முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான மு.க.முத்து, வயது மூப்பின் காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 77.
கலைத்துறையில் பேரார்வம் கொண்ட மு.க. முத்து, 1972 ஆம் ஆண்டில் வெளியான 'பிள்ளையோ பிள்ளை' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு மு.க.முத்து நடித்த 'பூக்காரி', 'அணையா விளக்கு', 'சமையல்காரன் போன்ற படங்கள்', தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.
நடிப்பில் மட்டுமல்லாமல், தனது சொந்தக் குரலில் பாடல்களை பாடி அசத்தியுள்ளார் மு.க. முத்து. பன்முகத்திறமை கொண்ட மு.க. முத்து, வயது மூப்பால் தனது 77-வது வயதில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மு.க.முத்து மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
”தான் பிறந்தபோதே அன்புத் தாயாரை பறிகொடுத்த துயரத்திற்கு உரியவர் மு.க.முத்து. கலைத்துறையில் நாட்டம் கொண்ட அவர் தொடக்க காலத்தில் தி.மு.கழக மேடைகளில் கழக கொள்கை விளக்கப் பாடல்களை பாடியும், தேர்தல் களத்தில் சிறப்பாக பிரச்சாரம் செய்தும் தி.மு.கழக வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்றார். சிறந்த திரைப்பட நடிகராகவும், பாடகராகவும் கலைத்துறையில் முத்திரை பதித்து வந்தார்.”
காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை
”மு.க. முத்து அவர்கள் தமிழ்நாட்டின் கலையுலகிலும் அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி இடம் பதித்தவர். தந்தையின் அரசியல் பாரம்பரியத்தையும், சமூக அக்கறையையும் தொடர்ந்து அவர் எடுத்துச் சென்றதோடு, திரைப்படங்களின் மூலமாகவும், பொதுவாழ்வின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தந்தையின் தமிழ்ப்பற்றையும், அரசியல் உணர்வையும் தனது வாழ்வின் பல கட்டங்களிலும் வெளிப்படுத்தியவர் மு.க. முத்து அவர்கள். பல சிறந்த படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தனித்துவமான குரலில் சிறந்த பாடல்களை பாடியுள்ளார்.”
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா
”முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மூத்த மகன் மு.க.முத்து மறைந்தார் என்ற செய்தி அறிந்து துயரமுற்றேன். தந்தையைப் போலத் திரைத் துறையில் தடம் பதித்தவர். அவரை பிரிந்து வாடும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட உறவினர்களுக்கும் திமுக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
அமைச்சர் தங்கம் தென்னரசு
“முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் மூத்த மகனும், கழகத் தலைவர் தளபதி அவர்களின் சகோதரருமான அண்ணன் மு.க.முத்து அவர்கள் உடன் நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். துயர் நிறைந்த இவ்வேளையில், அண்ணனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”