சென்னை வியாசர்பாடி அருகே நேற்று மாலை உயர் அழுத்த மின்தடத்தில் Glitch ஏற்பட்டு புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தது . இதன் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இயக்கப்படாததால் பயணிகள் அவதிக்கு ஆளாகி இருந்தனர் .
தொடர்ந்து நேற்று இரவு தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு புறநகர் மின்சார ரயில்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு பின் இயக்கப்பட்டது. சென்ட்ரலில் காத்திருந்த பயணிகள் முண்டியடித்து ஒரு வழியாக தங்களது இருப்பிடங்களை நோக்கி பயணம் மேற்கொண்டனர் .
இதனிடையே இன்று காலையிலும் இதே வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அரக்கோணம் மற்றும் திருவள்ளூரில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயில்கள் நேர அட்டவணைப்படி இயக்கப்படாததால் பயணிகள் நீண்ட நேரமாக பல்வேறு ரயில் நிலையங்களை காத்துக் கிடந்தனர்.
அலுவல் நேரம் முடிந்து நேற்று இருப்பிடங்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதி அடைந்த நிலையில் இன்று காலையில் இருப்பிடங்களில் இருந்து அலுவல் மற்றும் கல்லூரிகளுக்கு பயணிகள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர் .மின்சார ரயில்கள் நேர அட்டவணைப்படி இயக்கப்படாத பட்சத்தில் முறையான அறிவிப்பு ரயில்வே துறையின் சார்பில் அவ்வப்போது வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்துள்ளது.