம்புகிறோம்.
திருவள்ளூர் சிறுமி விவகாரத்தில், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தும், காவல்துறை முழுமையாக செயல்பட்டு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
=> கூட்டணி ஆட்சி குறித்து பாஜக - அதிமுக மாற்றி மாற்றி பேசி வருவது குறித்து கேள்விக்கு...
“மாற்றி மாற்றி பேசும் கட்சிகளுக்கு பேர்தான் பாஜக, அதிமுக” என்று தெரிவித்தார்.